முருகவேள் கிரவுஞ்சனை அழித்த வரலாறு !
கையிலாய மலையில் சிவபெருமானை வழிபட்டு அவர் ஆசியுடன் அகத்தியர் தென்திசை நோக்கி வரும் வழியில் மாயமாபுரம்


கையிலாய மலையில் சிவபெருமானை வழிபட்டு அவர் ஆசியுடன் அகத்தியர் தென்திசை நோக்கி வரும் வழியில் மாயமாபுரம் என்னுமிடத்திற்கு வந்து சேர்ந்தார். அது கிரவுஞ்சன் என்னும் அரக்கன் வசிக்கும் பகுதி. அந்த அரக்கன் மாயா வித்தையில் பெரும் பண்டிதன்! அவன் செய்யும் மாயைகள் எப்பேர்ப்பட்ட சூரனையும் திகில் கொள்ளச் செய்யும். அவன் தான் கற்ற வித்தையால் சூரியனைச் சந்திரனாகவும், சந்திரனைச் சூரியனாகவும் ஆக்கிக் காட்டுவான். மேருமலையை ஒரு அணுவாகவும், ஒரு அணுவை மேருமலையாகவும் சித்தரித்துக் காட்டுவான். அவனுடைய பொழுது போக்கே அவன் எல்லைக்குள் வரும் முனிவர்களையும் தேவர்களையும் தன் மாயா சக்தியில் பற்பல வித்தைகள் செய்து அவர்களைப் பீதியில் ஆழ்த்திக் கொல்வதுதான்! அப்பேர்பட்டவனுக்கு அகத்தியர் வருவதைப் பார்த்தவுடன் அவருடன் தன் மாயா சித்துக்களால் விளையாட ஆசைப்பட்டான். அகத்தியர் வரும் வழியில் பெரும் சிகரங்களையுடைய ஒரு மலையை உருவாக்கி அதன் நடுவில் புகுந்து செல்ல ஒரு பாதையையும், தன் மாயையில் உண்டாக்கினான். அகத்தியர் அந்தப் பாதையில் நாலைந்து மைல்தூரம் நடந்திருப்பார்.
அதற்கு மேல் வழியில்லை! சுற்று முற்றும் பார்த்தால் வேறு ஒரு பாதை பிரிந்து போவது தெரிந்தது. அதன் வழியே நெடுந்தூரம் சென்றபின் அதுவும் அதற்குமேல் செல்ல முடியாதபடி அடைத்து இருந்தது. முனிவர் என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, திடீரென்று அருகில் அக்னி ஜீவாலை எழுந்தது. அது கண்டு முனிவர் சற்று நகர்ந்ததும், பெருத்த இடி மின்னலுடன் திடீரென்று பயங்கரமாய் மழை பெய்தது! எங்கும் இருளும் சூழ்ந்து கொண்டது. யாரோ மறைவில் விலாப்புடைக்கச் சிரிக்கும் சத்தம் கேட்டது. எல்லாம் அசுரனின் மாயாவித்தைகள்! அகத்தியருக்கு உடனே புரிந்து போயிற்று. இது கிரவுஞ்சனின் மாயத் திருவிளையாடல்கள் என்று. அகத்தியருக்குச் சிறிது சினம் உண்டாயிற்று. தன்னைப் பற்றி தெரிந்து கொண்டே தன்னிடம் மாயாவித்தைகளைக் காண்பித்த அசுரனுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார்.
"அசுரனே! என்னிடம் உன் இந்த அற்ப வித்தைகளைக் காண்பிக்கிறாயா?
நன்றாகக் காட்டு. இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்த மாய உருவிலேயே இருந்து உன் மாயவித்தைகளில் மகிழ்ந்து கொண்டிரு. உன் விதி முடிய இன்னும் சிறிது காலம் இருக்கின்றது. உன் மாயைகளால் ஆகிய இந்த மலையும் நீயும் குமரக் கடவுளின் வேலால் பொடிப்பொடியாகி அழியக் கடவாய்!'' என்று கூறிவிட்டு தன் தண்டாயுதத்தால் மலையின் மேல் ஒரு கோடு கிழிக்க அந்த இடத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு வழி தெரிந்தது. அதன் வழியே வெளியே போய் தென்திசை நோக்கிப் பயணித்தார் அகத்தியர்.
இதன்பின் அசுரனின் அட்டகாசம் சிலகாலம் ஓங்கியது. தேவர்களும் முனிவர்களும் குமரக் கடவுளிடம் சென்று முறையிட்டார்கள். முருகன் கட்டளை பிறப்பிக்க வீரவாகு தேவர் அசுரனைக் கண்டு விசாரித்து வரக் கிளம்பினார். ஆனால் அந்த ராட்சசனது மாயம் புரியாமல் மலையினுள் சென்று மயங்கினார். "போனவர் திரும்பி வரவில்லையே, என்ன ஆயிற்றோ' என்று, வீரகேசர், வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டம், வீராந்தகர், வீரதீரர் என்னும் எட்டு வீரர்களும் அவர்களுடன் சென்ற எண்ணற்ற வீரர்களும் கிரவுஞ்ச மலைப்பாதைக்குள் சென்று வெளி வரமுடியாமல் மயங்கிக் கிடந்தனர். ஒவ்வொரு வீரரும் மயங்கிச் சாயும்போதெல்லாம் கிரவுஞ்சன் அளவற்ற மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து குதித்துத் தன் மாய வித்தைகளின் மகிமையை எண்ணி இடிபோல் சிரித்து மகிழ்ந்தான். நடந்தவற்றைக் கண்டு நாரதர் முருகவேளிடம் சென்று கூற, கதிர்வேலவன் தன் நெடுங்கூர் வேலை கிரவுஞ்ச மலையை நோக்கி ஏவினார். அவ்வளவுதான், ஒரே கணத்தில் அந்த வேல் கிரவுஞ்ச மலையைத் தாக்கிப் பொடிப்பொடியாய் ஆக்கியது. கிரவுஞ்சனும் "ஹோ' என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து மாண்டான். மயக்கமுற்றிருந்த நவ வீரர்களும் அவர்களது படையினரும் தூக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் எழுந்து மீண்டார்கள்.
இந்த வரலாற்றை உள்ளடக்கிய "பக்கரை விசுத்ரமணி'' எனத்துவங்கும் திருப்புகழ் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அருணகிரியார் முன் குமரக்கடவுள் தோன்றி "முத்தைத்தரு பத்தித் திருநகை'' என்று அடியெடுத்துத் தந்து மறைய, அந்தத் திருப்புகழ்ப் பாடலை மட்டுமே பாடி சிவயோகத்தில் ஆழ்ந்து விட்டார் அருணகிரிநாதர். உடனே முருகவேள், அசரீரியாக ""நம் வயலூருக்கு வா'' என்று அருள்புரிய அருணகிரி வயலூர் சென்று முருகனைப் பணிந்து திருப்புகழைப் பாடும் முறையை வினவ, கந்தவேள் இன்ன இன்னவைகளை வைத்துப் பாடென்று பணிக்க உடனே அருணகிரியார் வயலூரில் எழுந்தருளியுள்ள "பொய்யாக் கணபதி' சந்நிதியில் நின்று விநாயக வணக்கமாய் ""கைத்தல நிறை கனி'' திருப்புகழைப் பாடிவிட்டுப் பின்பு, ""முருகவேளின் கருணையை மறவேன்'' என்று இந்தத் திருப்புகழ்ப் பாடலைப் பாடினார். உண்மையில் அருணகிரிநாதர் அவராகப் பாடிய முதல் திருப்புகழ் பாடல் இதுவே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...