தாய் தந்தையின் அன்பில் இறைவனின் அன்பு!

முதியோர்களை மதிப்பதும், அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதும் இஸ்லாமிய வழிமுறையாகும். இக்காலத்தில் முதியோர்கள் ஒரு சுமையாகவும், தொல்லையாகவும் புறம் தள்ளப்படுகிறார்கள்.
தாய் தந்தையின் அன்பில் இறைவனின் அன்பு!
தாய் தந்தையின் அன்பில் இறைவனின் அன்பு!
Published on
Updated on
1 min read


முதியோர்களை மதிப்பதும், அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதும் இஸ்லாமிய வழிமுறையாகும். இக்காலத்தில் முதியோர்கள் ஒரு சுமையாகவும், தொல்லையாகவும் புறம் தள்ளப்படுகிறார்கள்.

ஒருநாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். அங்கு கூட்டமாக அமர்ந்த நபர்களோ அம்முதியவருக்கு வழிவிடாமல் தாமதப்படுத்தினார்கள். 

இதைப் பார்த்த நபியவர்கள், ""யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!'' என்று நபித்தோழர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹபா அவர்களை இஸ்லாத்தை ஏற்கும் பொருட்டு நபியவர்களிடம் அழைத்து வருகிறார்கள்.  அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், ""அபூபக்கரே! வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே? நான் அங்கு வந்து சந்தித்து இருப்பேனே?'' என்றார்கள். 

""யாரசூலல்லாஹ், நீங்கள் வந்து என் தந்தையை சந்திப்பதை விட, என் தந்தை உங்களை வந்து சந்திப்பதுதான் ஏற்றமான செயலாகும்!'' என அபூபக்கர் (ரலி) அவர்கள் பதிலுரைத்தார்கள். பின்பு அபூகுஹபா அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார்கள் என்பது வரலாறு.

இயற்கையாகவே முதுமையின் வலியும், அதனால் ஏற்படும் பலவீனமும், தனிமையும் மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில், நாம் அவர்களைப் புறந்தள்ளுவது கொடிய ரணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

நபி (ஸல்) அவர்கள், ""இறைவா! என்னை முதுமையின் கஷ்டத்தை விட்டும் பாதுகாத்தருள்வாயாக!'' எனப் பலமுறை பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

"ஓர் இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்கு கண்ணியம் செய்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில், அவனை கண்ணியம் செய்யக்கூடிய ஒரு நபரை இறைவனே ஏற்படுத்துகிறான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுபோல், தாய், தந்தையைப் பேணுவது சுவர்க்கத்திற்குரிய செயல்களில் உள்ளதாகும்.  பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும்; பெற்றோர் வெறுக்கும் வகையில் நடக்கக்கூடாது.

பெற்றோரின் கருத்துப் பிடிக்கவில்லையென்றால், அதற்கு எதிராகப் பேசுவதைத் தவிர்த்து, அவர்கள் சொல்வதைச் "சரி' என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் மனம் புண்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது.  "தன் பெற்றோரை ஏசுபவன், மரணத்திற்கு முன்பு இவ்வுலகிலேயே தண்டனை அளிக்கப்படுவான்' என ஹதீஸில் வந்துள்ளது. மேலும், பெற்றோரைப் பற்றி உறவினர், நண்பர்களிடம் குறை கூறுவது தாழ்ந்த செயலாகும்.

இறைவனின் அன்பு, தாய் தந்தையின் அன்பில் இருக்கிறது;  இறைவனின் வெறுப்பு, தாய் தந்தையின் வெறுப்பில் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
- ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com