கம்பனின் தமிழமுதம் - 9: பைய... பைய...!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், இந்தச் சொல் நிறைய பயன்படுத்தப்படும். ஓடி வருகிற சிறுவனிடம் 'ஏலே..பைய வாலே...' என்பார்கள். 'அடேய், மெல்ல நடந்து வா' என்று பொருள்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், இந்தச் சொல் நிறைய பயன்படுத்தப்படும். ஓடி வருகிற சிறுவனிடம் 'ஏலே..பைய வாலே...' என்பார்கள். 'அடேய், மெல்ல நடந்து வா' என்று பொருள்.

'கவர்ன்மென்ட் ஆபீஸ்ல வேல பையல்லா நடக்கு...' என்பார்கள். 'அரசு அலுவலகங்களில் வேலை மெல்ல நடக்கிறது' என்பது பொருள்.

'மெல்ல' என்னும் சொல், பேச்சு வழக்கில் 'மெதுவாக' என்று புழக்கத்தில் இருக்கிறது. 'பைய' என்னும் சொல்லை, 'மெல்ல' என்னும் பொருளில் வள்ளுவன் பயன்படுத்துகிறான்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்க

பசையினாள் பைய நகும்

என்பது குறள். 'நான் அவளைப் பார்க்கும்போது, மெல்ல சிரிக்கிறாள். அந்த மெல்லிய சிரிப்பில், என் மீது அவள் கொண்ட அன்புக்கான குறிப்பு தெரிகிறது' என்பது பொருள்.

'பைய' என்னும் சொல்லை, 'மெல்ல' அல்லது 'மெதுவாக' என்னும் பொருளில் கம்பனும் பயன்படுத்தியிருக்கிறான்.

கானகத்துள் நுழைந்த மூவரும், முனிவர்களுடன் பத்து ஆண்டுகள் அமைதியாகத் தங்கியிருந்தார்கள்.

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு,

அவண்

மைந்தர், தீது இலர் வைகினர்; மாதவர்

சிந்தை எண்ணி, 'அகத்தியற் சேர்க' என,

இந்து நல்நுதல் தன்னோடு ஏகினார்

என்று ஒரே பாடலில் பத்து ஆண்டுகளைத் தள்ளிவிடுகிறான் கம்பன்.

இப்போது, அகத்தியரைக் காண வேண்டும் என்னும் எண்ணம். சுதீக்கணன் என்னும் முனிவருடன் தங்கிவிட்டுப் பிறகு அகத்தியர் குடிலுக்குச் செல்ல வேண்டும்.

சுதீக்கணன் ஆசிரமத்தை நோக்கிச் செல்லும் காட்டு வழியில் சிறு மலைகளையும் மூங்கில் காடுகளையும் கடக்க வேண்டியிருந்தது. நடந்து செல்லும் பாதையும் குறுகலாக இருந்தது. பத்து ஆண்டுகள் ஒரே இடத்தில் தங்கியிருந்ததாலோ என்னவோ, அந்த வழியில் செல்லும்போது மூவருக்கும் நடையில் வேகமில்லை. மெல்ல மெல்ல நடக்கிறார்கள். இதைச் சொல்லும் கம்பன் பாடல்:

விட ரகங்களும், வேய் செறி கானமும்,

படரும் சில்நெறி பைப்பைய நீங்கினார்;

சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்

இடர் இலான் உறை சோலை சென்று,

எய்தினார்.

மிக மெதுவாக மூவரும் நடந்தார்கள் என்பதை 'பைப்பைய நீங்கினார்' என்று குறிக்கிறான் கம்பன்.

'பைய' என்னும் சொல்லைக் கம்பன் மற்றோர் இடத்திலும் பொருத்தமாகப் பயன்படுத்துகிறான். சீதையைப் பிரிந்து கானகத்தில் தனித்து இருக்கிறார்கள், இராமனும் இலக்குவனும். அது மழைக்காலம். தம்பியுடன் தனித்திருந்த இராமனுக்கு, மனதில் பலவித எண்ணங்களும் கவலைகளும் முட்டிமோதிக்கொண்டே இருந்தன. எந்த நேரமும் கவலையில் மூழ்கி இருந்தான்.

உடன் இருந்த தம்பி இலக்குவனுக்கு, அண்ணனின் நிலை மிகவும் கவலை அளித்தது. ஆறுதல் சொற்கள் சொல்வதைத் தவிர இலக்குவனால் என்னதான் செய்ய முடியும்?

'மழைக்காலம் முடியும் நிலைக்கு வந்துவிட்டது. சீதையின் துயர் நீங்கும் காலம் மெல்ல நெருங்குகிறது. இனி நீ வருத்தத்தை நீக்க வேண்டும்' என்றான் இலக்குவன்.

பைந்தொடிக்கு இடர்களைப் பருவம்

பையவே

வந்து அடுத்துளது; இனி வருத்தம்

நீங்குவாய்;

அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு

ஆதுமோ?

சுந்தரத் தனு வலாய் சொல்லு நீ' என்றான்.

'சீதையின் துயர் நீக்கும் காலம் மெல்ல வந்திருக்கிறது' என்று இலக்குவன் சொல்லுமிடத்தில், 'பைய' என்னும் பழந்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com