கம்பரின் கற்பனைக்கண் 

இனிய கவிதைக்குச் சிறந்த கருத்தும் தகுந்த உணர்ச்சியும் ஏற்ற சொல்லும் அழகிய கற்பனையும் நல்ல உறுப்புகள்.
கம்பரின் கற்பனைக்கண் 


இனிய கவிதைக்குச் சிறந்த கருத்தும் தகுந்த உணர்ச்சியும் ஏற்ற சொல்லும் அழகிய கற்பனையும் நல்ல உறுப்புகள். இவற்றுள் கவிஞனுடைய மேதைமையைக் காட்டுவது கற்பனைத் திறமே ஆகும். அஃது உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற அணிகளின் வாயிலாக வெளிப்படுகிறது. 
அணியிலாக் கவிதை பணியிலா (அணிகலன் இல்லாத) வனிதை என்பது முதுமொழி. கற்பனை என்றால் என்ன? ஒரு பொருளில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது. அஃதாவது, ஒரு பொருளில் சாதாரண மனிதனுக்குப் புலப்படாத வேறொரு பொருளைக் கவிஞன் கண்டு காட்டுவதாகும். கவிஞனின் கற்பனைக் கண் இந்தப் பணியைச் செய்கிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கற்பனை தனித்தன்மையோடு திகழ்கிறது. அவர் ஓடுகின்ற ஆற்றில் ஒரு பொருளை மட்டும் காண்பவர் அல்லர்; பல பொருள்களைக் காண்பவர். "சரயு நதி மலையின் தலைப்பகுதியையும், நடுவிடத்தையும், அடிப்பகுதியையும் தழுவிக்கொண்டு நிலையாக ஓரிடத்தில் நில்லாது அங்குள்ள எல்லாப் பொருள்களையும் கவர்ந்து வருவதனால் விலைமகளிர் போன்றிருந்தது; 

மணி, பொன், மயிற்பீலி, யானைத் தந்தம் அகில், சந்தனம் போன்றவற்றைச் சுமந்துகொண்டு வருவதால் வணிகரை ஒத்திருந்தது; ஈக்களும் வண்டுகளும் மொய்க்க எல்லையை மீறிக்கொண்டு எழுச்சியோடு தேக்கெறிந்து கொண்டு (தடையை மீறிக்கொண்டு ஏப்பமிட்டுக்கொண்டு) பெருக்கெடுத்து வருவதால் கள் குடித்தவரைப் போன்று தோன்றுகிறது; 

மலையைத் தூக்கிக்கொண்டு மரங்களை முரித்துக்கொண்டு, இலை முதலிய பொருள்களை எத்திக்கொண்டு இருப்பதால் இராமன் கடலைக் கடந்து இலங்கையை அடைவதற்கு அணைகட்ட முற்பட்ட குரங்குக்கூட்டம் போலக் காட்சியளிக்கிறது' என்கிறார். 

ஒரே ஆறு! அதில் விலைமகளிர் வணிகர், கள்குடியர் குரங்குச் சேனை என்று எத்தனை காட்சிகள்!

மலைஎடுத்து, மரங்கள் பறித்து, மாடு 
இலைமுதற் பொருள் யாவையும் ஏந்தலான் 
அலைகடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவிதீத்தம் அந் நீத்தமே 
(பாடல்: 20)


என்று காப்பியத்தில் பின்னே நிகழும் நிகழ்ச்சியையே ஆற்றில் காண்பது புதுமையாக உள்ளது. இந்த உவமையின் வழியாகக் கம்பர் எல்லோருக்கும் தெரிந்த இராமன் திருக்கதையையே தாம் காப்பியமாக்குவதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார். ஏனெனில் தெரிந்த ஒன்றை எடுத்துக் கூறித் தெரியாததை விளக்குவதுதானே உவமை?
ஒன்றில் மற்றொன்றைக் காண்பது கற்பனை; ஒன்றுக்கொன்று ஒவ்வாத பொருள்களையும் ஓரிடத்தில் காண்பது சிறந்த கற்பனை. அதிலும் நேர்மாறாக இருப்பனவறைக் காண்பது வியப்பளிக்கும் மிகச் சிறந்த கற்பனை. 

துறவியரும், விலைமகளிரும் எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள். காமச்சேறு கடந்தவர் துறவிய; காமக்கடை நடத்துபவர் விலைமகளிர். முரண்பட்ட இவர்களிடையே ஓர் ஒற்றுமையைக் காண்கிறார் கம்பர். 

இராமலக்குவரை அழைத்துக்கொண்டு விசுவாமித்திரன் சித்தாச்சிரமம் நோக்கி நடந்தான். வழியில் கடத்தற்கரிய பாலைநிலம். அஃது ஈரப்பசை அற்று வறண்டு கிடந்தது. அதனைப் பாடும்போது அவ்வொற்றுமையைப் பதிவிட்டுக் கற்போரை வியப்பில் ஆழ்த்துகிறார் கம்பர். 

இருவினையை அழித்து, காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மதில்களைத் தாண்டி, வீடுபேறு என்னும் உயர்பதம் நோக்கிச் செல்லும் துறவியரின் உள்ளத்தைப் போன்றும், பொருளுக்குத் தங்களை விற்கும் பொதுமகளிரின் மனம் போன்றும் ஈரம் இல்லாமல் இருந்தது என்கிறார். 
துறவிக்கு ஈரமின்மை உலகப்பற்றின்மை; விலைமகளிருக்கு ஈரமின்மை தம்மை நாடி வருவோரிடம் அன்பு இன்மை; பாலைக்கு ஈரமின்மை காய்ந்து கிடக்கும் தன்மை.

தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும் 
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன்விலைப் 
பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே 
(353)

இப்போக்கின் உச்சத்தை மற்றோர் இடத்தில் காண முடிகிறது. காப்பியத்தில் கதிரவன் தோற்ற மறைவுகளைப் பாட வேண்டும் என்பது தண்டி இலக்கணம். அதனை நிறைவு செய்யும் வகையிலும் நாளின் கணக்கைக் காட்டும் வகையிலும் ஞாயிற்றைக் குறித்துப் பாடியுள்ளார் 
கம்பர். அவற்றுள் ஓர் இடத்தில் இருசமயக் கடவுளரைக் காண்கிறார்.
இருட்கனி இராமன் மிதிலைத் தெருவில் நடந்து சென்ற போது, கன்னிமாடத்தில் நின்ற பெண்கனிச் சீதையைக் கண்டு நெஞ்சைப் பறிக்கொடுத்தான். அன்று இரவெல்லாம் உறக்கமின்றி அவள் நினைவாகவே இருந்தான். இதைக் காண்கிறார் கம்பர். "கடல் என்னும் மத்தளம் ஒலிக்கிறது; மறைகள் ஓதப்படுகின்றன; கின்னரர்கள் கீதம் இசைக்கிறார்கள்; மக்கள் வழிபாடு செய்கிறார்கள்; தேவர்களும் முனிவர்களும் அந்தணர்களும் கைகூப்பி நிற்கிறார்கள்; வானம் என்னும் அரங்கத்தில் ஒளி வீசும் கதிரவன் என்னும் சிவபிரான் கூத்தாடுகிறான்; அவன் பொற்சடை விரிந்தது போல் கதிர்கள் எங்கும் பரவுகின்றன' என்கிறார்.

எண்ணரிய மறையினொடு  கின்னரர்கள் 
இசைபாட, உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
கரங்குவிப்ப வேலை என்னும்
மண்ணுமணி முழவதிர வானரங்கில்
நடம்புரிவான் இரவி யான
கண்ணுதல் வானவன் கனகச் சடைவிரித்தால் 
எனவிரிந்த கதிர்கள் எல்லாம்  (632)

இந்தக் கற்பனையைக் காணும்போது சேக்கிழாரைப் போன்ற பழுத்த சிவனடி போற்றும் அருளாளர் பாடியது போலத் தோன்றுகிறது. இதனைப் பெரிய புராணத்தில் சூரியன் தோற்றத்தைப் பற்றிப் பாடும் பகுதியில் செருகிவிட்டால் யாராலும் இது கம்பராமாயணப் பாடல் என்று சொல்ல முடியாது. இப்படிச் சிவ
சூரியனைத் தரிசிப்பித்த கம்பர் அடுத்துச் சூரிய நாராயணனைக் காட்டி மகிழ்கிறார். 

இராமன் திருமணத்தைக் காணப் புறப்பட்ட அயோத்தி மக்கள், முதல் நாள் இரவு சந்திரசைலம் என்னும் மலையில் தங்கியுள்ளனர். பொழுது விடிந்ததும் மக்கள் சோணையாற்றை நோக்கிச் சென்றனர். செங்கதிரின் தோற்றம் சிங்கப்பிரான் தோற்றம்போல் அமைகிறது. "இருட்டு நிற இரணியன்; அவனுக்கு ஒளிரும் விண்மீன்களாகிய பற்கள்; அவன்மீது சீற்றங்கொண்டு உதயமலை என்னும் தூணிலிருந்து கொடிய கதிர்கள் ஆகிய ஆயிரம் கைகளை ஓங்கிக்கொண்டு நரசிங்கம் தோன்றியது போல விளங்கும் கதிரவன் தோன்றினான்' என்கிறார்.

மீனுடை எயிற்றுக் கங்குல்
கனகனை வெகுண்டு வெய்ய 
கானுடைக் கதிர்கள் என்னும்
ஆயிரம் கரங்கள் ஒச்சித் 
தானுடை உதயம்  என்னும்
தமனியத் தறியுள்  நின்று
மானுட மடங்கல்  என்னத் 
தோன்றினன் வயங்கு வெய்யோன்  (890)

இப்படிச் சமயம் கடந்து முருகன், பிரமன் போன்றவர்களை உவமையாகக் காட்டும் போக்குத் திருத்தக்க தேவர் போன்றோரிடம் காணப்படுகிறது. ஆனால், கம்பரிடம் காணப்படும் முற்றும் வேறுபட்ட இரு பொருள்களை ஓரிடத்தில் காணும் போக்கு வியப்புக்குரியது. 

ஆதித்தன் தோற்றத்தில் ஆடல்வல்லானையும் ஆளரியையும் தரிசித்துக் கற்பாரையும் தரிசிக்கச் செய்யும் கம்பரின் கற்பனைத் திறம் போற்றுதற்குரியது. இது போன்ற இடங்கள், சும்பர் சமயக் காழ்ப்பு இல்லாமல் திருமாலைத் துதிப்பவராகவும் சிவனை மதிப்பவராகவும் இருந்தார் என்பதற்குச் சான்றுகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com