குயிலின் நற்றாயும் செவிலித்தாயும்

கேட்போர்க்குக் குரலினால் இன்பத்தைத் தருகின்ற பறவையான குயிலுக்கு கோகிலம், காளகண்டம் என்ற வேறு பெயர்கள் உண்டு.
குயிலின் நற்றாயும் செவிலித்தாயும்
Published on
Updated on
2 min read

கேட்போர்க்குக் குரலினால் இன்பத்தைத் தருகின்ற பறவையான குயிலுக்கு கோகிலம், காளகண்டம் என்ற வேறு பெயர்கள் உண்டு. அதன் கண்கள் செந்நிறமாக உடையதைச் செங்கட் குயில் என்று திணைமொழி ஐம்பது (14:2)  கூறும். மூக்கு மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதனைக் குயில்வா யன்ன கூர்முகை யதிரல் (புறநானூறு 269:1) என்று காட்டு மல்லிகையினுடைய மொட்டிற்கு உவமையாகக் கூறியிருத்தலைக் காணலாம்.

ஆண் குயிலுக்கும் பெண் குயிலுக்கும் சிறகின் நிறத்தால் வேறுபாடு உண்டு. ஆண் குயிலானது  நீலநிற மின்னலுடன் கருமை நிறத்தில் இருப்பதை மணிநிற விருங்குயில் (அகநானூறு, 25:6) என்பதோடு அந்நிறம் பொன்னை உரைத்துப் பார்க்கும்பொழுது பொடி விளங்குகின்ற கட்டளைக் கல்லோடு ஒத்திருப்பதை மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின், உரைதிகழ் கட்டளை கடுப்ப (குறுந்தொகை, 192:3,4) என்று கூறியவற்றால் அறியலாம். பெண் குயிலானது முத்துப் போன்ற வெண்புள்ளிகளுடன் கருமை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.      

குயிலானது மரங்கள் அடர்ந்த காட்டில் மிகுதியாக இருப்பதால் கான்குயில் (காஞ்சிப் புராணம் 165:1) என்றனர். அது இளவேனில் காலத்தில் "குக்கூ குக்கூ' என்று கூவுதலுடன் மாமரத்தின் துளிரை விரும்பி உண்ணும். இதனைப் 
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயில் 
என்கிறது தேவாரம் (1:652).

அத்தகைய குயில் கூவுதலை ஆலுதல், நுவலுதல், விளித்தல், பயிற்றுதல், பயிர்தல், அகவுதல் என்றெல்லாம் இலக்கியங்கள் விரித்துக் கூறும். குயில் ஒரு முறை குரல் எழுப்பி மறுமுறை இடைவெளி விட்டு ஒலிக்கும். 

அவ்வொலி இசை பாடுவது போல் இருக்கும் என்பதைப் பண்பார் குயில் எனச் சாமிநாதப்பள்ளு (27:4) எடுத்துரைக்கும். அந்த இனிமையான ஓசையைப் பெண்ணின் குரலுக்கு உவமையாகக் குயின்மொழி மடவார்  (காஞ்சிப் புராணம், 2139:3) எனக் கூறுவதுமுண்டு.  
ஆண் குயில் இளவேனில் காலத்தில் மிகுதியாகக் கூவுதல் தன் இணையைத் தழுவுவதற்காகவே. இதனைத் தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில் என்று சீவகசிந்தாமணி (648:4) கூறுதலால் அறிக. அக்குயில் ஓயாது கூவியவுடன் அதற்குப் பெண் குயிலும் எதிர் குரல் எழுப்பும். இதனைச் சேவலொடு கெழீஇய செங்கணிருங்குயில், புகன்றெதி ராலும் (118:3,4) என்கிறது நற்றிணை. 
இவ்வாறு நாள்தோறும் ஆணும் பெண்ணுமாகக் குயில்கள் மாறி மாறி முறையாகக் கூவுதலை ஊழ்கொள்பு கூவ என அகநானூறு (25:8) உணர்த்தும். அந்த நேரத்தில் குயில்கள் கூவி ஆரவாரம் செய்தல், கெüவை (ஐங்குறுநூறு, 369:5), பூசல் (அகநானூறு, 317:16) என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. 
இனப்பெருக்கத்திற்குப் பின்பு குயில் முட்டையிட்டு அடைகாக்க கூடு கட்டுவதில்லை. அதனால் தன்னைப் போல ஒத்திருக்கும் காக்கையின் கூட்டைத் தேடும். சில நேரங்களில் காக்கையின் கூடு கிடைக்காத பொழுது தவிட்டுக் குருவி முதலான பறவைகளின் கூட்டினை நாடும்.  
பெண் குயில் காக்கையின் கூட்டில் முட்டை இடுவதற்கு ஆண் குயில் பெரிதும் துணை புரியும். ஆண் குயில் காக்கைக்குப் போக்குக் காட்டிக் கூட்டிலிருந்து அதனை எட்டாத் தூரத்திற்குக் கொண்டு செல்லும். 
கான்குயில்கள் குரைநீர்ப் புன்னை 
தொறும்பொதுளுங் கருங்கொடிதன் குடம்பையிற்போய்க் 
கருவுயிர்த்துச் சுலவி மீண்டு
நறும்பிரச மலர்க்காஞ்சிச் சினையேறி
ஒளியிருந்து நாடிக் காலம்  (காஞ்சிப் புராணம், 168:13)
என்னும் பாடலடிகளில் காக்கை இல்லாத நேரத்தில் பெண் குயிலானது அதன் கூட்டில் முட்டையை இடுவதுடன் தன் குஞ்சைக் காக்கை அடைகாத்துப் பொறிக்கும் வரை கண்காணித்துக் கொண்டிருக்கும் என்று கூறுவதைக் காணலாம்.
குயில் இட்ட முட்டை சிறியதாக இருந்தாலும் காக்கை ஐயங் கொள்ளாது. அதன் குஞ்சைக் காக்கை பொறிப்பதோடு அதற்கு இரை ஊட்டி வளப்பதை,   
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது
என்று திருமந்திரம் (488:1,2) கூறுகிறது.
குயில் குஞ்சும் காக்கையைத் தன் தாயாகவே நினைத்துக் கத்தி இரையைப் பெறும். அக்குஞ்சு வளர்ந்து பறக்கும் தறுவாயில் தனக்கே உரிய குரலை வெளிப்படுத்தும். அப்பொழுது காக்கை அதனை விரட்டிவிடும்.  
வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் 
வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாள் 
(சீவகசிந்தாமணி, 1661:1)
என்னும் பாடலடி காக்கையிடமிருந்து பிரிந்த குயில் குஞ்சைப் பெற்ற தாயான (நற்றாய்) காக்கையும் மறந்து விட்டாள்; வளர்த்த தாயான (செவிலித்தாய்) குயிலும் துரத்திவிட்டாள் என்று கூறுகிறது. 
அத்தகைய குயில் குஞ்சு நற்றாயிடம் செல்ல முடியாமலும் செவிலித்தாயிடம் இருக்க முடியாமலும் உள்ள சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துத் தன்னைக் காத்துக் கொள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் மறைந்து வாழத் தொடங்கி விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com