ஜெமினி செய்யறிவு தொழில்நுட்பம், ஏமாற்றிய கூகுள்!

ஜெமினி செய்யறிவு தொழில்நுட்பம், ஏமாற்றிய கூகுள்!

கூகுள் புதிதாக அறிமுகப்படுத்திய ஜெமினி செய்யறிவு தொழிநுட்பத்தின் காணொளி போலியானது எனக் குற்றச்சாட்டு பரவிவருகிறது. 

தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கூகுள் நிறுவனம், போலி காணொளியைப் பயன்படுத்தியதாகத் தகவல் பரவிவருகிறது. 

'ஹேன்ட்ஸ் ஆன் ஜெமினி' (Hands On Gemini) என்ற பெயரில் காணொளி ஒன்றின் மூலம் தனது செய்யறிவு தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய கூகுள், ஜெமினியுடன் தங்களுக்குப் பிடித்த உரையாடல்களை அதில் பகிர்ந்திருப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் அந்தக் காணொளியில் உள்ள உரையாடல் உண்மையானவை இல்லை என்பது கூகுளின் மற்றொரு ப்ளாக்(Blog) பதிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தக் காணொளியில் நடைபெறும் உரையாடல்கள் அதில் காட்டியது போல நடைபெறவில்லை. உதாரணத்திற்கு, கை அசைவுகளைப் பார்த்தவுடன் பதிலளிக்கும் ஜெமினிக்கு, உண்மையில் புகைப்படங்கள் மூலமாகவே தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதாவது, அந்தக் காணொளியில் கையை நன்றாக அசைத்தவுடன் 'நீங்கள் என்ன செய்கிறீர்கள் என எனக்குத் தெரியும்! ராக், பேப்பர், சிசர்ஸ் விளையாடுகிறீர்கள்' எனப் புத்திசாலித்தனமாக பதிலளிப்பதுபோல் காட்டப்பட்டிருந்தது.

ஆனால், உண்மையில் ஜெமினிக்கு மூன்று புகைப்படங்கள் காட்டப்பட்டு, 'இதில் என்ன காட்டப்படுகிறது' என ஒருவர் கேட்க, ஜெமினி அதற்கு 'ஒரு கையில் இரண்டு எனும் எண்ணைக் காண்பிக்கிறீர்கள், மற்றொரு கையை மடித்து வைத்திருக்கிறீர்கள்' எனப் பதிலளிக்கிறது. பின் 'இது என்ன விளையாட்டு?' என மீண்டும் ஒரு கேள்வி கேட்ட பின்தான் ஜெமினி 'ராக் பேப்பர் சிசர்' எனப் பதிலளிப்பதாக கூகுள் தனது ப்ளாக் பக்கத்தில் எழுதியுள்ளது. 

கூகுள் வலைதளத்தில் சாதாரணமாக பதிலளிக்கும் ஜெமினி
கூகுள் வலைதளத்தில் சாதாரணமாக பதிலளிக்கும் ஜெமினி
கூகுள் காணொளியில் புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் ஜெமினி
கூகுள் காணொளியில் புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் ஜெமினி

காணொளியிலும் கூகுளின் வலைதளப் பதிவிலும் உள்ள இதுபோன்ற முரண்களால் குழம்பி, கூகுள் போலி வீடியோவைப் பகிர்ந்துள்ளது எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், அந்தக் காணொளி முழுவதும் உண்மையல்ல, ஒரு உதாரணம்தான் என கூகுள் கூறியிருந்தாலும், "ஜெமினியுடன் எங்களுக்குப் பிடித்த உரையாடல்கள்" எனத் துவங்கும் காணொளியில், ஜெமினியை உண்மையில்லாத உரையாடல்கள் மூலம் புத்திசாலியாக காட்ட முயற்சித்திருப்பது அதிருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

வரும் டிசம்பர் 13 அன்று ஜெமினி ப்ரோவை (Gemini Pro) கூகுள் வெளியிடவிருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் கூகுள் மீது வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com