எம்பியை ஈங்குப் பெற்றேன்!
முனைவர் ப.ஜீவகன்
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம். அறம் பாடும் காப்பியமான கம்ப ராமாயணத்தில் கம்பனோ, ராமனுக்கு வரமாக வாய்த்த அனைத்து சகோதரர்களுமே அவனையே உயிராக நினைத்து வாழ்ந்தனர். அவன் நலமே தன் நலமாகப் போற்றினர். போரில் இளையபெருமாள் இந்திரஜித்தை வென்றான்.
அதனைக் கண்டபின் ராமன் அவனை நோக்கி. ' இலக்குமனா நீ இந்திரஜித் வென்றதால் இனி இராவணனும் கொல்லப்படுவான், இனி சனகன் பெற்றெடுத்த சீதையும் என்னிடம் வந்து சேர்வாள் என்பதால் மனம் குளிர்ந்தேன். தம்பியுடையான் பகைக்கு அஞ்சான் எனும் பழமொழியை உன் செயலால் நிலை நிறுத்தினாய்' என்று இராமன் கூற்றாக
கம்ப மதத்துக் களியானைக் காவற் சனகன்
பெற்றெடுத்த
கொம்பு மென்பா லினவந்து குறுகி னாளென் ற
கங்குளிர்ந்தேன்
வம்பு செறிந்த மலர்கோயின் மறையோன்
படைத்த மாநிலத்தில்
தம்பி யுடையான் பகையஞ்சான் என்னு மாற்றந்
தந்தனையால்
(கம்பராமாயணம் இந்தரசித்து வதை
படலம்- 69)
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் சீவகனின் வளர்ப்பு பெற்றோரான கந்துக்கடன் - சுநந்தைக்கும் தலைமாகவாகப் பிறந்தவன் நந்தட்டன். பின்னர் அவர்களுக்கு பிறந்தவர் நபுலன் விபுலன் என ஆக மூவரும் சீவகனின் உயிர் அணைய உடன்பிறப்புகளாக அவனின் நண்பர்களுடன் காப்பியம் முழுமையும் வருகின்றனர்.
சீவகனைப் பிரிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு நந்தட்டன் சீவகனைக் கண்டு அன்பு பொங்க கண்ணீருடன் அவனை ஆழத்தழுவுபோது, 'இவ்வுலகில் நாம் விரும்பும் செல்வத்தை தேடிக் கொள்ள முடியும் ; பகைவரையும் வெல்ல முடியும் ; நட்பையும் மனைவியையும் மக்களையும் மற்ற பொருள்களையும் அடைய முடியும்.
ஆனால் நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியாத சிறந்த பொருள் உடன்பிறப்புதான். எனவே, அப்படிப்பட்ட உன்னை எங்கு மீண்டும் பெற்றேன்' என்று மனமகிழ்கிறான்.
இதனை
திண்பொருள் எய்த லாகும் தெவ்வரைச்
செகுக்க லாகும்
நண்பொடு பெண்டீர் மக்கள் யாவையும்
நண்ண லாகும்
ஒண்பொரு ளாவதையா உடன்பிறப் பாக்க லாகா
எம்பியை ஈங்குப் பெற்றேன் என்னெனக்
கரிய தென்றான்
(சீவக. 1760)
உடன்பிறப்பின் சிறப்பினை 'தம்பியுடையான் பகையஞ்சான்' எனும் கம்ப ராமாயணம் பாடல் தொடராலும், 'எம்பியை ஈங்கு பெற்றேன் எனக் கரியதென்றான்' என்ற சிந்தாமணி தொடராலும், ஒப்பு நோக்கி அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

