17.11.2010ல் தியாகப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், மற்றும் "பக்ரீத்' என்று அழைக்கப்படுகின்ற உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள், இஸ்லாமிய மக்களால் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. இதற்கான சம்பவம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்ராஹிம் (அலை), அவர்களின் மனைவி ஹாஜ்ரா, இவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரால் நிகழ்த்தப்பட்டதாகும். அதன் ஞாபகார்த்தமாகவே வருடா வருடம் இப்பெருநாள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
நற்போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல அல்லாஹ் அந்த அந்தக் காலகட்டத்திற்கு பல நபிமார்களை இவ்வுலகிற்கு அனுப்பினான்.
அப்படி அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவர்தான், "நபி இப்ராஹிம்' என்று அல்லாஹ்வால் புகழப்பட்டவராவார்.
அதற்கான காரணம், ""அல்லாஹ்வின் ஓர் இறைக் கொள்கையை "நம்ரூது' என்ற மன்னனிடம் எடுத்துச் சொல்ல சென்ற சமயம் அம்மன்னன் வெகுண்டான்; நபி அவர்களை எரிகின்ற நெருப்புக் குண்டத்தில் போட்டு சித்தரவதை செய்து தண்டிக்க முற்பட்டான். அப்போது அல்லாஹ், தன் நபியின் மேல் கொண்டிருந்த பாசத்தால் எரிகின்ற நெருப்பு ஜுவாலைக்கு குளிர்ச்சியூட்டும் தன்மையை ஏற்படுத்தி, பேராபத்தில் இருந்து நபியை காப்பாற்றினான்'' என்று இறை வசனம் 21.69ல் அருளப்பட்டுள்ளது.
வேறு ஒரு சமயம் இறைக் கட்டளைப்படி நபி தனது மனைவி, மகன் இஸ்மாயில் ஆகியோரை மக்காவிற்கு அருகில் உள்ள பாலைவனத்தில் விட்டுவிட்டு வரும்படி செய்ததில் புனிதக் கிணறான "ஜம்-ஜம்' என்ற வற்றாத நீர் ஊற்று ஏற்பட்டது. அது ஒவ்வொரு வருடமும் நற்பயணம் செல்பவர்களின் அன்றாடத் தேவைக்கும் பயன்படுகிறது; அதையே பல நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு புனித நீராகக் கொண்டு செல்லும் காட்சியினையும் நம்மால் காண முடிகின்றது.
இறுதியாக உயிர்த் தியாக வரலாறு அரங்கேறிய சம்பவம்! நபி இப்ராஹிம் (அலை) அவர்கள், தனது தள்ளாத வயதில், தன்னையும் தனது மனைவியையும் பக்கத் துணையாக இருந்து பாதுகாத்திட ஓர் வாரிசு வேண்டும் என்று இறைவனிடம் விரும்பி வேண்டிக் கேட்டார். அதற்கிணங்க இஸ்மாயில் அவர்கள், அன்னை ஹாஜிரா வயிற்றில் உதித்தார்கள். அப்பொழுது இப்ராஹிம் நபிக்கு வயது 86; அவரது மனைவிக்கு வயது 70 என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலகனைப் பெற்ற பெற்றோருக்கு அப்பொழுது எத்தனைப் பெரிய மகிழ்ச்சி இருந்திருக்கும் என்பதை எழுதி விளக்கிட இயலாது.
இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெற்றவர்களுக்கு இறை ஆணை கனவின் வாயிலாகப் பிறப்பிக்கப்பட்டது. அதாவது தனது மகன்-12 வயதான பாலகனை, நபி தனது கைகளாலேயே அறுத்துப் பலியிட வேண்டும் என்பதுதான் இறை ஆணை. இந்நிலையில் அவர்களது மனங்கள் அன்று என்ன பாடுபட்டிருக்கும்...?
