
பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் காழிச் சீராம விண்ணகரத்துப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்தும் பாசுரத்தில் நப்பின்னையின் பாதங்களின் அழகை, பஞ்சியமெல் லடிப்பின்னை (3:4:4) என்று பாடிப் போற்றியுள்ளார்.
அந்நூலில், வயலாளிப் பெருமானோடு தன் மகளும் உடன்போய் விட்டாளோ என்று ஐயுறும் தாய், தன்மகளை, 'பஞ்சிய மெல்லடியெம் பணைத்தோளி (3:7:3) என்று பரிவோடு குறிக்கிறாள். அசோதை இடைப்பிள்ளைகளை, 'பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள்' (10:7:10) என்கிறாள்.
இம்மூன்று இடங்களிலும் முறையே 'செம்பஞ்சுபோலே மிருதுவான திருவடிகளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக' என்றும், 'இது படுக்கையில் இருக்கிலும் பயப்பட வேண்டும்படி மிருதுவான காலையுடையவள்' என்றும், 'பஞ்சு போல மிருதுவான அடியையுடையராய் இருக்கிற பிள்ளைகள்' என்றும் உரையிட்டுள்ளார் பெரியவாச்சான்பிள்ளை.
பதிப்பாசிரியர்கள் இவ்விடங்களில் காணப்படும் 'பஞ்சிய' என்பதை ஒரு சொல்லாகக் கொண்டுள்ளார்கள். பாடல்களைச் சொற்களாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள மர்ரே பதிப்பு முதலியவற்றிலும் பஞ்சிய மெல் அடி என்றே காணப்படுகிறது.
'பஞ்சிய' என்னும் சொல் வழக்கு வேறு இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை. பெரும்பாலான வினைச்சொற்கள் வினையடியிலிருந்தே உருவாகின்றன. ஆனால், பெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொற்கள் உருவாதலும் உண்டு. கடைக்கண், சித்திரம் என்னும் பெயர்களின் அடியாகக் கடைக்கணித்தான், சித்திரித்தான் என்னும் வினைச்சொற்கள் தோன்றியுள்ளன.
அதுபோலப் பஞ்சு என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து பஞ்சிய என்னும் சொல் பிறந்துள்ளதாகக் கருதியுள்ளார்கள். 'பஞ்சு' என்பது பெயர்ச்சொல்லாயினும் அதை வினைப்பகுதி வடிவமாகக்கொண்டு அதன்மேல் விகுதியேற்றிப் 'பஞ்சிய' எனப்பட்டது'' (3:7:3) என்பது திவ்யார்த்த தீபிகை தந்துள்ள விளக்கம். பஞ்சு போன்ற அடி என்பதற்குப் பஞ்சி அடி என்றோ பஞ்சின்அடி என்றோ இருந்தாலே போதும். ஒரு புதுச்சொல் உருவாக்கத் தேவையில்லை.
எனவே இச்சொல் ஏற்புடைத்ததாக இல்லை. இதனால்தான் போலும் 'தி லிட்டில் ப்ளவர் கம்பெனி' வெளியிட்டுள்ள நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மூன்று இடங்களிலும் பஞ்சியல் மெல்லடி என்னும் பாடமே உள்ளது. இது சுவடிகளில் கண்ட பாடமாகத் தோன்றவில்லை. பதிப்பித்தோர் செய்த திருத்தமாகவே தெரிகிறது. 'பஞ்சிய' பொருத்தமற்ற பாடம்; 'பஞ்சியல்' புதிதாக அமைத்த பாடம். பின்னர் எது சரியான பாடம்?
பஞ்சி என்னும் சொல்லே பஞ்சு என்றும் வழங்கி வருகிறது. 'பஞ்சி ஆரும் மெல்லடி' (2564) என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். 'பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு. 'பஞ்சி அன்ன மெல்லடியாள்' (1319), 'பஞ்சி யன்ன மெல்லடி நற்பாவைமார்கள்' 1595) என்று திருமங்கையாழ்வாரே பாடியுள்ளார்.
