ஆக்கிரமிப்பில் ஈடுபடும் எதிரிகளை தோற்கடிக்கும் திறன் சீன ராணுவத்துக்கு உண்டு: ஜீ ஜின்பிங்

ஆக்கிரமிப்பில் ஈடுபடும் எதிரிகளை தோற்கடிக்கும் திறன் சீன ராணுவத்துக்கு உண்டு: ஜீ ஜின்பிங்

சீனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் (ஊடுருவும்) அனைத்து எதிரிகளையும் முழுமையாகத் தோற்கடிக்கும் திறன், தங்கள் நாட்டு ராணுவத்திடம் உண்டு என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார்.

சீனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் (ஊடுருவும்) அனைத்து எதிரிகளையும் முழுமையாகத் தோற்கடிக்கும் திறன், தங்கள் நாட்டு ராணுவத்திடம் உண்டு என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார்.

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பதால், பதற்றான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, சீன அதிகாரிகள், சீன அரசுப் பத்திரிகையாளர்களும் கருத்துகளை வெளியிடும்போது, சீனாவுக்குச் சொந்தமான பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியிருப்பதாகவும், ஆக்கிரமித்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தபோதிலும், சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், சீனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் அனைத்து எதிரிகளையும் முழுமையாகத் தோற்கடிக்கும் திறன் சீன ராணுவத்துக்கு உண்டு என்று ஜீ ஜின்பிங் பேசியிருப்பது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
சீன ராணுவமான மக்கள் விடுதலைப் படை உருவாக்கப்பட்டதன் 90}ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, பாலைவனப் பிரதேசமான ஜூரிஹே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஜீ ஜின்பிங் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பேசியதாவது:
கம்பீரமான நமது ராணுவத்திடம், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அனைத்து எதிரிகளையும் தோற்கடிப்பதற்கான திறமையும், உறுதியும் உண்டு என்று நம்புகிறேன். ராணுவம் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் நடைமுறையையும், அடிப்படைக் கொள்கையையும் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உறுதியாக பின்பற்ற வேண்டும். கட்சியின் உத்தரவுக்கு கீழ்ப்படிவதுடன், அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். கட்சியால் சுட்டிக்காட்டப்படும் இடம் வரையிலும் நீங்கள் அணிவகுத்துச் செல்ல வேண்டும் (சென்று தாக்குதல் நடத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார்).
நாட்டு மக்களுக்கு மனமார சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை மக்கள் விடுதலைப் படை அதிகாரிகளும், வீரர்களும் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
சீனாவுக்கு தற்போது மிகவும் சக்திவாய்ந்த ராணுவம் தேவைப்படுகிறது. ஆதலால், மக்கள் விடுதலைப்படையை உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமைதியான சூழ்நிலையே, நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அந்த அமைதியை பாதுகாக்க வேண்டியது, மக்கள் விடுதலைப்படையின் பொறுப்பாகும் என்றார் ஜீ ஜின்பிங்.
கடந்த 2015}ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட அணிவகுப்புகளில், இந்த அணிவகுப்பு மிகப்பெரியதாகும். இதில், சீன மக்கள் விடுதலைப் படை வீரர்கள் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போர் விமானங்கள், அணு ஆயுதம் ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் அணிவகுப்பில் பங்கேற்றன. ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் குதித்து சாகசம் செய்து காண்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com