ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் மர்மநபர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காபூலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. அதிபர் அஷ்ரப் கனியை வெளிப்படையாக விமர்சித்து வரும் பால்க் மாகாணத்தின் ஆளுநரான அட்டா முகமது நூரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது, திருமண மண்டபத்துக்குள் நுழைய முயன்ற மர்ம நபரை போலீஸார் சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீஸாரிடம் வசமாக சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் அந்த நபர் தன்னுடைய உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில், ஏழு போலீஸார் உள்பட ஒன்பது பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏழு போலீஸார், இரண்டு பொதுமக்கள் என ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமண விழாவில் நடைபெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலின்போது ஆளுநர் முகமது நூர் அங்கு இருக்கவில்லை என அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார்.
ஜமியாத்-ஏ-இஸ்லாம் கட்சியைச் சேர்ந்த முகமது நூர், அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது தேசிய ஐக்கிய கூட்டணி அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும் ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரைக் குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.