ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு!

மதுரைமா நகரில் வந்தி என்று ஒரு வயதான பெண்மணி! பிள்ளைக்குட்டி கிடையாது. தனிக்கட்டை.

News image
Updated On :16 அக்டோபர் 2014, 12:12 pm

மயிலை சிவா

மதுரைமா நகரில் வந்தி என்று ஒரு வயதான பெண்மணி! பிள்ளைக்குட்டி கிடையாது. தனிக்கட்டை. பிழைப்பிற்கு பிட்டு என்ற பணியாரத்தைச் செய்து அதை விற்றுப் பிழைப்பவள். ஆனால் மதுரை சோமசுந்தரக் கடவுள்மீது மட்டில்லாத பக்தி கொண்டவள். அதனால், தான் தினம் அவிக்கும் பிட்டை முதலில் சோமசுந்தரப் பெருமானுக்கு நிவேதனம் செய்து விட்டுத்தான் விற்பனையை தொடங்குவாள்.

இந்த காலகட்டத்தில் மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். அப்போது சிவபெருமானுக்கு ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கும் ஆசை உதித்தது. இந்தத் திருவிளையாடலுக்கு "ஸ்டேஜ்' செட் பண்ணியாக வேண்டுமே!' அதற்காக திடீரென்று வைகையாற்றில் பெரிய வெள்ளம் கரை புரண்டு ஓடும்படி செய்தார்! பாண்டிய மன்னன் வைகையாற்றின் கரையை உயர்த்த ஆணையிட்டான். உடனே அமைச்சர்கள் குடிமக்களின் பெயர்களை எழுதிக் குறித்து ஒவ்வொருவரும் எந்தெந்த அளவு கரையை உயர்த்த வேண்டும் என்று அளவிட்டுக் கொடுத்து விட்டனர். அவ்வளவுதான்... மக்கள் ஆவேசம் வந்தவர்கள் போல மறுகணமே வேலையை ஆரம்பித்து விட்டனர். நீள நீளமான வைக்கோல் புரிகளைத் திரட்டி அவற்றின்மீது தழைகளைப் போட்டு மண்ணை வெட்டிக் கூடை கூடையாகக் கொண்டு வந்து அவற்றின் மீது கொட்ட, வைகையாற்றின் கரை மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது. இதில் தங்களால் முடிந்தவர்கள் தாங்களே வேலை செய்தார்கள். செல்வந்தர்கள் கூலிக்கு ஆளை வைத்து தங்கள் பங்குக்குக் கரையை உயர்த்தினார்கள். ஆனால் கிழவி வந்தி என்ன செய்வாள்? தானே வேலை செய்யத் தெம்பில்லை. கூலிக்கு ஆள் அமர்த்தப் பணமுமில்லை. தான் நித்தம் வணங்கும் ஆலவாய் அழகனை மனதார வேண்டினாள். ""திக்கற்றவளாகிய எனக்குத் தெய்வமே... நீயே துணை. என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று'' என்று மனமுறுக வேண்டினாள்.

மூதாட்டி வந்திக்குக் கை கொடுக்க சிவபெருமான் கூலியாளாக வருகிறார். அழுக்கான பழந்துணியை உடுத்தி, ஒரு இற்றுப்போன கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு, ஒரு தேய்ந்த மண்வெட்டியோடு ""கூலியோ... கூலி, கூலிக்கு ஆள் தேவையோ?'' என்று கூவியபடி வந்தியின் வீட்டு வாயிலில் வந்து நிற்கிறார். வந்திக்கு பரம சந்தோஷம். "தக்க சமயத்தில் வந்திருக்கிறானே... ஆனால் அவனைப் பார்த்தால் கூலி வேலை செய்பவனாகத் தோன்றவில்லை. நல்ல வளமான முப்பத்தைந்து வயது வாலிபன்போல் தோன்றுகிறானே...!' அவனை கிழவி கூப்பிட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்டு விடுகிறாள். இப்போது சிவன் தான் தங்கியிருக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப கிழவியிடம் ஒரு டயலாக் விடுகிறார்!

""பாட்டி! நீ கேட்கிறது என்னமோ நியாயந்தான். ஆனா, எனக்கு அப்பன், ஆயி ஒருத்தருமில்லை. சதா மயானத்தில்தான் இருப்பேன். அங்க இருக்கற பேய்ங்கதான் எனக்கு உறவு. என் சம்சாரம் அன்னபூரணி! உலகத்துக்கே சோறு போடறவ. ஆனா, என்னை பிட்சாடனம் செய்யவுட்டுட்டா. என் மூத்த பிள்ளைக்கு மகோதரம். ஊர்ல எங்க, என்ன விசேஷம்னாலும் அவன் போய்த்தான் ஆகணும். சின்னப்பிள்ளை தகப்பன்சாமி ஆயிட்டான். இதுக்குமேல எனக்கு என்னா இருக்குது சொல்ல! அட... விஷத்தைக்கூடத் துண்ணு பாத்துட்டேன். ம்ஹூம்... எனக்குச் சாவே இல்லேனுட்டாங்க. சரி, மண்ணெடுத்தாவது பொழைக்கலாம்ன்னு உன்னாண்டை வந்திட்டேன்''

