இஸ்ரேல் இதற்கு பதில் சொல்லவேண்டும்: அம்னெஸ்டி லெபனான்!

தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
லெபனான் அல்-பஸ்டான் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்
லெபனான் அல்-பஸ்டான் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்

அரசு சார்பற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி, அக்.10 முதல் அக்.16 வரையிலான லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்பட்டதாக புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து நடந்து வந்த தாக்குதலில் இஸ்ரேல், இந்த சர்ச்சைக்குரிய வெடிமருந்தைப் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

1983 மாநாட்டில் சர்வதேச மனித உரிமை சட்டங்களால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிமருந்துகளை இஸ்ரேல் மக்கள் குடியிருப்பு மீதும் போர் அல்லாத களத்திலும் பயன்படுத்தியதை ஆதாரங்களோடு முன்வைத்துள்ல அம்னெஸ்டி, இதனை போர்க் குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

தைரா பகுதியில் இஸ்ரேல், வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்து ஏந்திய கணைகளை வீசியது
தைரா பகுதியில் இஸ்ரேல், வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்து ஏந்திய கணைகளை வீசியது

அம்னெஸ்டியின் துணை வட்டார இயக்குனர் அயா மஜூப் பேசும் போது, “இது பயங்கரமான செயலையும் தாண்டியது. சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. லெபனான் எல்லை நகரமான தைராவில் அக்.16 நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் வீடுகளும் கார்களும் எரிந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

வெள்ளை பாஸ்பரஸ் என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகம், கையெறிகுண்டுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும்.

காற்றில் வீசப்படும் போது எரிந்து அதீத வெம்மையோடு இலக்கைத் தாக்கும். கடுமையான புகையை ஏற்படுத்தும் பாஸ்பரஸ் பட்டாலோ சுவாசித்தாலோ மக்களுக்கு நுரையீரல் சீர்கேடு ஏற்படுவதோடு உறுப்பு செயலிழப்பு, கடுமையான காயங்கள், சிகிச்சை அளிக்க இயலாத தீப்புண்கள் ஆகியவை ஏற்படக்கூடும். உடலின் 10 சதவீத பகுதியில் இந்த வெடிமருந்து பட்டாலே அபாயகரமான விளைவு ஏற்படும்.

லெபனானின் எல்லை கிராமமான ஐடா அல்-சாப் மீது இஸ்ரேலின் தாக்குதல்
லெபனானின் எல்லை கிராமமான ஐடா அல்-சாப் மீது இஸ்ரேலின் தாக்குதல்

40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலிவ் மரங்கள் இதனால் எரிந்திருக்கின்றன. லெபனான் அரசு, ஐ.நாவில் இது குறித்து போர் குற்றதிற்கான புகாரை இஸ்ரேல் மீது அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் லெபனானின் வேளாண் துறை அமைச்சர் அப்பாஸ் அல் ஹஜ் ஹசான். 

இஸ்ரேல் இந்த வெடிமருந்தைப் பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. இந்தப் போரில் பல முறை பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com