உமாதேவியைத் திருஞானசம்பந்தர், 'பஞ்சுசேர் மெல்லடி' (440) என்றும், திருநாவுக்கரசர், 'பஞ்சு உண்ட மெல்லடியாள்' (2820) என்றும், சீதையின் பாதத்தைத் திருமங்கையாழ்வார் 'பஞ்சு அடி' (பெ. மடல், 50) என்றும் குறித்துள்ளனர். இதனால் இருவகை வழக்கும் உள்ளது தெளிவு.
பஞ்சி என்பது மென்மையான இலவம்பஞ்சி, கால்களில் பூசிக்கொள்ளும் செம்பஞ்சி ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல். 'பஞ்சிய மெல்லடி நப்பின்னை' என்பதன் விளக்கத்தில் பஞ்சி என்பதற்குச் செம்பஞ்சு என்று பொருள் தந்துள்ளார் பெரியவாச்சான்பிள்ளை. 'பஞ்சு சேர்', 'பஞ்சு உண்ட' என்பனவற்றுள் உள்ள சேர், உண்ட என்னும் சொற்கள் பூசிக்கொள்ளும் செம்பஞ்சினையே குறிக்கின்றன.
அழகு சாதனங்களில் ஒன்று செம்பஞ்சிக் குழம்பு. இது பற்றிய குறிப்பு அகநானூற்றில் காணப்படுகிறது. தலைமகள் தன்னை, 'அம்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டி' (389) அழகுபடுத்திப் பார்த்துத் தலைவன் மகிழ்ந்தான் என்கிறாள். 'செம்பஞ்சி என்பது ஒருவகைப் பருத்தி மரம்; செம்பருத்தியினும் வேறானது; இந்தியாவுக்கே உரியது.
அதன் தாவரவியல் பெயர் காசிபியம் ஆர்போர். அதன் பூக்கள் செந்நிறம் உடையன. அதனை அரைத்துச் செய்வதே மகளிர் காலில் பூசும் செம்பஞ்சிக் குழம்பு. அதன் வண்ணம் ஐந்தாறு குளிக்கு (சில நாள்) நிற்கும்' என்று விளக்கம் தருகிறார் தாவரவியல் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி.
பஞ்சிய மெல்லடி என்னும் தொடரில் தவறு இல்லை. பதிப்பித்தோரும் உரைகண்டோரும் சொற்களைப் பிரிப்பதிலேயே தவறியுள்ளனர். நிலைமொழி ஈற்றில் உள்ள மகரவொற்று வருமொழி முதலில் மகரம் நின்றால் கெடும். 'ஏனம் முன் ஆகி' என்பது ஏனமுனாகி (பெ. திருமொழி 978) என்றும், 'எங்கும் முழங்கும் என்பது 'எங்கு முழங்கும்' (பெ. புராணம்.245) என்றும் அமைந்திருப்பது காண்க. இத்தொடரினைப் பஞ்சி அம் மெல்லடி என்று பிரித்தலே தகும். அம் என்பது அழகு என்று பொருள்தரும் உரிச்
சொல். அதில் உள்ள மகரமெய் மெல்லடி என்னும் வருமொழியின் முன் கெட்டு, 'பஞ்சி அ மெல்லடி' என்று ஆகியது; அகரம் யகர உடம்படுமெய் பெற்று 'பஞ்சிய மெல்லடி' என்று நின்றது. இத்தொடருக்குப் பஞ்சி போன்ற அழகிய மென்மையான அடி என்றோ, செம்பஞ்சுப் பூச்சினால் அழகாக விளங்கும் மென்மையான அடி என்றோ பொருள் அமையும். எனவே 'பஞ்சிய' , 'பஞ்சியல்' என்பவை பிழைபட்ட பாடங்கள் என்பது தேற்றம்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்யானப் பதிப்பில், பெயர் குறிப்பிடப்படாதவர் எழுதிய பதவுரையும் உள்ளது. அதில் இத்தொடர் வரும் மூன்று இடங்களில் முதல் இரண்டு இடங்களில் முறையே பஞ்சிய மெல் அடி (3;4;4) என்றும், பஞ்சு மெல் அடி (3;7;3) என்றும் தவறாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளவர், மூன்றாவது இடத்தில் பஞ்சியம் மெல் அடி (10;7;10) என்று சரியாகப் பிரித்துள்ளது காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.