தேவியின் திருத்தலங்கள்: 48. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

மனப்பூர்வமான பக்தியுடன் தன்னை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் ஒளியேற்ற, கரு காத்த நாயகியாக திருக்கருகாவூரில் ஆட்சி புரிகிறாள் அம்பிகை. 
தேவியின் திருத்தலங்கள்: 48. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை
தேவியின் திருத்தலங்கள்: 48. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

"தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே 
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே:'
-செளந்தர்ய லஹரி 

பிறந்த குழந்தைகள் புத்திசாலியாகவும், விவேகம், பக்குவம் உடையவர்களாகவும் விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெற்றவர்கள். மனப்பூர்வமான பக்தியுடன் தன்னை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் ஒளியேற்ற, கரு காத்த நாயகியாக திருக்கருகாவூரில் ஆட்சி புரிகிறாள் அம்பிகை. 

முனிவர்கள், மகான்கள்,  அவதார புருஷர்களும் அம்பிகையை வணங்கி பலன் பெறுகிறார்கள். அன்னையாக வரும் அம்பிகை கருணையையே உடலாகத் தரித்திருக்கிறாள். அவளை பூஜித்தால் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள். அவளின் அருளால் உயிர் பிழைக்கும் குழந்தைகள் அவளையே நினைத்து உருகுகிறார்கள்.

அக்காலத்தில், முல்லைவனமாக இருந்த இடத்தில், நித்துருவர் என்ற முனிவர் தன் மனைவி வேதிகையுடன் வசித்து வந்தார். பல வருடங்களாக குழந்தை இல்லாத அவர்கள், முல்லைவன நாதரையும், அம்பிகையையும் மனதார வேண்டி பிரார்த்தனை செய்து வந்தார்கள். 

இதனையடுத்து வேதிகை கருவுற்றார். மூன்று மாதம் வரை கரு ஆரோக்கியமாக வளர்ந்தது. அந்த நேரத்தில் அவருக்கு உடல் அசதியும், சோர்வும் அதிகம் இருந்தது. 

ஒருநாள் நித்துருவர் வருண பகவானைத் தரிசித்து வர வெளியில் சென்றிருந்த நேரத்தில், ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். 

ஆசிரம வேலைகளால் களைத்துப் போயிருந்த வேதிகை மயக்கமாக இருந்ததால் எழுந்து வந்து உணவிட முடியவில்லை. அவளின் நிலையை அறியாத முனிவர், ""என்னை அவமதித்த வேதிகை, "ரயட்சு' எனப்படும் பயங்கர நோயால் பாதிக்கப் படுவாள்!'' என்று சாபமிட்டு விடுகிறார். அந்த நோயானது கருவிலிருந்த குழந்தையையும் தின்னத் தொடங்குகிறது. அதில் வேதிகையின் கரு கலைந்து விடுகிறது.

மனமுடைந்த வேதிகை, அம்பிகையை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்தினுள் வைத்து, குழந்தை  உருவாகும் நாள் வரை பாதுகாத்து காப்பாற்றிக் கொடுக்கிறாள். ஓர் அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. 

அவன் "நைந்துருவன்' என்று அழைக்கப்பட்டு ஈசன், அம்பிகையின் அருளைப் பெற்றான். தெய்வீகப் பசு காமதேனுவே அவனுக்குப் பால் கொடுத்தது. வேதிகையின் வேண்டுதலை ஏற்று, அம்பிகை "கர்ப்பரட்சாம்பிகை'யாக இங்கே கோயில் கொண்டாள். முல்லைவனமாக இருந்த பகுதி "திருக்கருகாவூர்' என வழங்கலாயிற்று! "கர்ப்ப ரட்சாம்பிகை' என்றாலே "கருவைக் காக்கும் அன்னை‘ என்றே பொருள்!

கண்கண்ட தெய்வமாக கர்ப்பிணிகளுக்கு விளங்கும் அன்னை, "பக்தர்கள் அழைத்ததும் வருவேன்!' என்று கூறும் விதத்தில், சதுர்புஜ நாயகியாக, நின்ற கோலத்தில், இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் காட்சி தருகிறாள். இங்கு வந்து அம்பிகையின் பாதத்தில் நெய் வைத்து வணங்கி, பின்னர், படி மெழுகிய நெய்யை, நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

இந்த ஊரில் வசிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதில்லை. குழந்தைப்பேறு வேண்டுகிற பெண்கள், இங்கு வந்து அம்பிகையின் கருவறைப் படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு வணங்கி, அர்ச்சனை செய்கிறார்கள்.

இங்குள்ள, சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே சுயம்பு. இதில் சுவாமி மட்டுமே மண்ணால் ஆனவர். முல்லைக் கொடி தல விருட்சமாகவும், பால்குளம் தீர்த்தமாகவும் இருக்கிறது.

குழந்தை வரம் கிடைத்தவர்கள் இங்கு வந்து தங்கம், வெள்ளித் தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி, அம்பிகைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, புடவை சாற்றுகிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும், எவ்விதத் தீங்கும் நேராமல் காக்கும் அம்பிகையை பல ஸ்தோத்திரங்கள் சொல்லி வணங்குகிறார்கள். 

"ஓம் கர்ப்பரட்சாம்பிகாயை ச வித்மஹே! 
மங்கள தேவதாயை ச தீமஹி,
தன்னோ தேவி ப்ரசோதயாத்...' என்ற காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை கூறி, பெண்கள் தேவியை வழிபடுகிறார்கள். இதனால் கருப்பை சம்பந்தமான உபாதைகள் நீங்குகின்றன என்று நம்புகிறார்கள். 

சித்தர்கள், கல்லை தங்கமாக்கலாம். ஆனால் மனதைத் தங்கமாக்க அம்பிகையின் தியானத்தால் மட்டுமே இயலும். செüந்தர்ய லஹரியில் அம்பாளைப் போற்றும் ஆதிசங்கரர், அம்பிகையின் புருவம் வளைந்த வில் போன்று காணப்படுவதற்கு ஓர் அழகான உபமானத்தைக் கூறுகிறார்.

"ஜகன்மாதாவான தேவி, தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலக உயிர்களுக்கு எல்லாம் எந்தத் துன்பமும் நேராமல் இருக்கவே முயற்சிக்கிறாள். அப்படி ஏதானும் நேர்ந்தால், அதை எப்படி நீக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்து இருக்கும்போது அவளின் புருவங்கள் வளைந்து காணப்படுகின்றன!' என்கிறார்.

அன்னையின் தாமரை முக தரிசனம் சகல தோஷங்களையும் போக்க வல்லது. "சூரியனின் ஒளி வீசினாலும் பாதை இருளாகவே உள்ளது. அதை நீக்க ஞானம் என்னும் ஒளியைத் தருவது அம்பிகையின் பாதங்களே!' என்கிறார் மூசு கவி.

தேவி ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை நம் பாவ இருளை நீக்குகிறாள். கர்ம வினைகளை நீக்கி, நம் குறைகளை நீக்குகிறாள். அன்னையின் அருளால் திருமணத் தடைகள் நீங்கி, நல்ல இல்லற வாழ்வு அமையும்; பெண்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், அறிவு, திறமை கொண்ட சத் புத்திரன் பிறப்பான்.

"ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையே நமஹ!'- என்று துதித்தால், நம் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்க அருள் புரிவாள் அம்பிகை!

அமைவிடம்: தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்து 7 கி.மீ. தொலைவில் திருக்கருகாவூர் திருத்தலம் அமைந்துள்ளது.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com