டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பக்த பட்டாபிஷேகம்!

""ஆண்டவன் புகழ் பாடுவதைவிட அவன் அடியார்கள் புகழ்பாடு! அவர்கள் காட்டிய வழியில் செல்! இறையருள் தானே உன்னைத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:17 pm IST

   ""ஆண்டவன் புகழ் பாடுவதைவிட அவன் அடியார்கள் புகழ்பாடு! அவர்கள் காட்டிய வழியில் செல்! இறையருள் தானே உன்னைத் தேடி வரும்'' என்பது சான்றோர்களும் ஆன்றோர்களும் நமக்குக் காட்டிய வழி. அவ்வகையில் வரும் நரசிம்ம ஜெயந்தியை (இவ்வருடம் மே 7 மற்றும் 8) முன்னிட்டு, ஸ்ரீ நரசிம்மரின் முழுமையான அருள் பெற்ற பரம பாகவதோத்தமரான பிரகலாதரை பற்றிப் பார்ப்போம்.

  எந்தத் தீமையும் தன்னை ஒன்றும் செய்யாது என்னும் நம்பிக்கையுடன் ""ஓம் நமோ நாராயணா'' என்ற திருமந்திரத்தை விடாது ஜபித்து வென்றவன் பிரகலாதன். கடவுளை நேரில் காணவேண்டி நம்பிக்கையுடன் தவமிருந்தான் துருவன். காலன் தன்னை அணுகாவண்ணம் ஈசனையே கட்டிப் பிடித்து சாகா வரம் பெற்றான் மார்க்கண்டேயன். இச்சிறுவர்களின் நம்பிக்கைக்கு மூலகாரணம் இவர்கள் மனதில் நிரம்பியிருந்த பக்தியே. "ஆண்டவன் தன்னைக் கைவிடமாட்டான்; காப்பாற்றுவான்! ஆண்டவா நீயே கதி' என்ற சரணாகதி தத்துவத்திற்கு இவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

  அன்னையின் கருவில் இருக்கும்போதே நாரத மகரிஷியின் உபதேசம் பெற்றவர் பிரகலாதன். அக்கால வழக்கப்படி குரு குல வாசம் செய்தபின் அரண்மனைக்கு திரும்பினான் பால பிரகலாதன். மைந்தனை தன் மடிமேல் அமர்த்திக் கொண்ட மாமன்னன் ஹிரண்யன், ""அருமைப் புதல்வா! நன்றாகப் படித்து நீ அறிந்து கொண்டதில் உத்தமமான ஒன்றை எனக்கெடுத்து உரைப்பாய்'' என்றான். இதற்குப் பதில் சொல்லும் விதமாக பிரகலாதன், "மகாவிஷ்ணுவிடம் ஒன்பது விதமான பக்தி செய்வதுதான் நிகரில்லாத கல்வி' என்று தீர்க்கமாகவும், அமைதியாகவும் கூறுகின்றான். அவை யாவன :

  விஷ்ணுவின் கதைகளைக் காதாரக் கேட்க வேண்டும் (சிரவணம்)

அவன் செயல்களை வாயாரச் சொல்ல வேண்டும் (கீர்த்தனம்)

அவனை மனதில் எப்பொழுதும் நினைக்க வேண்டும் (ஸ்மரணம்)

சேவையைச் சாலவும் செய்ய வேண்டும் (பாதசேவனம்)

பூஜையில் காலத்தைக் கழிக்க வேண்டும் (அர்ச்சனம்)

வந்தனம் செய்வதில் களிக்க வேண்டும் (வந்தனம்)

தொண்டனாய்த் தன்னைக் கருத வேண்டும் (தாஸ்யம்)

நட்பினை நாடியே நிற்க வேண்டும் (சக்யம்)

தன்னையும், தனதையும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் (ஆத்ம நிவேதனம்)

  இந்தப் பதிலை "பக்தி' யோகத்தின் சாரம் என்று பெரியோர் கருதுகின்றனர். இன்றைக்கும் "பக்தி செய்வது எவ்விதம்?' என்ற கேள்விக்கு பிரகலாதன் சொன்ன வழியே மேற்கோள் காண்பிக்கப்படுகிறது. "மாசற்ற பக்தி ஒன்றே மாதவனுக்கு மனமுவந்தது; மற்றதெல்லாம் வீண்' என்று வற்புறுத்தியவன் பிரகலாதன்.

