சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

'நன்னெறி'கள் காட்டும் பொன்னெறிகள்

அறநெறியும் தவநெறியும் நம் நாட்டின் இரண்டு கண்கள். இவற்றைக் கட்டமைக்க அறநூல்கள் பல தமிழ்மொழியில் உருவாக்கப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 11:40 am

முனைவர் கி. சிவா

அறநெறியும் தவநெறியும் நம் நாட்டின் இரண்டு கண்கள். இவற்றைக் கட்டமைக்க அறநூல்கள் பல தமிழ்மொழியில் உருவாக்கப்பட்டன. துறைமங்கலம் சிவப்பிரகாசர் (1652-1684) இயற்றிய 'நன்னெறி' நூலைப்போலவே மற்றொரு நன்னெறியும் உள்ளது. 'திருவேங்கட செழியன்' என்ற குறுநில மன்னன்மீது 'செழியதரையன் நன்னெறி' என்றொரு நூல் பாடப்பட்டுள்ளது.

சிவப்பிரகாசரின் காலத்தில் இந்த நூலும் இயற்றப்பட்டுள்ளது. நீதி நூல்கள் பெரும்பாலும் வெண்பாவால் அமைந்துள்ளன. இந்நூல் கட்டளைக் கலித்

துறையால் அமைந்திருப்பதால் சிவப்பிரகாசரின் நூல் காலத்தால் சற்று முந்தையது என்றும், இந்நூல் சற்றுப் பிந்தையது என்றும் கருதலாம்.

இந்நூலின் ஆசிரியர் குழந்தைவேல் கவிஞன் என்பவராக இருக்கலாம் என்று ஓலைச்சுவடிக் குறிப்பால் அறியலாகிறது. 'செழியன் நன்னெறி', 'சேலத்தார் நன்னெறி', 'திருவேங்கட நன்னெறி' என்று இந்நூலிற்கு வேறு பெயர்களும் உண்டு.

சின்ன சேலம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு இவனுடைய முன்னோர்களின் காலத்திலிருந்து பல தலைமுறைகளாக இவர்கள் இந்தப் பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய வரலாறுகளை 'செழியதரையன் பிரபந்தங்கள்' என்றொரு நூல் (மு.சண்முகம்பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழகம், 1986) விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பாண்டியர்க்குரிய 'செழியன்' என்ற குடிப்பெயர் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்க்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்குடியின் மூதாதையர் பாண்டியர் குலத்திலிருந்து பிரிந்துவந்த கிளைவழியினர் ஆகலாம். அன்றிப் பாண்டியரின் கீழ்ச் சிற்றரசராய் அடங்கி வாழ்ந்தமையின் பேரரசரின் குடிப்பெயரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்பார் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை.

இம்மன்னனின் தந்தை அந்தாலந்தீர்த்தான், தமையன் தாகந்தீர்த்த செழியன், திருவேங்கட செழியனின் மகன் கங்காதரச் செழியன் முதலான பலர் இப்பகுதியை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட நாடு 'மகதை நாடு' எனப்பட்டது. இவர்க்குரியது மேழிக் (கலப்பைக்) கொடியாகும். இவர்கள் பேரில் 'மேழிவிளக்கம்' என்றொரு நூல் இயற்றப்பட்டுள்ளது.

இன்றைய தென்னார்க்காடு, திருச்சி, சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் மகதை நாடு என்று வழங்கப்பட்டது. இந்தியாவின் வடபகுதியில் மகத நாடு ஒன்று இருந்தமையால் இந்தப் பகுதி 'தென்மகதை நாடு' எனப்பட்டது. செழியனின் தந்தையைக் கல்லைக் குறிச்சி பெரும்பத்தில் கோமான் என்கிறது, அந்தாலந்தீர்த்தான் மஞ்சரி (144) என்ற நூல். ஆகவே, கல்வராயன் மலைப் பகுதியும் இவர்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்திருக்கிறது.

கல்வராயன் மலையை அடுத்துள்ள குறிச்சி (குறிஞ்சி நிலத்து ஊர்), 'கல்லைக் குறிச்சி' எனப்பட்டது. இவ்வூர் பின்னாள்களில் கள்ளக்குறிச்சி எனப் பிழைபட வழங்கலாயிற்று. இன்றும் இக்குடிவழியினர் சின்னசேலம் பகுதியில் 'நயினார்' என்னும் சிறப்புப்பெயர் தாங்கி வாழ்ந்துவருகின்றனர்.

ஒற்றுமையின் பலத்தைச் செழியன் நன்னெறி எடுத்தியம்பும் அழகைப் பார்ப்போம்.

செருஅத்தி கட்டும் தொடரும்ஒன் றோடுஒன்று

சேர்ந்திலையேல்

.....

வெருவப் பொரும்சிங்க மே!செழி யா!திரு

வேங்கடமே! (3)

போர் நடவாதபோது அதில் பங்கேற்கும் களிற்றினைக் கட்டுகின்ற தொடரி(சங்கிலி)யானது ஒன்றுடனொன்று பிணைந்து இல்லையேல் அதைக்கொண்டு ஒரு குறுமுயலைக்கூடக் கட்டமுடியாது. ஒருவருடனொருவர் நன்கு பழகி (மணந்து) நட்புப் பூண்டவர்கள் பிரியநேர்ந்தால் (இருவருமே) வலிமையற்றுப்போவர். இதுவே (உலக) உண்மை கண்டாய். சினங்கொண்டு போரிடுகின்ற சிங்கமே! செழியா! திருவேங்கடமே! (இதனை உணர்வாய்) என்பது இப்பாட்டின் பொருளாகும்.

மன்னனுக்கு ஒற்றுமையின் பலத்தையும் நட்பிலே பிரிவிலாது இருக்கவேண்டியதையும் எடுத்துரைக்கும் இப்பாட்டு, எத்துணை நயமாய் அமைந்துள்ளது!

சிவப்பிரகாசரின் நன்னெறியிலும் இத்தகைய பொருட்பொதிந்த பாடலொன்று உள்ளது.

நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

.....

புல்லினும் திண்மைநிலை போம் (5)

இப்பாட்டிற்கு, மலர்க்குழலாளே! நெல்லின் உமியோ சிறிது. ஆனால், அதை நீக்கிவிட்டு மீண்டும் சேர்த்துவைத்தாலும் அதன் ஒட்டுறுதி போய்விடும் (நெல்லும் முளைக்காது). பிரியக்கூடாத இருவர் (கருத்து மாறுபட்டுப்) பிரிந்து மீண்டும் சேர்ந்தாலும் பழைய நட்பின் பெருமை இராது என்பது பொருளாகும்.

செழியதரையன் நன்னெறி, மன்னனை ஆடூஉ முன்னிலையாக்கி, அவனுக்கேற்பப் போரிடும் களிறு அதைக் கட்டும் தொடரி ஆகியன இடம்பெறுமாறு பாடப்பட்டுள்ளது.

சிவப்பிரகாசரின் நன்னெறி, மகடூஉவை முன்னிலையாக்கி, எளியமையாக எல்லார்க்கும் உரியவகையில் நெல்லையும் உமியையும் சான்றுகாட்டிப் பாடப்பட்டுள்ளது. யாருக்காகப் பாடுகிறோம் என்பதைப் பொருத்துப் பாடலின் சான்றுப் பொருள்களும் அமைகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.