கரோனா: தூத்தூர் மீனவ கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்
கரோனா: தூத்தூர் மீனவ கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்

9 பேருக்கு கரோனா தொற்று: தூத்தூர் மீனவ கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்

பங்குத் தந்தை, கல்லூரி மாணவி உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பங்குத் தந்தை, கல்லூரி மாணவி உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கல்லூரியில் படித்து வந்த தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கு கரோனா தொற்று இருந்தது கடந்த 17ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மாணவியின் தாத்தா, மாமா, உறவினரின் 3 வயது குழந்தை ஆகியோருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 35 வயதுடைய தூத்தூர் தேவாலய பங்குத் தந்தைக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பங்குத் தந்தைக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பினிஸ் ஜோசப் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சனிக்கிழமை 40 பேரிடமிருந்து சளி மாதிரி பரிசோதனைக்கு எடுத்தனர். இதில் 33 வயது, 40 வயது, 44 வயது, 54 வயது என 4 ஆண்களுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது. அவர்களையும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி கடந்த 5 நாள்களில் தூத்தூர் கிராமத்தில் மட்டும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதி பங்குத் தந்தை, இணை பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், மற்றும் தூத்தூர் பங்குப் பேரவை நிர்வாகிகள் என 40 பேரிடம் ஞாயிற்றுக்கிழமை சளி மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்தூர் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து திங்கள்கிழமை காலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி, குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் பி. சாஸ்திரி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தூத்தூர் மீனவ கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தூத்தூர் கிராமத்தை இணைக்கும் சாலைகள், குறுக்குப் பாதைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. அப்பகுதியில் தூத்தூர் ஊராட்சித் தலைவர் லைலா தலைமையில் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. தூத்தூர் பகுதியில் உள்ள கடைகள், இ சேவை மையம், நூலகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டன. 

தூத்தூர் பகுதி மீனவர்கள் மீன் சில்லறை வியாபாரத்துக்கு வருவதையடுத்து நடைக்காவு மீன்சந்தை மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உள்பட்ட நித்திரவிளை, காஞ்சாம்புறம் மீன்சந்தைகள் மூடப்பட்டன. தூத்தூர் பகுதியில் உள்ள வங்கி, அஞ்சலகம் மட்டும் திறந்திருந்தது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலம் கரோனா பரவும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததும் இந்நிறுவனங்கள் மூடப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தூத்தூர் ஊராட்சித் தலைவி லைலா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுகளில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com