ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கால் மாறி ஆடிய கதை!

விராலிமலை திருப்புகழில் "சீரான கோல கால நவமணி'' என்று துவங்கும் பாடலில்

News image
Updated On :5 ஜூன் 2014, 11:18 am

மயிலை சிவா

விராலிமலை திருப்புகழில் "சீரான கோல கால நவமணி'' என்று துவங்கும் பாடலில் "ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறியாடு மிறையவர்'' என்ற அடியில் ஒரு புராணக் கதையைச் சுட்டுகிறார் அருணகிரி நாதர்.

மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் புதல்வன் ராஜசேகர பாண்டியன் சோமசுந்தரக் கடவுள் மேல் தீவிர பக்தி கொண்டவன். நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த அவன் ஆய கலைகள் அனைத்திலும் பெரும் பயிற்சியும், திறமையும் பெற்று விளங்கினான். ஆனால், நடனக் கலை பற்றிய பரத சாத்திரத்தை அவன் பயிலவில்லை.

அந்தச் சமயம் சோழ நாட்டிலிருந்து ஒரு புலவன் பாண்டியன் பேரவைக்கு வந்தான். அவன் கரிகாற்சோழனின் அவைப்புலவன். அவன், ""பாண்டிய வேந்தே! எமது மன்னர் 64 கலைகளிலும் வல்லவர். ஆனால், நீங்களோ ஏனைய 63 கலைகளிலும் வல்லவராய் இருந்தும் சிவபெருமானுக்கு உகந்த நடனக் கலையை மட்டும் பயிலாது இருப்பதன் காரணம் புரியவில்லை!'' என்றான்.

ஆமாம். பாண்டியனுக்கும் அது புரியவில்லைதான்! இத்தனை நாள் நடனக் கலையை ஏன் தான் கற்கவில்லை என்று தன்னையே கேட்டுக் கொண்டான். பின்பு அந்தக் கலையையும் கற்று அதிலும் பாண்டித்தியம் பெற்று விடுவது என்று உறுதி பூண்டு பரதக் கலை வல்லுநர்களை வரவழைத்து அவர்களுக்குத் திரண்ட பொன்னும் பொருளும் தந்து ராப்பகலாய் உழைத்து பரதக் கலையைப் பயின்றான்.

ஒருநாள் நெடுநேரப் பயிற்சிக்குப் பின் அவனுக்குக் கால் மிகவும் வலித்தது. அப்போது அவன் மனதில் ஒரு எண்ணம். சிறிது நேரப் பயிற்சிக்கே நமக்குக் கால் இப்படி வலிக்கிறதே.. நடராஜமூர்த்தி அனவரதமும் ஓயாது நடனம் புரிந்தவாறே இருக்கிறாரே. அவருக்குக் கால் எப்படி வலிக்கும்? ஆனால், அவர் கால் வலிக்கிறது என்று நடனமாடுவதை நிறுத்திவிட்டால் உலக இயக்கமே நின்று விடுமே. அதனால் காலை மாற்றி ஆட வேண்டுவோம் என்று நடராஜ மூர்த்தியை விழுந்து வணங்கி, "பெருமானே! எப்போதும் நீங்கள் வலது காலை ஊன்றியே நடனம் புரிகின்றீர்கள். இப்படி ஓய்வேயின்றி வலது காலை ஊன்றி நீங்கள் நடனமாடுவதைக் கண்டு எனக்குக் கால் வலிக்கிறது! பெருமானே! அருள்கூர்ந்து இடது காலை நிலத்தில் ஊன்றி நடனமாடுங்கள். வலது காலுக்குச் சற்று ஓய்வு தாருங்கள். நீங்கள் அப்படிக் கால் மாறி ஆடித் தரிசனம் தரவில்லை என்றால் இதோ இந்த வாளின் மீது விழுந்து உயிர் விடுவேன்!'' என்று ஆவேசமாகக் கூறித் தன் உடைவாளை உருவிச் செங்குத்தாய் நிறுத்தினான் பாண்டியன்!

பாண்டியனின் தீவிர பக்தியைக் கண்டு உள்ளூர வியந்து இறைவன் தன் இடக்காலை ஊன்றி வலது காலைத் தூக்கி மாறி நடனம் புரிந்தார்! பாண்டியன் அக்காட்சியைத் தரிசித்து மனம் மகிழ்ந்து இந்த அற்புதத் திருநடனத்தை எல்லோரும் கண்டு மகிழ இதுபோலவே வெள்ளியம்பலத்தில் விளங்க வேண்டும் என்று வரம் கேட்க இறைவனும் அப்படியே அருள்பாலித்தான்.

அன்று முதல் இன்றளவும் மற்ற தலங்களில் விளங்கும் நடராஜப் பெருமான் வலக்காலை ஊன்றி இடது காலைத் தூக்கி விளங்க, மதுரை நகராகிய வெள்ளியம்பலத்தில் மட்டும் இடது காலை நிலத்தில் ஊன்றி வலது காலைத் தூக்கி நடனம் புரிவதைக் காணலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.