பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்!

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார்.

கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனக்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ரிஷி சுனக் கடந்த 2009-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார். 2020-இல் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிதித் துறையைத் திறமையாகக் கையாண்டதால், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார் ரிஷி சுனக்.

போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவுக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸுக்கு எதிராகப் போட்டியிட்டார். இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com