பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒர் அழகிய முன் மாதிரி...!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் "மிலாது நபி' என்ற பெயரில் முஸ்லீம் மக்களால் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் பிறந்த தினம், வரும் 16ம் தேதி, அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.  நபி அவர்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:43 am IST

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் "மிலாது நபி' என்ற பெயரில் முஸ்லீம் மக்களால் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் பிறந்த தினம், வரும் 16ம் தேதி, அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.

 நபி அவர்கள், ஏழ்மை வாழ்க்கையை முழு மனதுடன் ஏற்று வாழ்ந்தார்கள் என்று ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகின்றது. எனவே அந்நிலையில் அண்ணலார் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்றும், மக்களிடமும், "தனது பிறந்த நாள் சம்பந்தமாக கொண்டாட்டங்கள் ஏதும் நடத்த வேண்டாம்' என்று கூறினார்கள் என்பதையும் அறிஞர் பெருமக்கள் வாயிலாக அறிகிறோம்.

 அக்கால மக்கள், தங்களின் அறியாமையால் அபரிமிதமான மூடப் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் செல்வ வளங்கள் இருந்தும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் "முகமது' என்று புகழப்பட்ட மனிதர். அவரை அல்லாஹ் தன்னுடைய இறுதி நபியாகத் தேர்வு செய்து, மக்களிடையே தன்னுடைய ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொல்லும்படி பணித்தான். அண்ணலாரும் அப்பணியினைச் சிறப்பாகவும், நிறைவாகவும் செய்ததன் விளைவாக மக்கள் அதனை ஏற்று நேர் வழியைப் பின்பற்றினார்கள். நபிகள், மனிதர்களை மனிதர்களாக வாழச் செய்தார்கள். "இதுதான் உலகின் அரும் பெரும் சாதனை' என்று போற்றிப் புகழ்ந்து, மேலைநாட்டு எழுத்தாளர் மைக்கெல் ஹெச் ஹார்ட் எழுதியுள்ளார்கள்.

 எனவே அத்தகைய மாமனிதரின் பிறந்த தினத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறு, மற்றும் அண்ணலார் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை நினைவு கூர்வோம்.

 நபிகளாரின் பிறப்பு:

 அரபு நாட்டில் "மெக்கா' என்ற இடத்தில், உயர்ந்த வணிகக் கோத்திரமான "குரைஷி' இனத்தில், அப்துல்லா - ஆமீனா தம்பதிகளுக்கு ஏக புதல்வனாக, கி.பி. 571ல் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12ல் திங்கள்கிழமை அதிகாலையில் நபிகள் பிறந்தார்கள் என்று அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நபிகள், தனது அன்னை வயிற்றில் ஆறு மாதக் குழந்தையாக இருந்த பொழுது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார்கள். பாலகன் பிறந்ததும் "முகமது' என்று பெயரிடப்பட்டு, அந்நாட்டு வழக்கப்படி வளர்ப்புத்தாய் ஹலிமாவால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்கள். நபிகள் தனது ஆறாம் வயதில் பெற்ற தாயையும் இழந்துவிட்டார்கள். பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பின், பெரிய தந்தை அபூதாலிப் அவர்களால் வளர்க்கப்பட்டார்கள்.

 அனாதைக் குழந்தை என்ற நிலையில் நபிகள் வளர்க்கப்பட்டாலும் ""முகமது என்ற பாலகன் உலக மக்களுக்கு அருட்கொடையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டார்'' என்று இறைவன் தனது திருமறையில் அத்யாயம் 21- வசன எண் 107ல் கூறியுள்ளான். சிறுவயதிலேயே நல்ல குணங்களுடன் நபிகள் இருந்ததால் அக்கால மக்கள் அவரை அல்-அமீன் (உண்மையாளர்), அஸ்ஸôதிக் (நம்பிக்கையாளர்) என்று அழைத்தார்கள்.

 முகமது வளர்ந்து வாலிப வயதை அடைந்ததும், கதிஜா அவர்களின் பெரும் வாணிபத்தைத் திறம்பட நடத்தினார். மேலும் நற்பண்புகளைக் கொண்டிருந்ததால் தன்னைவிட வயதில் குறைந்த நபிகளை கதிஜா திருமணம் செய்துகொண்டார்கள். அப்பொழுது கதிஜா இருமுறை விதவையாகி இருந்தார்கள். இது, நபிகள் அக்காலத்திலேயே செய்த சமூக சீர்திருத்தம். அதனால் விதவைகளின் மறுமணமும், மறுவாழ்வும் பற்றிய சிந்தனை, மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

 

 நபி பட்டம்:

 40 வயதான முகமது என்ற மாமனிதர், ஹிரா குகையில் இறைவனை நினைத்துத் தியானத்தில் இருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய நபியாக அவரைத் தேர்வு செய்து, அண்ணலாருக்கு நபித்துவத்தையும், புனித குர்ஆனையும் கொடுத்தருளினான் அல்லாஹ். அப்போது நபிகள் "உம்மீயாக' அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தார்கள் என்று இறை வசனத்தில் கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் குர்ஆனை மனனம் செய்ததும் நபிகளே ஆவார்கள்.

