சிவபெருமான் ஆமையின் ஓட்டை அணிந்து கொண்டது ஏன்?
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்துக் கொண்டிருந்தார்கள். பாற்கடலில் இருந்து வெளிவரும் அமிர்தத்தை இருவருமே பங்கு போட்டுக் கொண்டுப் பருக வேண்டும் என்று


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்துக் கொண்டிருந்தார்கள். பாற்கடலில் இருந்து வெளிவரும் அமிர்தத்தை இருவருமே பங்கு போட்டுக் கொண்டுப் பருக வேண்டும் என்று உடன்படிக்கை! மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை (பாம்பு) கயிறாகவும் கொண்டு அசுரர்கள் பாம்பின் தலைப்பாகத்திலும் தேவர்கள் வாலின் பக்கமாகவும் நின்று கடைந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று மந்தர மலை கடலின் அடியில் அமிழ்ந்தது. உடனே நாராயணர், பெரும் கூர்ம (ஆமை) வடிவம் கொண்டு கடலில் மூழ்கி மலையின் அடிப்புறத்தில் தன் முதுகைக் கொடுத்து அதன்மீது மந்தர மலையைத் தாங்கினார். அப்படியும் கடையும்போது மேலும் கீழுமாகச் சரிந்தது.
உடனே விஷ்ணு பகவான் தனது ஆமை உருவிலிருந்து ஆயிரம் கைகளைத் தோற்றுவித்தார். அவை, மலையின் உச்சியை அங்குமிங்கும் ஆடாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டன.
சில கரங்கள் பக்கவாட்டில் சாயாத வண்ணம் பிடித்துக் கொண்டன. தேவாசுரர்கள் களைப்புற்றபோது அவர்களுக்கு உதவியாகச் சில கரங்கள் செயல்பட்டன. இறுதியாக பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது. விஷ்ணு மோகினி வேடம் தாங்கி அமிர்தத்தை அசுரருக்குத் தராமல் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார்.
அப்போது மந்தர மலையைத் தாங்கி நின்ற ஆமைக்குப் பெரும் கர்வம் வந்துவிட்டது. தன்னால்தான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. அதனால் தனக்கு மிஞ்சியவர் எவருமிலர் என்ற செருக்கில் ஏழு கடலையும் கூட்டிக் கலக்கியது. யுக முடிவில் தோன்றும் பிரளயம் போல் கடல்நீர் உலகையே அமிழ்த்திப் புரட்டியது. திடீரென்று அந்த ஆமை மொத்த கடல்நீரையும் குடித்தது. கடலில் இருந்த திமிங்கலம் போன்ற எந்த உயிரினத்தையும் விடாமல் விழுங்கியது. அப்படியும் அதன் பசியும் தாகமும் அடங்கவில்லை. கடல்நீர் முழுவதையும் குடித்துக் கீழே தரை தெரியும்படி இருந்த சேற்றையும் குடித்து விட்டு இன்னும் எங்கே எங்கே என்று அலைபாய்ந்தது!
அகில உலகமும் நடுநடுங்க சந்திர சூரியர்களும் விண்ணில் பவனி வரப்பயந்து ஒளிந்து கொள்ள, எங்கும் காரிருள் சூழ்ந்தது! பீதியடைந்த பிரம்மாதி தேவர்கள் "ஓ'வென்று அலறியபடி கயிலை மலை சென்று சிவபெருமான் முன் விழுந்து வணங்கி உலகைக் காப்பாற்றும்படி கதறினார்கள்.
சிவபெருமான் அவர்களுக்கு அபயமளித்து தன்னுடன் வரும்படி அவர்களைச் சொல்ல, தேவர்கள் புடைசூழ, சிவபெருமான் ஆர்பரித்துக் கொண்டிருந்த ஆமையை நெருங்கித் தன் சூலத்தால் அதனைத் திருப்பிப்போட்டு ஒரே குத்தாகக் குத்திக் கிழித்தார்.
ஆமையின் சதைப்பகுதியைக் குடைந்து எடுத்து எறியவே அது வலிமை குன்றியது. தேவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, "எங்கே ஆமை மீண்டும் ஆவேசம் கொண்டு எழுந்து விடுமோ' என்ற அச்சம்! அதனால் ஆமையின் ஓட்டைப் பெயர்த்து எடுத்துத் தன் திருமேனியில் அணிந்து கொள்ள பிரார்த்தித்தார்கள்.
சிவபெருமானும் அவ்வாறே ஆமையின் ஓட்டைத் தன் திருமார்பில் தரித்துக் கொண்டார். அதன்பின் சுய உணர்வுக்குத் திரும்பிய திருமால், சிவார்ச்சனை செய்து வைகுந்தம் சென்றார்.
கூர்ம வடிவான திருமாலை அடக்கியதால் சிவனுக்கு, "கூர்ம சம்ஹார மூர்த்தி' என்று அழைக்கப் பெறலானார். (சில நூல்களில் ஆமையை அடக்க சிவன், தன் மடியில் அமர்ந்திருந்த குமரக் கடவுளைக் கீழே இறக்கிவிட்டு ஆமையை சம்ஹாரம் செய்யக் கட்டளை இட்டதாகவும் அதன்படி முருகப் பெருமான் ஆமையைக் கொன்று அதன் ஓட்டைக் கொண்டு வந்து சிவபெருமானிடம் சமர்ப்பித்ததாகவும் காணப்படுகிறது).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...