பெற்றோரின் தவிப்பு ஒரு புறம்! இறைக் கட்டளை கனவின் வாயிலாகத் தொடர்ந்து மூன்று நாட்களாக வந்தது மறுபுறம்! தியாகச் செம்மல் நபி, தனது மனதைத் தேற்றிக் கொண்டு இறைவனுக்காகப் பலியிட தனது பாலகனை தயார்ப்படுத்த எண்ணினார்.
தந்தையின் மொழி கேட்ட தனயன், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் கூறாமல், முழுமனதுடன் தன்னைப் பலியிடச் சம்மதம் தெரிவித்தார். இஸ்மாயில் (அலை) அவர்களின் இந்த மன நிலைதான் அறிஞர் பெருமக்களால் "தசவ்வுஃப்' என்று சொல்லப்படுகின்றது. அதாவது இறைவனுக்கு என்று செயல்படும் பொழுது தன்னையும், உலகத்தையும் மறந்து முழுவதுமாக தன்னை அதற்காகத் தயார்படுத்திக் கொள்வது என்பதாகும்.
உயிர்த் தியாகத்திற்காக "இணக்கம்' தெரிவித்தார்கள் இஸ்மாயில் அவர்கள். எப்படி நபி அவர்கள் தன் மகனை பலியிட தாராளமாகச் சம்மதித்தார்களோ அப்படி! பின் என்ன...? காரியத்தில் ஈடுபட மகனை அழைத்துச் செல்லும் சமயம் வழியில் ஷைத்தான் குறுக்கிட்டு மூவர் மனதிலும் அச்செயலைச் செய்யவிடாமல் மாயை வார்த்தைகளைக் கூறியும், அதனை அவர்கள் செவியேற்கவில்லை.
நபிகள் மிக்க மன திடத்துடன் கூர்மையான கத்தியை தனது கையில் எடுத்துக் கொண்டிருக்கும் சமயம் மகன் கூறினார்; ""தந்தையே! என் கழுத்தை அறுக்கும் சமயம், ஒரு வேளை உங்கள் மனதில் பிள்ளைப் பாசம் ஏற்படக் கூடும். அதனால் இறைக் கட்டளையை நிறைவு செய்வதில் தொய்வு ஏற்படலாம். எனவே என் முகத்தை துணியால் மூடிக் கட்டிவிடுங்கள்'' என்று.
அப்படியே இறை ஆணை நிகழ்த்தப்படுகிறது. கூரிய கத்தியைக் கொண்டு இறைப் பெயரால் மகன் இஸ்மாயில் கழுத்தை அறுக்கிறார்கள். கத்தி கழுத்தை அறுக்க மறுக்கிறது. எப்படி அறுக்கும்? அதற்கான காரணத்தை நபி கத்தியிடம் கேட்க, அது, ""நபியே! உங்களிடம், உங்கள் மகன் கழுத்தை அறுக்கும்படி கனவில் மூன்று முறை இறை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இறைவன் என்னிடம், "இஸ்மாயில் அவர்களின் கழுத்தை அறுக்க வேண்டாம்' என்று எழுபது முறை கூறினானே! எனவே எனதிறைவனின் கட்டளையை எப்படி என்னால் மீற முடியும்?'' என்று மறுமொழி பகர்ந்ததாம். சுப்ஹானல்லாஹ்! இப்படியல்லவா முஃஜிஸôத் என்ற அற்புதச் செயலை அல்லாஹ் நபிகளுக்கு செய்து காட்டி, தனது சோதனையில் இருந்து வெற்றி அடைய வைத்தான்.
அதன்பின் ஜீப்ரயில் (அலை) வந்து நபியிடம், ""உமது தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். மகனுக்குப் பதிலாக ஆடு ஒன்று கொடுக்கும்படி ஆணை'' என்று கூறினார். அதனை நபிகள் நிறைவேற்றினார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். இறையருளால் நாமும் நம்மால் இயன்ற தியாகங்களைச் செய்ய முயற்சிப்போமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது

அம்பையில் நெகிழிப் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கடை அருகே விபத்தில் இருவா் காயம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



