ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மேருவைச் செண்டாலெறிந்த வரலாறு!

"கனகந்திரள்கின்ற பெருங்கிரிதனில் உந்து தகன் தகனென்றிடு கதிர் மிஞ்சிய செண்டையெறிந்திடு கதியோனே''

News image
Updated On :25 ஜூலை 2014, 7:16 am

மயிலை சிவா

"கனகந்திரள்கின்ற பெருங்கிரிதனில் உந்து தகன் தகனென்றிடு கதிர் மிஞ்சிய செண்டையெறிந்திடு கதியோனே'' எனத் துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ் பாடலின் முதலிரண்டு அடிகளிலேயே ஒரு புராணக் கதையை நினைவுபடுத்தி விடுகிறார் அருணகிரிநாதர்!

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படும் மதுரை மா நகரில் சோமசுந்தரக் கடவுள் கிருபையால் தடாதகைப் பிராட்டியார் மூலம் பிறந்த உக்கிரகுமார பாண்டியன் முருகப் பெருமான் சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளில் ஒருவன். தருமம் செய்தல், அன்பு காட்டல், நீதியை நிலை நிறுத்தல், குடிமக்கள் காத்தல் ஆகிய நான்கு செயல்களையும் மிகத் திறம்படப் புரிந்து நல்லாட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு சோதனை. நவக்கிரகங்களின் மாற்றத்தால் மழை பொய்த்தது.

நதிகளும் குளங்களும் வறண்டன. உணவு விளைச்சல் இல்லாது நாடு பஞ்சத்தால் வாடத் துவங்கியது. அப்பஞ்சத்தைப் போக்குவதற்கு உரிய பொருள் இல்லாமல் நாடே துவண்டது. இந்த நிலையைக் கண்டு அரசன் ஜோதிடர்களிடம் இப்படித் திடீரென்று மழையின்மைக்கு என்ன காரணம் என்று வினவினான். ஜோதிடர்களும் பற்பல நூல்களையும் பஞ்சாங்கங்களையும் புரட்டிவிட்டு, கிரகங்கள் யாவும் சூரியனை நோக்கி நிற்பதால் ஓராண்டுக்கு மழை இருக்காது என்று காரணம் கூறினார்கள். தன் குடிமக்கள் படும் அவதியைப் பார்த்து மனம் நொந்த பாண்டியன் கோயிலுக்குச் சென்று சோமசுந்தர கடவுள்முன் வீழ்ந்து வணங்கி மனமுருக வேண்டினான். கடவுளிடமிருந்து ஒரு அசைவுமில்லை! மனம் வருந்தி அரண்மணை திரும்பிய அரசன் தன் மலர்ப்படுக்கையைத் துறந்து வெறுந்தரையில் படுத்து உறக்கம் வராமல் புரண்டான்.

நள்ளிரவில் ஓரளவு கண் அயர்ந்தபோது சோமசுந்தரக் கடவுள் சித்தர் வடிவம் தாங்கி அரசன் கனவில் தோன்றினார். ""மன்னனே! இப்போது மழை இல்லை என்பதால் துவண்டு போய் விடாதே. மலைகளுக்கெல்லாம் ராஜாவாய் இருக்கும் மேருமலையில் ஓரிடத்தில் அளவற்ற சேமவைப்பு நிதி இருக்கிறது. நீ அங்கு சென்று அந்த மலையரசன் செருக்கை அடக்க உன் கையில் உள்ள செண்டு என்ற ஆயுதத்தால் தாக்கி அப்பொருளை உனதாக்கிக்கொண்டு, அதில் வேண்டுமளவில் எடுத்துக் கொண்டு எஞ்சியதை உன் முத்திரையைப் பதித்துவிட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்து விடு!'' என்கிறார். விழித்தெழுந்த பாண்டிய மன்னன் ஆலயம் சென்று சோமசுந்தரக் கடவுளை வணங்கி விட்டுத் தன் நால்வகைச் சேனையுடன் மேருமலை நோக்கிப் பயணப்பட்டான். இமயமலையையும் கடந்து இன்னும் பல மலைகளையும் கடந்து திரிபுரங்களை அழித்த நாளில் சிவபெருமான் திருக்கரத்தில் வில்லாக விளங்கிய மேருமலையைச் சென்று அடைந்தான்.

தன் சேனைகளை ஒருபுறமாக நிறுத்திவிட்டு மேருமலையரசனைக் கூவி அழைத்தான். பலமுறை அழைத்தும் மலையரசன் வராமல் போகவே சினம் கொண்ட பாண்டியன் சிவபெருமான் அளித்த செண்டாயுதத்தால் அம்மலையின் சிகரத்தின் மீது ஓங்கி அடித்தான். இந்த அடி பட்டதும் மேருமலை தங்கத்தால் செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்திலும் அசையாத அந்த மலை அசைந்து நடுங்கியது. சிகரங்கள் சிதறின. ரத்தினங்களைச் சொரிந்தது! அப்போது மேருவாகிய தேவன் எட்டுத் தோள்களும் நான்கு முடிகளும் ஒப்பற்ற குடையும் கொண்டு பாண்டியன் முன் ஓடி வந்தான். மேருதேவன் தலை குனிந்திருந்தது. காரணம் முந்திய இரவு மங்கையொருத்தியின் அணைப்பின் அசதியில் உறங்கி விட்டான்! அதனைப் பாண்டியனிடம் வெட்கத்துடன் கூறி உடனே வராததற்கு மன்னிப்புக் கோரினான்.

பாண்டியன் தான் வந்ததற்கு உரிய காரணத்தைத் சொல்ல, அவன் உடனே திரளான பொன் புதைக்கப்பட்டிருக்கும் மாமரத்தின் நிழலைச் சுட்டிக் காட்டினான். பாண்டியன் உடனே அங்கு சென்று பாறையால் மூடப்பட்டிருந்த அந்த இடத்தின் கதவைத் திறந்து உள்ளே சென்று தனக்கு வேண்டியமட்டும் பொன்னை எடுத்துக் கொண்டான். பின்பு பாறையை மூடி மிகுந்த பொருளையும் தம்முடையாதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் பொறித்துவிட்டு புறப்பட்டு மதுரையை அடைந்தான். அங்கு பரமனுக்கு முன் தான் கொண்டு வந்த பொன் அனைத்தையும் கொட்டி, "இறைவா! உன் அருளால் இத்தனை செல்வமும் கிடைத்தது. இது அனைத்தையும் அப்படியே என் குடிமக்கள் அனைவருக்கும் உன் பெயரால் பகிர்ந்தளித்து அவர்களது பசிப்பிணி போக்குவேன்!'' என்று உரைத்து அவற்றைப் பகிர்ந்தளித்து தன் குடிமக்கள் துயர் துடைத்தான் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.