இதைக் கேட்டுவிட்டு கிழவிக் கடைசியாக, ""எனக்காக கரை எடுக்கிற இந்த வேலைக்கு உனக்குக் கொடுக்க என்னிடம் காசு, பணம் கிடையாது. ஆனா, அதுக்கு பதிலா நான் அவிக்கிற பிட்டுப் பலகாரத்தைத் தருகிறேன். உனக்குச் சம்மதமா?'' என்றாள். சிவனும் அதற்கு சம்மதம் தெரிவித்து, ""பாட்டி! முதல்ல எனக்கு அந்தப் பலகாரத்தைக் குடு. ரொம்பப் பசியில இருக்கேன். தின்னுட்டுப் போய் கரை வேலையை கவனிக்கிறேன்''என்றார். பாட்டியும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமாற ஜெபித்தபடி பிட்டை எடுத்து இளைஞனுக்குப் படைக்கிறாள். அவனும் அதை உண்டுவிட்டு வைகையாற்றுக் கரையை அடைந்து அங்கு பதிவு செய்யும் ஆவணத்தில், "மூதாட்டி வந்தியின் ஆள் சொக்கன்' என்று பெயரைப் பதிவு செய்துவிட்டு மண்ணெடுத்து கரையை உயர்த்தும் பணியில் ஈடுபடுகிறார்.

மற்றவர்கள் பங்கு கரையெல்லாம் கிடுகிடுவென்று உயர்ந்துவிட சொக்கனின் பங்குக்கரை சரியாக உயர்த்தப்படாமல் இருந்தது. வேலைக்கு வந்த சொக்கன், இன்று நூறுநாள் வேலைத்திட்டத்தில் சிலர் வேலை செய்யும் அழகில், அன்றே "வேலை காட்டியிருக்கிறார்!' அதாவது வேலை செய்வதுபோல் பாவனை செய்வார்! சிறிதளவு மண்ணை வெட்டி கூடையில் எடுத்துக்கொண்டு போய் கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டாமல் வேறு இடத்தில் கொட்டுவார். பின்பு அதைப்பார்த்து சிரிப்பார். அந்தச் சிரிப்பில் இன்னும் பல வேலையாட்கள் கலந்து கொள்வார்கள். உடனே அவர்களோடு பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார்! அவர்களும் சேர்ந்து கோரஸôக இணைவார்கள்.

மேற்பார்வையாளர்கள் வந்து கேட்டால், "ஆடிப்பாடி வேலை செஞ்சாதான் களைப்பு தெரியாது. வேலையும் கிடுகிடுன்னு ஆகும்'' என்று அவர்களைச் சமாளிப்பார். இப்படி பொழுது சாயும் வரை ஆட்டமும் பாட்டமுமாக கழிய மற்றவர்களின் பங்குக் கரை உயர்ந்து காணப்பட சொக்கனின் பங்கு உயர்த்தப்படாமல் அப்படியே இருந்தது. அன்றைய வேலை எவ்வளவு தூரம் ஆகியிருக்கிறது என்று காண விளக்கு வைக்கும் நேரத்தில் அரிமர்த்தன பாண்டியன் வருகிறான். பார்க்கிறான்.

சொக்கனோ ஒரு மூலையில் நின்று வெள்ளத்தைப் பார்த்து பித்துப்பிடித்தவன் போல சிரித்துக் கொண்டிருக்கிறான். பாண்டியன் கடுங்கோபத்துடன் அடைபடாத கரையை காண்பித்து ""இது ஏன் இன்னும் அடைபடவில்லை? இதற்கு உரிய ஆள் எங்கே? கொண்டு வா அவனை!'' என்று கர்ஜிக்க பணியாட்கள் சொக்கனைப் பிடித்துக் கொண்டு வந்து மன்னன் முன் நிறுத்துகிறார்கள்.

மன்னனின் கேள்விக்கெல்லாம் ஒரு பதிலும் கூறாமல் சொக்கன் மன்னனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறான்! மன்னனுக்குக் கடுங்கோபம் வந்து விடுகிறது. வேலையும் செய்யாமல், கேட்டால் சிரிக்கவா செய்கிறாய்?'' என்று உறுமியபடி தன் கையிலிருக்கும் பொற்பிரம்பால் சொக்கனின் முதுகில் ஓங்கி அடிக்கிறான்!

அவ்வளவுதான்... அந்த அடி மன்னனின் முதுகு, அரசியின் முதுகு, மக்கள் எல்லோரின் முதுகு, அனைத்து ஜீவராசிகளின் முதுகு என்று அண்ட சராசரமெங்கும் பாண்டியன் அடித்த அடி விழுகிறது! சொக்கனாக வந்த சிவன் மறைகிறான்! மூதாட்டி வந்திக்கு காட்சி தந்து அவளைக் கயிலையில் சேர்த்துக் கொள்கிறார். வைகையில் வந்த வெள்ளம் மாயமாய் மறைந்து போகிறது! பாண்டிய மன்னனுக்கு அசரீரியாக ஆலவாய் அழகன் அருள்பாலிக்கிறார்.

இந்தச் செய்தியை அருணகிரிநாதர் "வைகையாற்றில் மணல் தாங்கு மழுவாளி' என்ற அடிகளில் ("வாட்டியெனைச் சூழ்ந்த வினை' என்று துவங்கும் திருக்கூடலையாற்றூர் திருப்புகழ்ப் பாடல்) தெரிவிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.