
மனித வாழ்வில் மிகவும் கீழானது, பிச்சை எடுத்துண்ணும் நிலை என்பதாம். உயிர் வாழ வேறு வழி எதுவுமின்றி, பிச்சை எடுத்துண்ணும் நிலையினும் கீழான நிலை வேறில்லை.
பிணிகள் எல்லாவற்றினும் பெரும் பிணியாக, பசிப்பிணியை எண்ணினர் நம் தமிழ்ச் சான்றோர். வயிற்றுக்குச் சோறிட்டுப் பசித்தீ அணைத்தவனை, பசிப்பிணி மருத்துவன் என்றனர்.
பசி என்பது, மனிதனை தன்னிலை இழக்கச் செய்யும். பசி வரப் பத்தும் பறந்துபோம் என்றனர். எனவேதான், இரந்துண்ணும் நிலை கண்டு அறச்சீற்றம் கொள்கிறார் வள்ளுவர்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான் (1062)
என்று பாடுகிறார்.
தன் வயிற்றுக்காக மட்டுமின்றி, வேறெந்த உயிரினத்துக்காகவும் பிறரிடம் கையேந்தி, வாய்விட்டுக் கேட்பதுபோல நாவிற்கு இழிவு தருவது வேறொன்றுமில்லை என்கிறார் வள்ளுவர்.
தண்ணீரின்றித் தவிக்கும் பசுவிற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என இரந்து கேட்கும்போதும், அவ்வாறு யாசிப்பது போல், ஒருவரது நாவிற்கு இழிவைத் தருவது வேறொன்றில்லை, என்ற பொருளில் கூறுகிறார்
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் (1066)
இவ்வாறு, இரத்தலென்னும் நிலை மிகவும் கீழானது என்று கூறும் வள்ளுவப் பெருந்தகை , இரத்தலினும் துன்பம் தரும் செயல் வேறொன்றும் உண்டா என நம் மனதில் எழும் வினாவிற்கு விடை
பகர்கின்றார்.
நிறைய சேர்த்து வைத்துக் கொண்டு, பிறர்க்குக் கிஞ்சித்தும் ஈயாதுத்தானே தன்னந்தனியாக உண்டு மகிழ்கின்ற செயல் பிறரிடம் சென்று யாசிப்பதைவிட துன்பம் தருவது ஆகும், என்கிறார்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (229)
இவ்வாறு இரத்தலினும் இழிவைச் சொல்லும் வள்ளுவர், இரந்தாவது பெற வேண்டும் என்றும் சொல்லுகிறார், குறள் வழியாக நமக்கு ஆச்சரியம் தருகிறார்.
இரந்தாவது யாசித்தாவது ,பெற வேண்டியது என ஏதும் உள்ளதா?
இதோ ஒரு போர்க்களக் காட்சி ஒன்று நம் கண் முன்னே விரிகிறது: தம் நாட்டைக் காக்கவும், தம் மன்னனுக்கு வெற்றியைத் தரவும், இரு மருங்கிலும் போர் வீரர்கள், தம் உயிரைத் துச்சமென எண்ணிப் போரிடுகின்றனர்.
வீரர்கள் மட்டுமல்ல,புரவிகள், களிறுகள் இவற்றின் புண்ணுமிழ் குருதி வெள்ளமெனப் பாய, அவ்வெள்ளத்தில் வீரர்கள் இழந்த அங்கங்கள், யானைகளின் துதிக்கைகள், புரவிகளின் வெட்டுண்டக் கால்கள் என மிதந்து செல்கின்றன; காற்றில் பிண வாடை, செவிகளில் மரண ஓலம். பிணம் தின்ன வட்டமிடும் வல்லூறுகள் வானத்தில்; பெருந்தீனி கிடைத்த மட்டில்லா மகிழ்ச்சியில் நரிகள்.
ஆதவன் மறையும் நேரம் வெற்றி முழக்கம் ஒரு திசையில்... ஆயினும் அங்கே பரபரப்பு. மன்னன் மீது வீசப்பட்ட வேலை, எதிர்கொண்டு தன் மார்பில் வாங்கிய வீரன் ஒருவன், விழுந்து கிடக்கிறான், மரணத்தின் வாயிலில்.
துடிதுடித்த மன்னன், தன் மடியில் அவனைக் கிடத்தி வைத்திருக்கிறான். மரணத்தை தழுவும் மாவீரன் முகத்திலோ மரணத்தின் அச்சம் கிஞ்சித்தும் இல்லை, மாறாக, பெருமகிழ்ச்சி.
'குடிமக்களுக்கு நல்லாட்சி தரும் என் மன்னன் உயிர்காக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததே, வெறும் போர் வீரனாக இருந்த என்னைப் பயிற்றுவித்து, படை நடத்தும் தளபதி ஆக்கி, எனக்குப் பெருமை சேர்த்த மன்னன் உயிர்காக்கும் வாய்ப்பு கிட்டியதே', என மகிழ்கிறான் பெருமிதம் கொண்டு.
அவனைத் தன் மடியில் கிடத்தி இருந்த மன்னன் முகத்திலோ, வெற்றி வாகை சூடிய மகிழ்ச்சி இல்லை, மாறாக, கண்கள் அருவியாகக் கண்ணீரைக் கொட்டின.
"எனக்காகத் தன் இன்னுயிர் தர முன் வந்த இவ்வீரனுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்; எத்தனைப் பிறவி எடுத்தாலும் இக்கடன் தீர்க்க இயலுமா' , எனக் கண்ணீர் சொரிகின்றான்.
மன்னன் கண்களில் வழியும் நீர் கண்டு, அவ்வீரன், "என் மன்னன் கண்கள் நீர் சிந்த, எனக்குக் கிடைத்த இந்த நல்மரணத்துக்காக, இஃதொரு பிறவி மட்டுமல்லாது, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இவர்க்கே யான் ஆட்செய்வேன்' என எண்ணும்போதே அவன் இன்னுயிர், முட்டையை ஒதுக்கித் தள்ளிவிட்டு அதிலிருந்து பறந்து செல்லும் சிறு பறவை போல, கூடு விட்டுப் பிரிகிறது.
இக்காட்சியைக் கண்டதொரு வீரன், 'இத்தகையதொரு மரணம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? மன்னன் உயிர் காத்து, அவன் கண்கள் நீர் சொரிய, அவன் மடியிலே தன்னுயிர் நீக்கும் பெரும் பேற்றினை, கூற்றுவனை யாசித்தாவது பெற வேண்டும்' என எண்ணுகிறான். அவன் உள்ளக்கிடக்கையை, வள்ளுவர் குறள் வாயிலாகத் தருகிறார்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து ( 780)
இவ்வாறு, இரத்தலின் இழிவு, இரத்தலினும் இழிவு, இரந்தாவது பெற வேண்டியது ஆகியனவற்றை தன் குறட்பாக்களில் நமக்குத் தருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.