
ஆண்டாள் இடையர் குலத்துப் பெண்களுள் ஒருத்தியாகத் தன்னைப் பாவித்துப் பாடிய பனுவல் திருப்பாவை. இதில் மார்கழி நீராட்டத்தின் பொருட்டுத் தோழியரைச் சிறு காலைப் பொழுதில் துயிலெழுந்து வருமாறு அழைக்கிறாள். அப்போது அவள் பாடிய திருப்பாவையின் முதற் பாசுரம் இது:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
இதன் ஏழாம் அடி, 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று இரண்டு தேற்றே காரங்களைக் கொண்டுள்ளது. இவை முறையே, 'தருபவன் நாராயணனே, பெறுபவர் நாமே; வேறு எவரும் இலர்' என்பதைத் திண்ணமாகத் தெரிவிப்பன.
இங்குப் பறை என்பது, 'நோன்புக் குரியதாய் ஒலியெழுப்புகின்ற ஓர் இசைக்கருவி'என்பது வெளிப்படை. திருப்பாவைப் பதினாறாம் பாசுரத்தில் 'அறைபறை' என்று ஆண்டாளே அருளிச் செய்திருப்பதும் காண்க.
இவ்விரண்டு இடங்கள் தவிர, 'பாடிப் பறை கொண்டு'(8), 'பாற்றப் பறை தரும் புண்ணியனால்'(10), 'ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம்', 'பறை தருதி ஆகில்'(25), 'இறைவா நீ தாராய் பறை'(28) என்று மேலும் பலவிடங்களில் பறை பேசப்படுகின்றது. இவற்றுக்கிடையில் 26-ஆம் பாசுரத்தில் மார்கழி நீராட்டத்துக்கு வேண்டுவனவற்றுள் ஒன்றாகவும் பறை இடம் பெறுகின்றது.
'சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே'
என்பது அங்கு காணும் பாடலடி.
ஆனால் நூல் முடிவில், 'சிற்றஞ் சிறுகாலை' எனத் தொடங்கும் 29-ஆம் பாசுரத்தில், 'நாங்கள், உன்னிடம் பறை கொள்வதற்காக இன்று வரவில்லை' என்று முன்பு பல முறை, 'பறை பறை' என்றுசொன்னதை மாற்றிப் பேசுகின்றனர் ஆயர்குலச்சிறுமியர்.
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
என்பது அவர்கள் கூற்று. அங்ஙனமாயின் கண்ணனிடம் அவர்கள் கொள்ளக் கருதியது தான் என்ன? கீழ்க்காணும் அவர்களின் வேண்டுதலே அதற்கு விடையாகின்றது.
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்று
காதலி இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ? 'பறை' என்றால் அகராதிப் பொருள் கருதிப் பறையை எடுத்துக் கொடுப்பாயோ? நாங்கள் கொள்ள விரும்பிய பறை - உன்னையன்றி இவ்வுலகத்தில் வேறு ஒன்றுமில்லையே! உன்னோடு நாங்கள் கொண்ட உறவு இப்பிறவியோடு முடிவதில்லை, நீ பரமபதமே சென்றாலும் அங்கும் நாங்கள் உன்னோடு பிரியாதிருக்க வேண்டும்.
இப்பிறவி போல நீ எத்தனை பிறவியெடுத்தாலும்
அங்கெல்லாம் உன்னைத் தொடர்ந்து உனக்கு அடிமை செய்யவே நாங்கள் பாரிக்கிறோம்; பெரிதும் ஆசைப்படுகிறோம். உன்னோடு எங்களுக்கு உறவுண்டானாலும் சில மாதங்களும் சில ஆண்டுகளும் பிரிந்திருந்த பிராட்டி, பரதன் முதலானோரைப் போல் ஆகக் கூடாது. நாட்டில் இருந்தாலும் கானகம் சென்றாலும் இளைய பெருமாளை (இலக்குவனை)ப் போல்
என்றென்றும் பிரியாது உன்னோடே கூடியிருக்க வேண்டும்.
அப்படிப் பிறவி தோறும் பிரியாதிருக்கும் நிலையிலும் உனக்குக் கைங்கர்யம் செய்யக் கூடியவர்களாகவே நாங்கள் இருக்க வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை என்கிறார்கள்.
ஆக, கண்ணனுக்குச் செய்யும் கைங்கர்யமே இங்கு 'பறை' எனப்படுகிறது. அக்கைங்கர்யமும் அவன் முகமலர்ச்சி ஒன்றையே கருதிச் செய்வது. தொண்டிலே அடியவர் இறங்குவது, இறைவனுடைய ஆனந்தத்துக்கேயன்றித் தம்முடைய ஆனந்தத்துக்காக அல்ல. அப்படியொரு விருப்பம் ஏற்படுமாயின், அது கைங்கர்யத்தின் இடையில் தோன்றிய களையாகிவிடும்.
எனவே அதை நீ களைய வேண்டும் என்பதைத் தான், 'மற்றைநம் காமங்கள் மாற்று' என்பதன் மூலம் உணர்த்துகிறார்களாம். 'உனக்கே நாம் ஆட்செய்வோம்' இங்கும் 'உனக்கே' என்பதில் உள்ள 'காரமும் இறைவன் உகப்புக்காக மட்டுமே; ஜீவன் உகப்புக்காக அல்ல என்பதை வலியுறுத்தும். இதனால் நோன்புக்குரியதாய் (திருப்பாவை 1) ஒலியெழுப்பும் இசைக் கருவியாய் (அறை பறை 16) சொல்லப்பட்ட பறை, நூல்
முடிவில் (29)
இறைவனுக்குரிய தொண்டினை - அவன் முக மலர்ச்சிக்காகவே செய்யும் கைங்கர்யத்தைக் குறிப்பதாய் மட்டுமே பொருள் பெறுவதைக் காணலாம்.
இச்சிறப்புக் கருதியே 'திருப்பாவையாவது இப்பாட்டிறே' (இப்பாட்டு அல்லவா?) என்று முன்னோர்கள் அறுதியிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.