கம்பனின் வியத்தகு தமிழ்க்காதல், காப்பியத்தின் பல இடங்களில் காணக் கிடைக்கிறது. எதிர்பாராத இடங்களில் இந்தக் காதல் வெளிப்பட்டுவிடுகிறது. சீதையைத் தேடி தென்திசைக்கு அனுமனையும் பிறரையும் அனுப்பினான் சுக்கிரீவன். செல்லும் வழியில் ஒரு பாலைவனத்தைக் கடக்க வேண்டும்.
அதன் வெப்பத்தை வானரக் கூட்டத்தால் தாங்க முடியவில்லை. பாலைவன மணல் வெப்பத்தில் கொதித்தது. கால் வைக்க முடியாமல் துள்ளினார்கள். அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தின் சூட்டில் பொரி எப்படித் துள்ளுமோ அப்படித் துள்ளினார்களாம். உடலில் இருந்து உயிர் பிதுங்கியதாம்! ஒரு குகை கண்ணில் தெரிந்தது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க அந்தக் குகைக்குள் ஓடினார்கள்.
அங்கு வெப்பம் இல்லை; ஆனால், உலகத்தின் எல்லா இடங்களிலும் இருக்கும் இருட்டும் ஒன்றாகக் கூடி அந்தக் குகைக்குள் தங்கியிருந்ததுபோல அப்படி ஓர் இருள். அனுமன் முதலில் கைகளால் தடவியபடி செல்ல, அவன் வாலைப் பிடித்தபடி வானரங்கள் பின்னால் சென்றன. கொஞ்சமும் எதிர்பாராமல், சற்று தூரத்தில் ஓர் அழகிய நகரம் இருந்தது.
குகைக்குள் இப்படி ஒரு நகரா என்று வியக்கும் வண்ணம், அந்த இடமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பொன்னும் மணிகளும் பதித்த கட்டடங்கள் இருந்தன. வாசனைத் திரவியங்கள் கொட்டிக் கிடந்தன. ஆனால், மனிதர்கள் இருப்பதற்கான எந்தத் தடயமும் அங்கு இல்லை. ஒருவேளை, தங்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க, இராவணன் செய்த மாயமோ என்று எல்லோரும் எண்ணினர்.
அப்போது, உணவு வகைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அமிழ்தத்தை ஒத்த சோறு; காய்கறிகளால் அமைந்த பல்வித உணவு வகைகள், தேன், குளிர்ச்சியான மதுவகைகள், இனிய பழங்களின் குவியல், இவற்றைத் தவிர பிற உணவுவகைகளும் அங்கு இருந்தன. கம்பன் பாடலைப் பார்க்கலாம்.
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்,
தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும்,
இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பது
அந்த உணவு வகைகளில் இருந்தது, தமிழ் போன்று இனிக்கும் தேன் என்கிறான் கம்பன். தேனின் சுவை அனைவரும் அறிந்தது. எனவே, தேன் தமிழ் என்றும், தேன் போன்று இனிக்கும் தமிழ் என்றும் குறிப்பிடப்படுவது, அனைவரும் அறிந்தது. ஆனால், கம்பன் மாற்றினான். தேனின் சுவை, தமிழ் இனிப்பதைப்போல் இனிய சுவையாக இருக்கும் என்று, தமிழை உயர்த்திப் பிடிக்கிறான்.
பேருருவம் எடுத்த அனுமன், அந்தக் குகையின் மேல் பகுதியை உடைத்து வீச, அதன் வழியாக அனைவரும் குகையில் இருந்து வெளியேறினார்கள். சுக்கிரீவன் சொல்லி அனுப்பிய வழியிலேயே பயணிக்கிறார்கள். பல்வேறு மலைகளை, நாடுகளைக் கடந்து தென்தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டினை அடைந்தார்கள். 'இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார்' என்று எழுதிய கம்பன், தமிழ்நாட்டின் தென் பகுதியாகிய பாண்டிய நாட்டின் பெருமையைப் பேசுகிறான்.
அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும், முத்தமிழும் தந்து முற்றலால்?
'தமிழ் நாட்டின் தென் பகுதியில் அமைந்த பாண்டிய நாட்டினை, சொர்க்கத்துக்கு நிகரானது என்று ஒப்பிட்டாலும் சரியாக இருக்காது' என்று சொன்ன கம்பன், தனது இந்த எண்ணத்துக்கு காரணம், ஏழு உலகங்களிலும் இருப்பவர்கள் வேறு எவற்றைவிடவும் புகழ்கின்ற இரண்டு இங்கே இருப்பதே என்கிறான். ஒன்று, முத்து. மற்றொன்று முத்தமிழ். 'ஆழ் கடலில் மூழ்கி எடுக்கும் முத்தினையும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் எல்லா உலகங்களுக்கும் வாரி வழங்கியிருக்கிறது தமிழ்நாடு' என்று கம்பன் நெஞ்சை நிமிர்த்தும் இடம் இது. முத்துக்குளித்தலும், முத்தமிழும் செழித்திருந்தன என்பதற்கான வரலாற்றுப் பதிவு இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

மாற்றமல்ல, வாய்ப்பு..!

அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?
கென் குறித்து தனுஷ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


