தலிபான்கள் ஆட்சியில் 318 ஊடக நிறுவனங்கள் மூடல்: அதிர்ச்சி தரும் அறிக்கை!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு 318 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு 318 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றினர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான், தலிபான்கள் வசம் சென்றபிறகு, அங்கு மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களில் உள்ள 318 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 

பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFJ) வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 51 தொலைக்காட்சி நிலையங்கள், 132 வானொலி நிலையங்கள் மற்றும் 49 ஆன்லைன் ஊடகங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. இங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, செய்தித்தாள்களை கடுமையாகப் பாதித்துள்ளது. தற்போது 114 இல் 20 செய்தித்தாள்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன. 

மேலும், தலிபான் ஆட்சிக்கு முன்னதாக 5,069 பத்திரிகையாளர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது 2,334 பத்திரிகையாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 

வேலை இழந்த பத்திரிகையாளர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள். தற்போது ஊடகத்தில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 243 மட்டுமே. 

'ஆப்கனில் ஊடகங்களின் தற்போதைய நிலைமை குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊடக நிறுவனங்கள் மட்டுமே செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என்று ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஹுஜதுல்லா முஜாதிதி தெரிவித்தார்.

தற்போதைய ஆப்கானிஸ்தான் சூழ்நிலையில் தகவல்களை அணுகும் செயல்முறையைப் பாதுகாக்க, ஊடகங்களில் முதலீடு செய்ய சர்வதேச சமூகத்தை அழைப்பதாக ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கவுன்சிலின் தலைவர் ஹபிசுல்லா பராக்சாய் கூறினார்.

அதுபோல ஊடகவியலாளர் சமியுல்லா பாம் கூறுகையில், ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால் ஊடக நிறுவனங்கள் இயங்குவதை நிறுத்தி விடும், ஊடகத்துறையே சரிந்துவிடும் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com