ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திருப்பாதிரிப்புலியூரில் உமை தவம் புரிந்த வரலாறு!

அன்று கைலயங்கிரியில் சிவதரிசனம் நடைபெற்ற பிறகு தேவியுடன் சொக்கட்டான் ஆட விரும்பினார் சிவன்!

News image
Updated On :24 அக்டோபர் 2014, 8:05 am

மயிலை சிவா

அன்று கைலயங்கிரியில் சிவதரிசனம் நடைபெற்ற பிறகு தேவியுடன் சொக்கட்டான் ஆட விரும்பினார் சிவன்! உமையும் சம்மதிக்க, இருவரும் ஆட, உமை ஜெயித்து விட்டார். ஆனால் சிவன் அதை ஒப்புக் கொள்ளாது அடாவடியாய்த் தான்தான் ஜெயித்ததாய்க் தேவியை மிரட்டுகிறார்!

சிவதரிசனத்திற்கு வந்துவிட்டு இன்னும் விடை பெறாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த திருமால் அந்தப் பக்கமாக வர, அவரை நடுவராக வைத்து மீண்டும் ஆடலாம் என்று இருவரும் ஆடுகிறார்கள்.

தான் ஜெயிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் இருந்தும் சிவன் வேண்டுமென்றே அவற்றைத் தவறவிட இந்தத் தடவையும் தேவியே ஜெயிக்கிறார்! ஆனால் சிவன் தான்தான் வெற்றி பெற்றதாகச் சாதிக்கிறார்.

இருவரும், நடுவரான திருமாலைப் பந்தயத்தின் முடிவைக் கூறுமாறு கேட்கிறார்கள்.

சிவனோ கண் ஜாடையால் தன்னையே வெற்றி பெற்றதாகக் கூறும்படி திருமாலுக்கு சைகை செய்கிறார். உமையோ உண்மையை ஒளிக்காது கூறுவார் என்று திருமாலிடம் செல்கிறார்.

திருமாலோ தனக்கே உரிய தந்திரத்துடன் தான் அப்போது சிவன் தலையில் இருந்த ஓர் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அதனால் ஆட்டத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றும் மழுப்புகிறார்!

தேவிக்கு நிலைமை ஓரளவு புரிகிறது. இந்த இரண்டு ஆண்களும் சேர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று!

""சரி... நீங்கள் எவரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். சிவபெருமானின் திரிநேத்திரங்கள் உண்மையை ஒளிக்கவே ஒளிக்காது. அதனால் அவற்றை என் கைகளால் மறைப்பேன். நான் ஜெயித்தது உண்மை என்றால் ஒளி மழுங்கி இருள் மூடட்டும். இல்லாவிட்டால் ஒளி வீசட்டும்'' என்று கூறி சடக்கென்று எழுந்து தன் கரங்களால் சிவபெருமானின் கண்களை மறைக்க, உலகெங்கும் இருள் சூழ்ந்தது!

காரணம் ஏதுமின்றி இப்படி உலகை இருள் சூழவே தேவர்கள், ரிஷிகள் முதலானோர் கலக்கமடைந்து ஓடோடிவந்து நந்திதேவரிடம் முறையிட, தேவி தன் கரங்களை எடுக்க, இருள் நீங்கி ஒளி வந்தது!

சிவபெருமான் அடுத்திருக்கும் மண்டபத்திற்குச் சென்று திகிலுடன் வந்திருந்த ரிஷிகள், தேவர்களைத் தேற்றுகிறார். ""யாரும் அஞ்ச வேண்டாம். நமது ஒரு திருவிளையாடலால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இனி இதுமாதிரி நிகழாது. நீங்கள் பயமின்றிச் செல்லலாம்'' என்று அவர்களை வழியனுப்பி விட்டு மீண்டும் தமது இருக்கைக்கு வருகிறார்.

உமைக்கும் உள்ளூற பயம்தான்! "என்ன இருந்தாலும் சிவனின் கண்களைப் பொத்தியிருக்கக் கூடாது' என்று வருந்தித் தன் பிழையை பொருத்து அருளும்படி சிவனை வேண்டுகிறார்.

இந்த நேரத்தில் அந்தகன் (யமதர்மராஜன்) வந்து சிவனை வணங்கி இம்மாதிரி இருள் சூழ்ந்ததற்கு என்ன பரிகாரம் என்று கேட்கிறார். உமையும் தான் செய்த பிழையால் உலகில் இருள் சூழ்ந்ததால் அந்த பாபத்தைப் போக்கியருளும்படி, சிவனை வேண்டுகிறார்.

