/

அன்பின் உச்சம் மன்னிப்பே!

ஒருவரை எத்தனை முறை மன்னிக்க முடியும்? நானும் மன்னித்துக் கொண்டே இருக்கின்றேன்.

News image
Updated On :25 அக்டோபர் 2012, 9:02 am

அபி

ஒருவரை எத்தனை முறை மன்னிக்க முடியும்? நானும் மன்னித்துக் கொண்டே இருக்கின்றேன். அவன் மீண்டும் மீண்டும் எனக்குத் தீமை விளைவித்துக் கொண்டே இருக்கின்றான்' என்று பல நேரங்களில் நாம் புலம்புகிறோம்; முணுமுணுக்கிறோம்.
 மன்னிப்பதற்கு அளவே இல்லை என்பதை இயேசு, ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை மன்னிக்க வேண்டுமென்று கூறுகிறார்.
 ஆம், சகோதர சகோதரிகளே! மன்னியுங்கள்! மன்னிப்புப் பெறுவீர்கள்.மன்னிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் மன்னித்தவர்கள் மகான்களாக மாறி இருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
 "உண்மையே வெல்லும்' என்ற காந்தி அடிகளை கோட்சே சுட்டுக் கொன்றான். "அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள்' என்றார் மகாத்மா. அடிமை விலங்கொடித்து அன்பு செய்த ஆபிரகாம் லிங்கனை பூத் என்பவன் சுட்டான். "அவன் விருப்பம் போல் செய்யட்டும். விட்டுவிடுங்கள்' என்றார் லிங்கன்.
 மார்ட்டின் லூதர் கிங், ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் என்று பல பேர் தங்கள் உயிருக்கே உலை வைத்தவர்களை மன்னித்திருக்கிறார்கள்.
 திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை 1981-ல் ஆக்கா என்பவன் சுட்டான். சிறைக்குச் சென்று அவனைச் சந்தித்து திருவிவிலியத்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் திருத்தந்தை! எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பிதாவே! இவர்கள் தாங்கள் செய்வதென்னவென்று அறியாத இவர்களை மன்னியும்' என்றார் இயேசு.
 அன்பின் உச்சகட்டமே இது. எனவே இப்போதே நாம் மன்னிக்க முடியாத தருணங்களை ஆண்டவரின் முன்னிலையில் நினைவில் கொண்டு வருவோம்.
 நாமும் மனதார அவர்களை மன்னித்து ஆசி கூறுவோம்! இது எல்லோருக்கும் எளிதான காரியம் அல்ல! ஆனால் தொடர்ந்து இறைவனிடம் ஜெபிக்கும்போது இறை இயேசுவும் தூய ஆவியும் நமக்குள் வந்து, நம் மனக்காயங்களையும் வெறுப்புகளையும் மாற்றி, இறையருளைப் பொழிந்து, மன்னிக்கும் மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வார்கள்.
 நம் அன்பு இயேசு எப்போதும் நம்மை மன்னிக்கத் தயாராக உள்ளார்.
 நாமும் நமது அயலார்களை மன்னிக்க வேண்டாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.