தண்டனை தரும் சதுக்கப்பூதம்

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் நன்னெறிகள் பல பேசப்பட்டுள்ளன.  
தண்டனை தரும் சதுக்கப்பூதம்

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் நன்னெறிகள் பல பேசப்பட்டுள்ளன.

ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.

வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் பெரிய பூதத்தின் கோயில் ஒன்று இருந்தது. சதுக்கத்தில் அமைந்த அப்பூதத்தின் கோயில் சதுக்கப்பூதம் எழுந்தருளிய கோயில் எனப்பெயர் பெற்றது.

அப்பூதமானது பொய் சொல்பவர்களையும் புறங்கூறுவோரையும் பிறர் பொருள்களைக் கவர்பவரையும் நன்னெறி தவறியவர்களையும் அறநெறி தவறும் அரசர்களையும் தன் கைப்பாசத்தால் பிணித்துப் புடைத்துக் கொல்லும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

 தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறன்மனை நயப்போர்
பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர்.......
என்பது பாடல்.  

கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து அந்த குறைபாடுகள் நீங்க சுற்றி வந்து வழிபட பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம் ஒன்று புகாரில் உள்ளது என்கிறது சிலம்பு.

 கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்

பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துபிடித்தவர்களும், நஞ்சு உண்டு அவதிப்படுவோரும், பாம்பு தீண்டியவர்களும், பேய் பிடித்தவர்களும் சுற்றி வர அவர்களின் துயரத்தைப்   போக்கும் நெடுங்கல் நின்ற மன்றம் அந்நகரில் உள்ளது. 

அரசன் நீதி தவறும் போதும், நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும் போதும் அந்த தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றமும் புகாரில் இருந்தது.

இவ்வாறாக உடல் குறைபாடுடையவர்கள் நலம் பெற நல்வழி சொல்லும் பல்வகை மன்றங்கள் புகார் நகரில் இருந்ததை சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com