நின்றவர் யார்?

காதல் மலர்ந்த கணம்: இராமன் சீதையை முதற்கண் கண்ட மாயம்
நின்றவர் யார்?

முதல்நூலான வான்மீகத்தில் இராமனுக்கும் சீதைக்கும் நடந்த திருமணம் காதல் திருமணம் அன்று.

அஃது ஆசுர மணம் ஆகும். அறநிலை (பிரமம்) ஒப்பு (பிரசாபதியம்) பொருள்கோள் (ஆரிடம்) தெய்வம் (தெய்வம்) யாழோர் கூட்டம் (காந்தருவம்) அரும்பொருள் (ஆசுரம்) இராக்கதம் (ராக்ஷசம்) பேய் நிலை (பைசாசம்) என்னும் எண்வகைத் திருமணங்களில் ஒன்று அது.

ஆசுர மணம் என்பது காளையை அடக்குதல், வில்லை வளைத்தல், குறித்த இடத்தில் உள்ள பொருள் மீது குறி தவறாமல் அம்பை எய்தல் போன்ற போட்டியில் வென்றவனுக்குப் பெண்ணை மணம் முடித்தல் ஆகும்.

வான்மீகத்தில் திருமணத்திற்கு முன் இராமனும் சீதையும் ஒருவர் மற்றொருவரைக் கண்டு காதல் கொள்ளவில்லை. இராமன் சீதையை மணவறையில்தான் காண்கிறான். அங்குத் திருமணத்திற்குப் பின் இருவர் உள்ளத்திலும் காதல் மலர்கிறது. கம்பரில், திருமணத்திற்கு முன்பே உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்து விடுகிறது. இங்குக் களவுக்

காதல் கற்பாக மாறும் நிகழ்வாகத் திருமணம் அமைகிறது.

கம்பர் காப்பியத்தில் திருமணத்திற்கு முன் இராமனும் சீதையும் காதலால் தவிக்கின்றனர். இராமனைக் கண்ட சீதை காதல் நோயால் தவிக்கிறாள். அந்நோய் கட்டுக்கடங்காமல் வளர்ந்து பெருகியது. நிறை என்னும் அங்குசத்திற்கு அவள் மனம் என்னும் யானை அடங்காமல் மீறிச் செல்கிறது. அவன் தன்னைப் பார்த்துச் செய்த முறுவல் தன்னை முழுமையாகக் கவர்ந்து விட்டது என்கிறாள். மதயானை போல் நடந்து சென்ற நடையழகு தன் உள்ளத்தில் நிறைந்திருப்பதாகக் கூறி உருகுகிறாள். மன்மதன் எய்த புண்ணில் தென்றல் நுழையச் சோர்கிறாள்.

அவளுக்கு மாலைப் பொழுதின் வடிவம் கூற்றின் வடிவம் போல் தோற்றுகிறது. நிலவு அவளை வருத்துகிறது. அதனைப் பார்த்து, இரவு என்னும் கருநெருப்பில் தோன்றிய வெண் நெருப்பே என்று காய்கிறாள். தாதியர் அவளை மலர்ப் படுக்கையில் கிடத்துகின்றனர். அதில் கிடந்த பூக்கள் கூம்பிச் சாம்பி வாடுகின்றன. அவளும் அப்பூக்களைப் போல் வாடுகிறாள்.

இருட்கனி இராமன் ஓர் அறையில் தங்கியிருக்கிறான். தான் கண்ட பெண்கனியையே நினைந்தவாறு இரவு நெடுநேரம் உறங்காமல் ஏங்குகிறான். கங்குலும் திங்களும் தனிமையும் தானும் அத்தையலுமாக இரவைக் கழிக்கிறான். பாற்கடலில் துயிலாமல் பருவரற்கடலில் துயில்கிறான். கதிரவன் தோன்றித் தன் இளங்கதிர்க் கையால் அடிவருட எழுகிறான்.

இப்படி இராமனும் சீதையும் காதல் நோயால் தவிப்பதற்கு அடியாய் அமைந்தது எது? கன்னிமாடத்தில் இருந்த சீதையின் கண்ணும் இராமனின் கண்ணும் சந்தித்ததே ஆகும்.

அது பங்குனி மாத மாலைப் பொழுது. சூரியன் இன்னும் மறையவில்லை. இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும் மிதிலை வீதியில் நடந்து சென்றனர். அங்குள்ள நடன அரங்கினைக் கண்டனர். ஊஞ்சலில் ஆடும் பெண்களைப் பார்த்தனர். காவிரி போன்ற கடைத்தெருவைக் கண்டு மகிழ்ந்தனர்.

பெண்கள் மீட்டிய தேன் போன்ற வீணை இசையைச் செவிமடுத்தவாறு நடந்தனர். மலர் கொய்யும் மகளிரின் நடைக்கு அன்னப்பறவைத் தோற்றுப் போவது கண்டு வண்டுகள் ஆரவாரிக்கும் பொழிலைக் கண்டனர். இவ்வாறு நடந்தவர்கள் அரண்மனையைச் சுற்றியுள்ள மதிலையும் அகழியையும் கண்டனர்.