 நபி பட்டம் கிடைத்த பின் மெக்காவில் 13 ஆண்டுகளும், மதினாவில் 10 ஆண்டுகளும் தங்கியிருந்து இறைவனின் ஏகத்துவக் கொள்கையினை மக்களிடையே எடுத்துரைத்தார்கள். அப்பொழுது மெக்காவில், கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மக்கள், நபிகளுக்கு பல வழிகளில் துன்பம் கொடுத்தார்கள். அவற்றில் தாயிப் நகர சம்பவம் உள்ளங்களை உலுக்குவதாக இருக்கிறது.

 நபிகள் மெக்காவை விட்டு மதினா சென்றதை "ஹிஜ்ரத்' அதாவது சொந்த நாட்டைத் துறந்து இறைக் கட்டளைப்படி இடம்பெயர்ந்து மதினா சென்றது என்று குறிப்பிடுகிறார்கள். இதுவே இஸ்லாமிய ஆண்டு "ஹிஜிரி' என அழைக்கப்படுகின்றது. அதன்படி தற்சமயம் ஹிஜ்ரி 1432ஆம் ஆண்டு நடைபெற்று வருகின்றது. 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகளார் செய்த இறைப் பணியின் தாக்கம்தான் இன்றளவும் நின்று நிலை பெற்றுள்ளது. அது "கியாம நாள்' வரை தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 மனிதர்களுக்கு வழிகாட்டி:

 நபிகளுக்கு இறைவனால் ஜுப்ரயில் (அலை) வாயிலாக திருக்குர்ஆன் வசனங்கள் நபிகள் வாழ்ந்த காலம் வரை தேவைக்கு ஏற்ப இறக்கி அருளப்பட்டது. அந்நூலில் மனித குலத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்கள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்புனித நூலை ஓதுவது ஈமான் கொண்ட மக்களின் கடமையாகவும் உள்ளது.

 மேலும் நபிகளாரின் சொல், செயல் மற்றும் அவரது அங்கீகாரம் பெற்றவைகளே தற்சமயம் "ஹதீஸ்' என்று அழைக்கப்படுகின்றது. அதில் குர் ஆனுக்கு விளக்கம் காணுதல், மற்றும் அன்றாட மனிதச் செயல்களை நபி வழியில் எப்படிச் சிறந்த முறையில் செய்ய வேண்டும் போன்றவை பற்றி விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. நபி வழியில் எந்த ஒரு செயல் செய்தாலும் அது "சுன்னத்' என்றும் அழைக்கப்படுகின்றது.

 நபிகளாரின் எளிய,  ஏழ்மை வாழ்க்கை:

 அன்னை கதிஜா பிராட்டியாரை நபிகள் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் எல்லையில்லாப் பொருள் மற்றும் செல்வங்களுக்கு பொறுப்பாளராக ஆனார்கள். இருப்பினும் நபிகள் அவைகளைத் தனக்காகப் பயன்படுத்தியதே இல்லை. இதற்கு மாறாக நபிகள் ஏழ்மை வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தார்கள். அல்லாஹ், "உஹது' மலையை தங்கமாக்கித் தருகிறேன் என்று நபிகளிடம் கூறியதற்கு அதை ஏற்க மறுத்து, "யா அல்லாஹ்! நான் ஒரு வேளை பசித்திருந்து உன்னை நினைத்து உணவு கேட்டுப் பெறவும் அதை உண்ட பின் அதற்காக உனக்கு நன்றி செலுத்தி வாழவுமே என் மனம் விரும்புகிறது' என்றார்களாம்.

 அண்ணலாரின் எளிய, ஏழ்மை வாழ்க்கையைப் பற்றி ஹதீஸ் கிதாபுகள் ஆன முஸ்லிம் மற்றும் புகாரியில் ஆதாரபூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.

 வசதி வாய்ப்புகள் இருந்தும் நபிகள் அவைகளை அனுபவிக்காமல் இருந்தார். வாழ்ந்த காலத்தில் எந்நிலையிலும் கடுஞ்சொல் சொல்லாமல் வாழ்ந்து காட்டினார்கள். அதனால்தான் இறைவன் தனது திருமறை அத்யாயம்- 33, வசன எண் 21ல் ""விசுவாசிகளே! உங்கள் நபியின் வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரி இருக்கின்றது'' என்று அருளியுள்ளான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.