ரஷிய விமான விபத்துக்குக் காரணம் என்ன?
ரஷியாவில் 71 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து, கடுமையான பனியிலும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


ரஷியாவில் 71 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து, கடுமையான பனியிலும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரஷியத் தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, டொமொடெடோவோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமை புறப்பட்ட அன்டோனோவ் ஏஎன்-148 ரக விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 2:28 மணிக்கு ரேடார் கண்களிலிருந்து மறைந்தது.
விமான நிலையத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள ரமென்ஸ்கி மாகாணத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில், அந்த விமானத்திலிருந்த 65 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும், அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு 5 வயது சிறுமி உள்பட 3 பேர் சிறுவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.
ரஷியாவைச் சேர்ந்த சாரடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், யுரல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஓர்ஸ்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு அதிகாரிகள், சம்பவப் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் கடுமையான பனி நிலவி வரும் சூழலிலும், தடயவியல் மற்றும் குற்றவியல் நிபுணர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் 30 ஹெக்டேர் பரப்பளவுக்கும் மேல் பரவிக் கிடப்பதால், இந்த ஆய்வுப் பணிகளை நிறைவு செய்ய ஒரு வார காலம் பிடிக்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஏற்கெனவே விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் 900-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அமைச்சர் விளாதிமீர் புஷ்கோவ் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மிகப் பெரிய நிலப்பரப்பில் சிதறிக் கிடப்பதாலும், கடுமையான பனி காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாலும் முக்கிய தேடுதல் பணிகளை ஒரு வார காலத்துக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானம், 7 ஆண்டுகள் பழைமையானது என்றும், மற்றொரு விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து அந்த விமானத்தை சாரடோவ் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு வாங்கியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...