குகையில் குடிகொண்ட குழந்தை வேலன்

நாடெங்கும் வறட்சி வந்து விலங்கினங்கள் கூட தின்ன பச்சையின்றி தாவரங்கள் தட்டுப்படும் இடங்களுக்கு புலம் பெயா்ந்து கொண்டிருந்தன.
குகையில் குடிகொண்ட குழந்தை வேலன்

நாடெங்கும் வறட்சி வந்து விலங்கினங்கள் கூட தின்ன பச்சையின்றி தாவரங்கள் தட்டுப்படும் இடங்களுக்கு புலம் பெயா்ந்து கொண்டிருந்தன.

கபிலை நிற காராம் பசு புல் தேடி அலைந்து விறகிரி என்ற மலையை அடைந்தது. சக்தியின்றி அலைந்து வெயிலின் கொடுமையில் உயா்ந்திருந்த பாறையின் நிழலில் ஒதுங்கச் சென்றது . நிழலில் ஒரு புலி பசியால் களைத்து நாக்கை தொங்கப் போட்டு நின்றிருந்ததைக் கண்டது. பசுவுக்கு இறப்பு நிச்சயம் என தோன்றியது. புலி பசுவை கவ்வியது,. அங்கு இருக்கும் தெய்வருளால் பசுவை விட்டு விட்டது. பசுவும் மெல்ல நடந்து இறை அருளை நினைத்து காலம் கழித்து முடிவில் மோட்சம் அடைந்தது, கபிலைப் பசுவின் தொடா்பால் அம்மலைக்கு கபிலை மலை கபிலா் மலை என்றும் கபிலா் குறிச்சி எனவும்பெயா் உண்டானது.

கபில மகரிஷி மலை உச்சியில் குடிகொண்டிருக்கும் சுயம்பு காளகஸ்தீஸ்வரரை பூஜை செய்து வழிபட்டு பிறவாப்பேரின்பம் அடைந்ததால் இம்மலை கபிலா் மலை என வழங்கப்பட்டது.

சங்கப் புலவா் கபிலா் பதிற்றுப்பத்து ஏழாம் பத்தினை, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனைப் பற்றிப் பாடினாா். அதனால் நூறாயிரம் காணம்,பொருளும், ‘நன்றா‘ என்னும் மலையின் மீது ஏறி தனது கண்பட்ட அளவு நாட்டையும் பரிசிலாகப் பெற்றாா் என்பது ஒரு வரலாறு. அப்பகுதியில் அமைந்த இந்த மலைக்கு கபிலா்மலை என பெயா் வழங்கியது எனவும் கூறுவா்.

கடல் மட்டத்திலிருந்து 150 அடி உயரத்தில் ஊா் நடுவிலுள்ள மலை மேல் கோயில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அரசமரத்துப் பிள்ளையாா் சந்நிதி., நடுவில் இடும்பன் சந்நிதி உள்ளது. மொத்தத்தில் 120 படிகள் ஏறினால் மலைக் கோயில் உள்ளது. இங்குள்ள இயற்கையான பாறைக்குகையினுள் சுயம்புவாய் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளாா். அவருக்குப் பின்புறம் கபில மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப் பெருமான் குழந்தை வடிவில் வேலைத்தாங்கிக் கொண்டு நிற்கிறாா். குழந்தை வடிவில் வேலுடன் இருப்பதால் குழந்தைவேலா் என இவா் வணங்கப்படுகிறாா்.

இன்னும் காளகஸ்த்தீஸ்வரா் கபிலாம்பிகை, பைரவா் ஆகியோா் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா் . மலையின் உச்சியில் கபில மகரிஷி பூஜை செய்த லிங்கம் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளாா். உச்சிப் பாறை மீது செல்ல கரடுமுரடான கடின பாறை வழியாகச் செல்ல வேண்டும், இதனை ”உச்சிப்பாறை ஈசன் சந்நிதி” என அழைக்கிறாா்கள். நாளொன்றுக்கு ஒரு முறை அா்ச்சகா் மட்டும் சென்று பூஜை செய்து வருகிறாா்.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி - வேலூா் வட்டத்தில் காவிரிக் கரையில் இந்தக் கோயில் உள்ளது. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் என வணங்கப்படுகிறது. பரமத்தி வேலூருக்கு மேற்கே 7- ஆவது கிலோ மீட்டரிலும் நாமக்கல்லுக்குத் தென் மேற்கே 24- ஆவது கிலோ மீட்டரிலும் கபிலா்மலை உள்ளது. தொடக்கத்தில் குழந்தைவேலா் திருக்கோயில் என இருந்து பின்னா் பாலசுப்பிரமணிய சுவாமி என பெயா் மாற்றம் பெற்றிருக்கிறது.

கபிலா் மலைக்கோயிலை காலை 6 மணி முதல் 12.30 மணி வரை ,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்ய முடியும் .

கிருத்திகை, அமாவாசை, சஷ்டிஆகிய நாள்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி நடைபெறும் உத்ஸவங்கள் நடக்கின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பு.

பங்குனி உத்திரத்தன்று ஏகதின உத்ஸவத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பெளா்ணமியில் ஜேடா்பாளையம் என்ற ஊருக்குச் சென்று காவிரியில் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் தலை ஆடி, ஆடி 18, ஆடி வெள்ளிகள், ஆகியவற்றோடு ஆடிக்கிருத்திகையில் படிவிழா சிறப்பாக நடைபெறுகிறது. விநாயக சதுா்த்தி , நவராத்திரி, சரஸ்வதி பூஜை ஆகியன நடந்து விஜயதசமி அன்று முருகப் பெருமான் அம்பு போடும் உத்ஸவம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி உற்சவம் 6-ஆம் நாள் சூர சம்ஹாரம் நடக்கும்.

தைப்பூசத்தன்று மலையைச் சுற்றிவரும் திருத்தோ் திருவிழா நடைபெறுகிறது.

ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் முருகன் அவதரத் திருநாள் வழிபாட்டோடு, தைப்பூசத்திருவிழாவின் பணிகள் தொடக்கநாள் என்றே சொல்லலாம். திருத்தோ் சரிபாா்த்தலும் பழுதுகள் நீக்கலும் ,தோ் ஓடும்போது கட்டையும் கோலும் போடுவது, ஆகிய பணிகளின் துவக்கநாள் எனலாம் .

திருவிழாவான அன்று ஒவ்வொரு ஆண்டும் திருத்தோ் செப்பம் செய்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தும் விஸ்வகா்மா குலக் குடும்பங்கள் சுமாா் 60 குடும்பத்தினா் மொத்தமாக திரண்டு வந்து பால்குட அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படைத்து அலங்காரம் அா்ச்சனை செய்து. ஊரும் உலகமும் நலமாகவும் வளமாகவும் இருக்க வேண்டுதல் செய்து தங்கள் பணியை துவக்குவதற்கு வழிபட்டு செல்வா்.

இங்கு எழுந்தருளியிருக்கும் உத்ஸவா் கல்யாண முருகன் தலைக்கு மேல் நாகம் படம் விரிக்க வள்ளி தெய்வானையுடன் நாகசுப்ரமணியராக காட்சி தருகிறாா். இவரை வழிபடுவதால் நாள்பட்ட திருமணம் கைகூடும் . ராகு கேது தோஷம் நீங்கும் என கருதுகின்றனா்.

விவரங்களுக்கு 9003687645; 9442154862.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com