  பரம எதிரியான பரந்தாமனின் புகழ் பாடிய தன் மைந்தனை பல விதத்திலும் துன்பத்திற்கு ஆளாக்குகிறான் அசுரர்குல வேந்தன். ஆனால் எந்தத் துன்பமும் பிரகலாதனை அணுகவில்லை; அன்று அலர்ந்த தாமரைபோல் அவன் காணப்பட்டான். தன் செயல்கள் யாவும் பயனற்றதாய் ஆனதைக் கண்ட மன்னன் இவ்வாறு எண்ணுகின்றான் :

  ""ஒரு தந்தையின் பாவ, புண்ணியச் செயல்கள் அவன் மைந்தனைச் சேரும் என்பதற்கேற்ப, ஒருக்கால் நான் பிரம்மாவிடம் சாகாவரம் வேண்டிப் பெற்ற தவப்பலன், பிரகலாதனைச் சேர்ந்துவிட்டதோ! அதனால்தான் அவன் எந்தக் கொடுமைகளுக்கும் ஆளாமல், இறப்பு வராமல், என் முன் தைரியமாய் ஹரிநாமத்தைச் சொல்லிக் கொண்டு நிற்கின்றானோ?'' என்று எண்ணியவன், ""எங்கே உன் ஹரி? கூப்பிடு அவனை'' என்று கர்ஜிக்கின்றான்.

  பிரகலாதன் தன் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகவும், பக்தியின் மேன்மையை உலகோருக்கு வெளிப்படுத்துவதற்கும் தூணிலிருந்து நரசிங்கனாய்த் தோன்றி ஹிரண்ய வதத்தை முடிக்கின்றார் திருமால்!

  ஹிரண்ய வதத்தை முடித்த எம்பெருமான், பிரகலாதனின் பக்தியை மெச்சி அவனை தன் மடிமேல் அமர்த்திக் கொண்டு ஆசீர்வதித்து, ""குழந்தாய்! அனைத்து பாகவதோத்தமர்களுக்கும் சேர்த்து உனக்கு "பக்த குல சாம்ராஜ்ய சக்ரவர்த்தி' என்ற பட்டத்தை அளிக்கின்றேன்'' என்று பட்டாபிஷேகம் செய்வித்ததாகப் புராணங்கள் கூறும்.

  சக்கரவர்த்தி பட்டாபிஷேகம் என்றால் சாமானியமானதா? அது எவ்வாறு நடந்தது? அதை அழகாக வர்ணிக்கின்றார் தியாக பிரும்மம் தன் "பிரகலாத பக்த விஜயம்' என்ற இசை நாடகக் காவியத்தில். ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் இந்த வைபவத்தை "நரசிம்ம பஞ்சாமிர்தம்' என்று சிலாகித்துக் கூறுவார். அதன்படி, ""சிங்க முகத்துடன் கூடிய நரசிம்மரே சிம்மாசனத்தின் முகப்பு!

பிரகலாதன் அமர்ந்த அவரது தொடையே ஆசனம்!

நரசிம்மர் வடித்த ஆனந்தக் கண்ணீரே பிரகலாதனுக்கு, சகல புண்ணிய தீர்த்தங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டு செய்யப்பட்ட தீர்த்த அபிஷேகம்.

  பிரகலாதனின் தலையை வருடிக் கொடுக்கும் நரசிம்மரின் கரங்களே தலையில் சூட்டப்பட்ட கிரீடம்!

இந்த பட்டாபிஷேக வைபவத்தைக் காணும் பக்தர்களாகிய நாமே பிரஜைகள்!''

  ஸ்ரீ நாராயண பட்டத்ரி தனது நாராயணீய காவியத்தில் ஸ்ரீ நரசிம்ம அவதார லீலைகளைக் கூறி முடித்தபின் குருவாயூரப்பனை நோக்கி, ""உபநிஷதத்தில் தெளிவாக இசைக்கப் பெற்றிருக்கும் எல்லாப் பெருமைகளும் உடையவரும், தூய்மை மிக்க வடிவமுடையவரும், நீக்கமற எங்கும் நிறைந்தவரும் ஆகிய செல்வா! ஒப்புயர்வற்ற தங்களைத் தங்கள் அடியார் அல்லாமல் வேறு யார்தான் விஞ்சி நிற்க இயலும்? ஆச்சரியம்!'' என்று துதிக்கின்றார்.

  மந்த்ராலயத்தில் ஜீவசமாதி கொண்டு நம்மை அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராகவேந்திர மகான் பிரகலாதனின் மறு அவதாரம் என்று சொல்வார்கள். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த பிரகலாதனின் வழியை நாமும் பின்பற்றி, அந்தப் பரம் பொருளின் பரிபூரண அருள் வேண்டுவோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.