கம்பனின் தமிழமுதம் - 10: எந்திரனான இராமன்!
இந்தத் தலைப்பினைப் பார்த்தவுடன், நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எவருக்கேனும் நினைவுக்கு வந்தால், அதில் பிழையில்லை.


இந்தத் தலைப்பினைப் பார்த்தவுடன், நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எவருக்கேனும் நினைவுக்கு வந்தால், அதில் பிழையில்லை. 'ரோபோ' மனிதன் ஒருவனைப் பற்றிய கதை அது. அந்த ரோபோ மனிதனைக் குறிப்பதே 'எந்திரன்' என்ற பெயர்.
கம்பனுக்கும், ரோபோ மனிதனான எந்திரனுக்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். தொடர்பு இருக்கிறது!
சீதையைத் தேடி இலங்காபுரிக்குள் நுழைந்த அனுமன், பல இடங்களில் அவளைத் தேடிக்கொண்டே சென்றான். அந்தத் தேடுதல் அசோக வனத்தில் நிறைவுற்றது. அரக்கியர் பலர் சூழ சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள் சீதை.
ஒரு மரத்தின் மீது, மறைவாக அமர்ந்தபடி, 'சீதையிடம் எப்படி நெருங்குவது?' என்னும் சிந்தனையில் இருந்தான் அனுமன். அப்போது எதிர்பாராத விதமாக, இராவணன் அசோகவனத்துள் நுழைந்தான். மிரட்டலும் கெஞ்சலுமாக, தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டினான் இராவணன். சீதையின் மன உறுதி அவனைக் கோபம் கொள்ள வைத்தது.
'அவள் மனத்தை மாற்ற வேண்டிய வேலை உங்களுடையது; தவறினால், உங்களுக்கு நானே எமனாவேன்' என்று அரக்கியர்களை மிரட்டிவிட்டுப் போனான்.
யாரும் அறியாமல் சீதையிடம் பேச விரும்பிய அனுமன், ஒரு மந்திரத்தால் அரக்கியர் அனைவரையும் தூங்கச் செய்தான்.
அரக்கியர் தூங்கிய நிலையில் தனியாக இருந்த சீதை, 'இனி வாழ்ந்து என்ன பயன்... உயிர் விடுதலே சிறந்தது' என்று முடிவெடுத்தாள். தற்கொலை செய்து கொள்ள, மாதவிக்கொடிகள் நிறைந்திருந்த பகுதிக்குள் நுழைந்தாள்.
அவள் நோக்கத்தை உணர்ந்த அனுமன், அதிர்ச்சியடைந்தான். 'இராமனின் தூதன் நான்' என்று சொல்லியபடி அவள் எதிரே நின்றான்.
'இந்த இடத்தில் இராமன் பெயரைச் சொல்வது யார்?' என்று நின்று, வியந்து பார்த்தாள் சீதை. அறிமுகமும் அடையாளங்களும் அனுமன் மீதான முழுதான நம்பிக்கையை சீதைக்கு ஏற்படுத்தின.
இப்போது சீதை கேட்டாள்: 'வீரனே! அவர்கள் இருவரும் எப்படி இருக்கிறார்கள்? உன்னை எப்படிச் சந்தித்தார்கள்?' அனுமன் பதில் சொல்லத் தொடங்கினான்.
'அன்னையே, உன்னைக் காணாமல் திகைத்த இராமனும் இலக்குவனும் பல இடங்களில் ஓடித் தேடினார்கள். உன்னைப் பிரிந்ததால், உயிர் இல்லாதவனைப்போல் ஆனான் இராமன். உன்னைத் தேடி ஓடினான்; ஆறுகள், மலைகள் என பலவற்றைக் கடந்தான்; அங்கும் இங்கும் நடந்தான்; கை கால்களை அசைத்தான்; ஆனால், இவை அனைத்தையும் உயிரற்ற ஒரு பொம்மை செய்வதைப் போலச் செய்தான். செயல்பாடு எதிலும் உயிர் இல்லை. உயிரற்ற பொம்மையாகவே, உன்னைக் காப்பாற்ற போராடிய சடாயு வீழ்ந்திருந்த இடத்தை வந்து அடைந்தான் இராமன்.'
இந்தக் கருத்துகளை அனுமன் சீதையிடம் சொன்னதாக அமைந்த கம்பனின் பாடல் இது:
அந்நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று,
அன்னை! நின்னைத்
துன் இருங் கானும் யாறும் மலைகளும்
தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்று ஏகும் இயந்திரப் படிவம்
ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை
வந்து சார்ந்தான்.
அறிவியல் வளர்ந்த நிலைகளைப் பார்க்கும்போது, கம்பன் காலத்தில், ரோபோ என்னும், உயிரற்ற இயந்திர மனிதனைப் பற்றிய சிந்தனையே துளிர்த்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிடலாம்.
'சீதையைப் பிரிந்த இராமன், உயிரை இழந்தவனவாக உலா வந்தான்; மனிதனுக்கான இயக்கங்களும் இருந்தன. ஆனால், அதில் உயிர் இல்லை; எந்திரப் படிவமாக இயங்கினான்' என்று எழுதுகிறான் கம்பன்.
நவீன அறிவியலின் 'ரோபோ' என்னும் கண்டுபிடிப்புக்கு, 'எந்திரப் படிவம்' என்னும் தமிழ்ச் சொல்லைத் தனது காப்பியத்தில் கம்பன் தந்துள்ளது வியப்பே அல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...