/

இல்லாமை தீர்த்த இயேசு!

இயேசு தனது பொது வாழ்வில் பல இடங்களுக்குச் சென்று யூத சமுதாயத்திலிருந்த பல்வேறு இல்லங்களைச் சந்தித்தார். ஆனால் அங்கெல்லாம் ஒரு வித இல்லாமை குடியிருந்தது.

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 10:26 am

அபி

இயேசு தனது பொது வாழ்வில் பல இடங்களுக்குச் சென்று யூத சமுதாயத்திலிருந்த பல்வேறு இல்லங்களைச் சந்தித்தார். ஆனால் அங்கெல்லாம் ஒரு வித இல்லாமை குடியிருந்தது.

1.மணவீட்டில் குறை, 2.உள்ளத்தில் குறை, 3.உடலில் குறை, 4.நம்பிக்கையில் குறை.

இப்படி ஒவ்வொரு இல்லத்திலும் குறைகளைக் கண்டறிந்த இறை மகன் இயேசு அவற்றை நீக்க தாமே அங்கு சென்றார். அங்கே இருந்த குறைகளைக் களைந்தார்.

அதனால் அந்த இல்லங்களில் மகிழ்ச்சி, அன்பு, சமாதானம், நிறைவு, இறையாசீர் என பல்வேறு ஆசீர்கள் கிடைத்தன.

1. கானாவூர் திருமணம்: இஸ்ரயேல் மக்களின் மரபுப்படி திராட்சை ரசம் திருமணங்களில் முக்கியமான சிறப்பான ஒரு பானம். ஒரு திருமண வீட்டில் திராட்சை ரசம் குறைபட்டபோது இயேசு தாயின் கட்டளையை ஏற்று வெறும் நீரை திராட்சை ரசமாக மாற்றி, மணவீட்டார்க்கு மகிழ்ச்சியைத் தந்தார்.

2. இயேசுவும் சக்கேயுவும்: இயேசுவைப் பற்றி அறிந்த சக்கேயு அவரைக் காண மரத்தின் மேல் ஏறினார். இயேசுவை தொலைவிலிருந்து பார்க்க நினைத்தார். ஆனால் இயேசுவோ அவர் உள்ளம் அறிந்து அவரை கீழே இறக்கி அவர் இல்லம் சென்று அவருடன் விருந்து உண்டார். இங்கே இயேசு அவரை தேடிச்சென்றார். அங்கே நிகழ்ந்தது ஒரு பெரிய மனமாற்றம். தான் செய்த தவறுகளை உணர்ந்து அதற்கு மன்னிப்பும். பரிகாரமும் தேடிக்கொண்டார் சக்கேயு.

3 பேதுருவின் மாமியார்: பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் படுத்திருக்க, இயேசு அவருடைய வீட்டுக்கே சென்று, அவரைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கியது. இவ்வாறு அவர் தொட்டுக் குணமடைந்தவர் அநேகர். இயேசுவின் தொடுதலால் அவரின் வல்லமை வெளிப்பட்டது.

4. சீடர்கள் தங்கி இருந்த வீட்டில் இயேசு தோன்றுதல்: யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள்.அவர்கள் மத்தியில் வந்து நின்றார் உயிர்த்த இயேசு. அதுவரை சோகம் சூழ்ந்திருந்தது. இயேசு வந்த பிறகு பெரும் மகிழ்ச்சி நிறைந்தது.

அந்த இல்லத்தில் இயேசு நம்பிக்கையை விதைத்தார். அந்த விதை இன்று வளர்ந்து திருச்சபையாக உலகம் முழுவதையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அவரை நம்பும் நம் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் இறைமகன் இயேசு தினமும் வருகிறார். நிறைவைத் தருகிறார், குறைகளைப் போக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.