அருகே கன்னிமாடம் அமைந்திருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் அன்னம் ஆடும் முன்துறை. அங்கே காட்சிக்கு இனிய பொன்னொளி, உயிர்த்து இன்புறும் பூவின் மணம், நாவிற்கு இனிய தேனின் தீஞ்சுவை, செவிக்கு இனிய செஞ்சொற்களால் ஆகிய கவிதை தரும் சுகம் இவை ஒரு வடிவு கொண்டது போன்ற சீதை இருந்தாள்.

இந்தச் சீதையை மூவரும் கண்டு நின்றனரா? அல்லது அந்த முன் துறையைக் கண்டவாறு சீதை நின்றாளா?

இந்தச் சூழலைத் தெரிவிக்கும் பாடல் மர்ரே பதிப்பில்,

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவே போல்

தென்உண் தேனின் தீஞ்சுவை, செஞ்சொற் கவிஇன்பம்

கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடும் முன்துறை கண்டு அங்கு

அயல் நின்றாள்

என்று அமைந்துள்ளது.

ஆனால் வை.மு.கோ. பதிப்பு, சென்னைக் கம்பன்

கழகப் பதிப்பு முதலியவற்றில் இறுதி அடி,

அன்னம் ஆடும் முன்துறை கண்டு அங்கு அயல் நின்றார்

என்று காணப்படுகிறது .

"அயல் நின்றார்' என்னும் பாடத்தைக் கொள்ளும் போது சீதையைக் கன்னி மாடத்தின் மேல், அன்னம் உலவும் முன் துறையில் விசுவாமித்திரன், இராமன், இலக்குவன் ஆகிய மூவரும் கண்டு அருகில் நின்றனர் என்று பொருள்படுகிறது. இதன்படி, சீதையை இராமனும் கண்டான் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்பொழுது இருவரும் காதல் கொண்டதாகக் கூறப்படவில்லையே, ஏன்?அவனை அவள் அழகு ஈர்க்க வில்லையா? அல்லது அவள் அவனைப் பார்க்கவில்லையா? என்னும் வினாக்கள் எழுகின்றன.

அயல் நின்றவர் மூவரும் கண்ட பின் இராமன் மட்டும் மீண்டும் சீதையை நோக்க அவளும் நோக்கினாள் என்று ஆகிறது. இதனால் முதலில் கண்டபோது காதல் உண்டாக வில்லை என்றும் இரண்டாம் முறை கண்ட போதுதான் காதல் உண்டாயிற்று என்றும் ஆகும். அப்படி அமைவது சிறப்பன்று. மூவரும் மிதிலையில் நடந்து வருவது குறித்த புனைந்துரை "அம்பொன் கோயில் பொன்மதில் சுற்றும், அகழ் கண்டார்' என்பதனோடு நிறைவுறுகிறது.

அடுத்த பாட்டாகிய, "பொன்னின் சோதி' தொடங்கிச் சீதையின் பேரழகு போற்றியுரைக்கப்படுகிறது மூவர் கண்ட காட்சிகளைத் தெரிவிக்கும் பாடல்கள் எல்லாம் தொடர்ந்து "கண்டார்' என்று பலர்பால் வினைமுற்றாக முடிவதால் அடுத்து வரும் இப்பாட்டும் நின்றார் என்று பலர் பாலில் முடிவதாகக் கருதியுள்ளனர். ஆதலின் "கண்டங்கு அயல் நின்றார்' என்னும் பாடம் சிறவாது.

மர்ரே பதிப்பில் ஈற்றடி,

அன்னம் ஆடும் முன்துறை கண்டு அங்கு

அயல் நின்றாள்

என்று உள்ளது.

இப்பாடத்தின்படி சீதை கன்னிமாடத்தின் மேல் அன்னம் உலவும் முற்பகுதியைக் கண்டவாறு நின்று கொண்டிருந்தாள் என்று பொருள்படும். இத்தன்மையோடு நின்றவளை இராமன் நோக்கினான் என்றும் அவளும் அவனை நோக்கினாள் என்றும் தெரிவிக்கிறார் கம்பர்.

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

இதில் வரும் நின்றுழி என்பது முன்னே இடம் பெற்றுள்ள அயல் நின்றாள் என்பதனோடு இயைந்து பொருத்தமாக அமைகிறது. இதனால் முதற் காட்சியிலேயே காதல் மலர்ந்தது என்று அமைகிறது. ஆதலின் அயல் நின்றாள் என்பதே சரியான பாடம் என்பது தெளிவாகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பின்னே ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அனுமனை இராமன் சீதையைத் தேடிச் செல்ல விட்ட போது இந்த நிகழ்ச்சியை ஓர் அடையாளமாகக் கூறியுள்ளான். "முன்பு முனிவனோடு மிதிலையில் சனகன் செய்த வேள்வியைக் காண்பதற்கு யான் செல்லும்போது அங்கே அன்னம் ஆடும் முன்துறைக்கு அருகு நின்ற சீதையைக் கண்டேன்; அதனை ஓர் அடையாளமாகக் கூறுவாய்' என்கிறான்.

முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலைவாய்

சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல

அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அக்

கன்னிமாடத்திடைக் கண்டதும் கழறுவாய்

என்பது இராமன் கூற்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com