சிவன் உடனே, உமையை தேற்றுகிறார். ""தேவி! உன்னை எந்தப் பாபமும் அணுகாது. நீ பாபங்களையெல்லாம் பதறி ஓட வைக்கும் பாபநாசினி. இருப்பினும் உலகோர் உய்யும் பொருட்டு ஒன்று செய். இந்தக் கைலைக்குத் தெற்கில் 1008 சிவஸ்தலங்கள் உள்ளன. அத்தலங்கள் ஒவ்வொன்றிலும் சென்று வழிபாடு செய். அப்போது நீ பாவம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயே அது அகலும். நீ வழிபாடு செய்து வரும்போது எந்தத் தலத்தில் உனது இடது கண்ணும் இடது புருவமும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் வழிபாடு செய்து தவமும் செய்வாயானால் அப்பொழுது நாம் தோன்றி அந்தத் தலத்தில் உள்ளோர் முன்னிலையில் உன்னைத் திருமணம் செய்து கொண்டு ஆட்கொள்வோம்'' என்கிறார்.

அந்தகனும் இதைக் கேட்டுக் கொண்டு அம்பிகை மண்ணுலகம் வரப் போவதை அறிந்து கொண்டு அகலுகிறார்.

இந்திராணி, கௌமாரி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, பிராம்ஹி, வராகி, சாமுண்டி முதலான சப்த மாதர்களுடன் உமையம்மை பூலோகம் போய் புண்ணிய தீர்த்தங்கள் பொருந்திய தலங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று நாள்கள் வீதம் தங்கி வழிபாடு செய்து கொண்டு வருகிறார்.

இப்படி பல தலங்களைத் தரிசித்துவிட்டு வரும்போது ஓரிடத்தில் அபூர்வமான வாசனை எழும்பி உமையின் நாசியைத் தாக்கியது. அதனால் ஏதேனும் விசேஷம் அங்கிருக்க வேண்டும் என்று யூகித்துப் பார்க்கையில் அவர் கண்ணிற்கு அநேக சிவத்தலங்கள் அங்கே தென்பட்டன. அந்த சிவலிங்கங்களைப் பார்த்த மாத்திரத்தில் தேவியின் இடது கண்ணும் இடது புருவமும் துடிக்க ஆரம்பித்தன! உடனே தேவி அந்த இடத்திற்கு அருகில் இருந்த நெடிய நதியிலும் அதற்கு வடபால் இருந்த பெண்ணை நதியிலும் நீராடி சிவபூஜை செய்தார்.

""உமையே! எப்பேர்ப்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் பஞ்சமா பாதகங்களும் இத்தலத்தை மிதித்த மாத்திரத்தில் பொடிப்பொடி ஆகிவிடும்'' என்று உமையின் செவிகளில் மட்டும் விழுமாறு சிவன் அருளுகிறார். உடனே உமாதேவி சப்த மாதர்களால் திரட்டித் தரப்பட்ட பூஜா திரவியங்களைக் கொண்டு சிவபூஜை செய்கிறார். அதில் ஒரு பயனும் தெரியவில்லை.

பின்பு வேனிற்காலம் முழுவதும் அக்கினி வளர்த்து அதன் மத்தியிலும் கார்காலம் முழுவதும் நீரினில் நின்றபடியும் தேவி தவம் செய்கிறார். பின் தலையை பூமியில் ஊன்றித் தவம் செய்கிறார். அப்போதுதான் சிவனார் மனங்குளிர்ந்து சிவகணங்கள் சூழ, ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். ""ஆடிப்பூரத்தில் யாவரும் காண உன்னை மணம் முடிப்பேன்'' என்று அருளுகிறார்.

அந்த நாளும் வந்தது. தேவதச்சனால் கட்டப்பட்ட கல்யாண மண்டபத்தில் சிவன் எழுந்தருளுகிறார். சிவனாருக்கும் உமாதேவியாருக்கும் மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமால் முதலியோர் ஸ்ரீ பாடல நாதனுக்கும் (சிவன்) பாடல நாயகிக்கும் (உமாதேவி) பாணிக்கிரகணம் செய்கிறார்கள் என்பது புராணம்.

(திருப்பாதிரிப் புலியூர் திருப்புகழ் பாடலில் "அமலைமுனரிய தவஞ் செய் பாடல வனநகர்' என்ற அடிகளில் அருணகிரிநாதர் இந்தப் புராண நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.