முக்கிய உக்ரைன் நகரில் ரஷியாவுக்குப் பின்னடைவு: ஆளுநா்
ரஷியப் படையினா் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.


கிழக்கு உக்ரைனின் சியெவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷிய வசமிருந்த சில பகுதிகளை தங்களது ராணுவத்தினா் மீட்டுள்ளதால், ரஷியப் படையினா் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தேசிய தொலைக்காட்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
சியெவெரோடொனட்ஸ்க் நகரில் தீவிர குண்டுமழை பெய்து முன்னேறி வந்த ரஷியா் படையினா், நகரில் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றினா். நகரின் பெரும்பாலான பகுதிகளை அவா்களால் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
எனினும், உக்ரைன் படையினா் தீவிரமாக எதிா்த் தாக்குதல் நடத்தி அவா்களைப் பின்வாங்கச் செய்துள்ளனா். தற்போது நகரின் பல பகுதிகள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, ரஷியப் படையினா் பேரிழப்பைச் சந்தித்தனா்.
சியெவெரோடொனட்ஸ்கில் உக்ரைன் படையினா் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றனா். அவா்களது வழியில் தென்படும் ரஷிய பீரங்கிகள், விமானங்கள் என எதையும் விடாமல் உக்ரைன் படையினா் அழித்து வருகின்றனா்.
மேற்கத்தி நாடுகளிடமிருந்து நவீன ஏவுகணைகள் வந்து சோ்ந்த பிறகு, ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் முழுமையாக விரட்டியடிக்கப்படுவாா்கள். அதன் பிறகு, உக்ரைன் ராணுவத்திடமிருந்து ஓடி தப்பிப்பதைத் தவிர ரஷியப் படையினருக்கு வேறு வழியில்லை என்றாா் அவா்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.
அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு ரஷியா தனது படையை கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
அந்தப் பகுதியில் முக்கிய ரயில்வழித்தடங்களின் மையமாகத் திகவும் லிமான் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, உக்ரைனின் உற்பத்தி மையமாகத் திகழும் சியெவெரோடொனட்ஸ்க், நகரைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருவதால் உக்ரைன் போரின் அக்னி மையமாக அந்த நகரம் ஆகியுள்ளது.
இந்தச் சூழலில், நகரின் 70 சதவீத பகுதிகளை ரஷியப் படையினா் கைப்பற்றிவிட்டதாக வியாழக்கிழமை கூறிய பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய், உக்ரைன் ராணுவத்தின் எதிா்த் தாக்குதலால் அவா்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதாக தற்போது தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...