தேவியின் திருத்தலங்கள்: 37. கன்னியாகுமரி பகவதி அம்மன் 

அம்பிகை முழு சக்தி, வீரியத்துடன் நித்தம் தவம் செய்யும் யோகினியாய்க் காட்சியளிப்பது கன்னியாகுமரியில்.
தேவியின் திருத்தலங்கள்: 37. கன்னியாகுமரி பகவதி அம்மன் 
தேவியின் திருத்தலங்கள்: 37. கன்னியாகுமரி பகவதி அம்மன் 

"விஸுத்தெளதே ஸுத்தஸ்படிக - விஸதம் வ்யோம - ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமான - வ்யவஸிதாம்'

-செளந்தர்ய லஹரி

அம்பிகை முழு சக்தி, வீரியத்துடன் நித்தம் தவம் செய்யும் யோகினியாய்க் காட்சியளிப்பது கன்னியாகுமரியில். அசுரர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம், வரங்களை சுலபமாகப் பெற்று விடுகிறார்கள். அதன்பின், சில அசுரர்களை அழிக்க அம்பிகையே உக்ர ரூபம் எடுத்து வந்து அழிப்பாள். அப்படி பானாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவள் அம்பிகை.

அவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும், ஒரு கன்னிப்பெண்  ஒருத்தியால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்குகிறான்.

மென்மையான மனதும், தேகமும் கொண்ட ஒரு பெண் தன்னைக் கொல்ல முன் வர மாட்டாள் என்று நினைத்தான். ஆனால், அவனின் அட்டகாசம் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் ஈசனிடம் சென்று முறையிட, அவர்களிடம் கருணை கொண்ட ஈசன், தேவியை கன்னியாகுமரியில் அவதரிக்கச் செய்தார். 

தேவி அங்கு பிறந்து ஈசனை மணம் முடிக்க கடுமையான தவத்தை மேற்கொண்டார்.

அந்த நேரம் ஈசன் "தாணுமாலயன்' என்ற பெயருடன் சுசீந்திரத்தில் வாழ்ந்து வந்தார். தேவியின் அழகைக் கண்ட அவர் அம்பிகையை மணக்க விரும்பினார். முக்காலமும் உணர்ந்த நாரத முனிவர், இத்திருமணத்தைப் பேசி முடிவு செய்து, ஒரு நிபந்தனையை வைக்கிறார். 

சூரிய உதயம் நிகழும் ஒரு நாழிகைக்கு முன்பே திருமணம் நடக்கும் இடத்திற்கு மணமகன் வந்து விட வேண்டும் என்பதே அது. ஈசனை மணக்கும் ஆவலில் ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று தவம் செய்த அம்பிகை ஆசை, மகிழ்ச்சி, பூரிப்பு என்ற உணர்வுகளில் நாணத்துடன் காத்திருக்கிறாள்.

ஆனால் கன்னிப் பெண்ணாக அம்பிகை இருந்தால்தான் பானாசுரனை வதம் செய்ய முடியும். எனவே, நாரதர் தன் கலகத்தை ஆரம்பித்தார். 

சுசீந்திரத்தில் இருந்து ஈசன் குமரி நோக்கிக் கிளம்பினார். அதே நேரம் நாரதர் சேவலாக உருவெடுத்து கூவினார். அதைக்கேட்டு, முகூர்த்த நேரம் தாண்டி விட்டது என்று ஈசன் மீண்டும் சுசீந்திரத்திற்குத் திரும்பி விட்டார்.

ஈசன் வருவார் என்று காத்திருந்த தேவி, தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து கொதித்தெழுந்தார். அந்த நேரம் அம்பிகையின் அழகில் மயங்கிய பானாசுரன்,  தன்னை மணந்து கொள்ளும்படி அம்பிகையை வற்புறுத்துகிறான். 

அவளைக் கவர்ந்து செல்ல முயல்கிறாள். 

உக்கிரமான கோபத்துடன் இருந்த அன்னை, அசுரனை ஒரு வாளால் தலையைக் கொய்து சம்ஹாரம் செய்கிறாள்.

