/

பிரிட்டன்: பெண்களை ஆபாச கோணத்தில் படமெடுப்பது கிரிமினல் குற்றமானது

பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமான கோணங்களில் படமெடுப்பது பிரிட்டனில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2019, 2:46 am IST


பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமான கோணங்களில் படமெடுப்பது பிரிட்டனில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தப் பிரசாரத்தை முன்னின்று நடத்திய கீனா மார்ட்டின் கூறியதாவது: 
ஆபாசமான கோணங்களில் படமெடுப்பதைக் குற்றமாக்கும் சட்டத்துக்கு அரசி எலிசபெத் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது. இதனை வெறும் சட்ட விவகாரமாக மட்டும் பார்க்கக் கூடாது. நியாயம் வேண்டி மிகச் சாதாரணமானவர்கள் கூட தொடர்ந்து போராடினால் அதற்கான பலன் கிடைக்கும் என்பதையே இது காட்டுகிறது என்றார் அவர்.
லண்டனைச் சேர்ந்த ஜீனா மார்ட்டின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது, அவருக்குத் தெரியாமலேயே ஆபாசமான கோணத்தில் அவர் படமெடுக்கப்பட்டார்.
அதற்கு எதிராக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அது அலட்சியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆபாசமான கோணத்தில் படமெடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதுதொடர்பான அவரது மனுவில் 58,000-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர். இந்த விவகாரத்தில் தொழிலாளர் கட்சியும் ஜீனா மார்ட்டினுக்கு ஆதரவளித்தது. 
அதையடுத்து, ஆபாசக் கோணங்களில் படமெடுப்பதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அந்தச் சட்டத்துக்கு தற்போது அரசி எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளதையடுத்து, அது அமலுக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.