கம்பனின் தமிழமுதம் - 26: 'இடை'யில் ஒரு சிந்தனை!

ஆண், பெண் இரு பாலாரும் இளமையில் உடல் மிடுக்குடன் இருப்பதும், முதுமை நெருங்க நெருங்க, உடல் தளர்வதும் இயற்கை.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

ஆண், பெண் இரு பாலாரும் இளமையில் உடல் மிடுக்குடன் இருப்பதும், முதுமை நெருங்க நெருங்க, உடல் தளர்வதும் இயற்கை. ஆனால் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பெண்களின் அழகை வர்ணிப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.

அதிலும் பெண்களின் இடை அதிகமாகவே வருணிக்கப்படும். பழைய இலக்கியங்கள் தொடங்கி புதுக்கவிதைகள் வரை, பெண்களின் இடை பற்றிய வருணனைகள் உண்டு. 'உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா? வண்ணக் கண்ணல்லவா?

இல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா? மின்னல் இடை அல்லவா?' என்ற கண்ணதாசனின் திரைப்பாடலை அனைவரும் அறிவோம். 'பொய்யோ என்னும் இடையாள்' என்று சீதையை வருணிக்கும் இடம், கம்ப இராமாயணத்தில் உண்டு. எதிர்பாராத இடத்தில், சற்றும் எதிர்பாராத உவமையைச் சொல்வதில் தேர்ந்த கம்பன், தனது கற்பனை முத்திரையைப் பதித்த இடத்தையே பார்க்கப் போகிறோம்.

மிதிலைக்கு விசுவாமித்திர முனிவருடனும் இலக்குவனுடனும் வந்த இராமன் வில்லை முறித்தவுடன், இராமனுக்கும் சீதைக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. கோசல நாட்டில் இருந்து தயரதன், அவனது பட்டத்தரசிகள் என எல்லாரும் மிதிலை வந்து சேர்ந்தனர். அனைவரும் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, வசிட்டன், சனகனிடம் 'சீதையை வரச் சொல்லுங்கள் என்றான்.

'சீதையை அழைத்து வாருங்கள்' என்று பணிப்பெண்களிடம் சொன்னான் சனகன். அரச குடும்பத்தினர் அமர்ந்திருக்கும் மண்டபத்துக்கு, இராமனின் வருங்கால மனைவியை அலங்காரம் இல்லாமல் அழைத்துவர முடியுமா என்ன? சீதைக்கு அலங்காரம் தொடங்கியது. கால் பாதங்கள் தொடங்கி, தலை முடிவரை பல பெண்கள் கூடி நின்று சீதைக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினர். அலங்காரம் எப்படி நடந்தது என்பதைப் பல பாடல்களில் விவரிக்கிறான் கம்பன்.

நெற்றிக்கு நெற்றிசுட்டி, கழுத்துக்கான நகைகள், கைக்கு வளையல்கள் என்று அங்கங்களுக்கு உரிய நகைகளை அணிவித்துக் கொண்டே வந்த பெண்கள், இடுப்பில் அணியப்படும் ஒட்டியாணத்தைக் கையில் வைத்துக் கொண்டு தடுமாறினார்கள் என்றான் கம்பன். 'இடுப்பு இல்லையே'என்றனர் சிலர். 'இல்லாமல் எப்படி? இருக்கும் பாருங்கள்' என்றனர் சிலர்.

ஒரு வழியாக இடுப்பைத் தேடிப் பார்த்து, இல்லாத இடுப்புக்குத் துன்பம் தருவதுபோல அதில் நகையை மாட்டினார்கள். 'பெண்களுக்கு இடுப்பு இல்லை' என்னும் கற்பனை எல்லா கவிஞரும் சொல்வதுதான். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றும். 'சீதைக்கு இடுப்பு இல்லை; இருக்கிறது' என்று அங்கிருந்த பெண்கள் இரு பிரிவாக நின்று பேசியதற்குக் கம்பன் தரும் உவமைதான் முக்கியம்.

இறைவனைப் பலரும் தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் பார்க்கிறார்கள்; 'வடிவமே இல்லை' என்று வணங்குவாரும் உண்டு. வள்ளலார் பெருமான், இறைவனை ஜோதி வடிவானவன் என்றார். இறைவன் இருக்கிறான் என்று நம்புபவர்களைத் தவிர, 'இறைவனே இல்லை' என்று சொல்வாரும் உண்டு அல்லவா?

இந்தக் கருத்தை மையப்படுத்தி, 'சீதையின் இடுப்பு இறைவன் போன்றது. சிலர் இருக்கிறது என்றார்கள்; சிலர் இல்லை என்றார்கள்' என்று இடுப்புக்கு இறைச் சிந்தனையை உவமையாகச் சொன்னான் கம்பன். இதில் மற்றொரு ஆழமான பொருளும் உண்டு. கம்பனின் கவிதையைப் பார்த்துவிடலாம்.

சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில்,

வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டி,

பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன,

யார்க்கும்,

'இல்லை', 'உண்டு', என்ன நின்ற இடையினுக்கு

இடுக்கண் செய்தார்.

இந்த உவமையைச் சொல்வதன் வாயிலாக, அழுத்தமாக ஒரு செய்தியைப் பதிவு செய்கிறான் கம்பன். 'இடுப்பு இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் நயத்துக்குச் சொல்லப்படுவதுதானே தவிர, இடுப்பு என்னும் ஒன்று இல்லாமல் ஓர் உடல் எப்படி இயங்க முடியும்? அதுபோல், இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதெல்லாம் வாதத்துக்குச் சொல்லப்படுவதே தவிர, இறைவன் ஒருவன் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்?' என்னும் ஆழமான கருத்தையும் இங்கு பதிவு செய்கிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com