இந்தக் காட்சி ஆலயத்தின் கருவறையின் கிழக்குச் சுவரில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. நவராத்திரி விழாவின்போது இந்த அசுர சம்ஹாரத்தை தத்ரூபமாக நடத்திக் காட்டுகிறார்கள்.

சம்ஹாரம் முடிந்த பின், ஈசன் தன்னை மணக்க வருவான் என்று ஒற்றைக் காலில் தவம் செய்கிறாள் அன்னை. பாறையின் மீது அம்பிகையின் ஒற்றைக்கால் சுவடு பதிந்த தடம் இன்றும் இருக்கிறது. 

தேவியின் ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டது இந்த ஆலயம். 

சங்க இலக்கியங்களும், புராணங்களும் இத்திருத்தலத்தின் மகிமையைக் கூறுகின்றன. ராமர் இலங்கை செல்ல முதலில் இங்கிருந்துதான் பாலம் அமைக்க எண்ணினார். அதன் பிறகு, தேவியின் உத்தரவுப்படி ராமேஸ்வரம் சென்றார். எனவே இத்தலம் "ஆதிசேது' என்று அழைக்கப்படுகிறது.

அன்னை கிழக்கு நோக்கி தரிசனம் தந்தாலும், அந்தப் பக்கத்து வாசல் மூடியே இருக்கிறது. காரணம் அன்னையின் ஒளி மிகுந்த மூக்குத்தியே. 

அசுரனை அழித்த அன்னை, தன் கோப சக்தியை எல்லாம் ஓர் ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி, சாந்தமாகி நின்றாள். இங்கு வந்த கப்பல்கள் அன்னையின் மூக்குத்தி ஒளியைப் பார்த்து கலங்கரை விளக்கின் ஒளி என்று இங்கு வந்து பாறையில் மோதி விபத்துக்குள்ளானதால், கிழக்கு வாசல் மூடப்பட்டு, பக்தர்கள் வருகைக்காக வடக்குப் பக்கம் வாசல் அமைத்தார்கள்.

"நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை'- என்று பாடுகிறார் பாரதி. நான்கு புறமும் மதில் சுவர்கள் சூழ, பரந்த நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. உள் மண்டபத்தில் அன்னையின் கருவறை அமைந்திருக்கிறது. அழகு மிளிர நின்றகோலத்தில் காட்சி தருகிறாள். அவளின் மணிமுடியில் பிறைமதி திகழ்கிறது.

வெளிப்பிரகாரம் அகன்ற இடைவெளியுடன் அமைந்துள்ளது. தினமும் அன்னை இப்பிரகாரத்தில் பவனி வருகிறாள். தாயை தரிசிக்கவும், அதிகாலை சூரிய உதயத்தையும் காண, தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. கோயில் உற்சவ மூர்த்தியின் பெயர்கள் "தியாக செüந்தரி', "பால செüந்தரி' எனவும், புனித தீர்த்தம் "பாபநாச தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டாள் விரைவில் திருமணம் நிச்சயமாகும். காசி செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து கடலில் நீராடி, பித்ரு காரியங்கள் செய்தால் அதே பலன்கள் கிடைப்பதுடன், புண்ணிய பலன்கள் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். 

"தாயே! இரவின் இருளிலிருந்து தண்ணென்ற சந்திரனின் கிரணங்கள் ஒளி கொடுத்துக் காப்பதைப்போல், ஆதித் தம்பதியரான உங்கள் ஜீவ ஒளி, எங்கள் இதயத்து இருளை அகற்றுகிறது' என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

தன்னை மணம் முடிக்க ஈசன் வராத கோபத்தில் அம்பிகை, திருமணத்திற்காகச் சமைத்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள், மணவறை அலங்காரப் பூக்களை எடுத்து கடற்கரை மணல் பரப்பில் வீசினாள். இதனால்தான் கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்பு, வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது என்கிறார்கள்.

இங்கு வந்து அம்பிகையை வணங்கினால், நம் மனதில் உள்ள அசுர குணங்களை அழித்து, வண்ண மயமான வாழ்வையும், சகல செளபாக்கியங்களையும் அவள் அளிப்பாள் என்பது கண்கூடு.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com