போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சிக்கும் ஹமாஸ்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சிக்கும் ஹமாஸ்

இஸ்ரேலுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 17 பேர் கொண்ட 3வது பிணைக் கைதிகள் குழு விடுதலையாகியிருக்கும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளுக்கும் தலா ஒரு நாள் போர்நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்ததற்கு பதில் நடவடிக்கையாக கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரையில் பாலஸ்தீன சிறைக் கைதிகள் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது.

இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் சா்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில், 5 பிணைக் கைதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், கத்தாா் தலைமையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் கடந்த 22-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 4 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன.

சண்டை நிறுத்தத்தின்போது 50 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேலும் விடுவிப்பதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போா் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, 25 பிணைக் கைதிகளை ஹமாஸும், 39 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேலும் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தன. 2-ஆவது கட்டமாக சனிக்கிழமை பிணைக் கைதிகள் மேலும் சிலா் விடுவிக்கப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், போா் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை இஸ்ரேல் ராணுவம் மீறுவதாகக் கூறி, பிணைக் கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் தாமதப்படுத்தியது.

பின்னா், சனிக்கிழமை இரவு தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த 4 போ், இஸ்ரேலியா்கள் 13 போ் என 17 பேரை ஹமாஸ் விடுவித்தது.

பிணைக் கைதிகளில் பெரும்பாலானோர் நேரடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தினர் நண்பர்கள் பலரும் திரண்டிருந்து ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.  சிலர் எகிப்து நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

விடுவிக்கப்பட்டவர்களில் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. இஸ்ரேல் - அமெரிக்க குடியுரிமை பெற்ற 4 வயது குழந்தையான ஈடனின் பெற்றோர் அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. குழந்தையின் விடுதலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவள் எப்படி இதனைத் தாங்கிக் கொண்டால் என்பதை கற்பனைசெய்தும் பார்க்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அக்குழந்தை எப்படி இருக்கிறார் என்ற தகவலும், இன்னும் எத்தனை அமெரிக்க பிணைக் கைதிகள் இருக்கிறார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை, எனினும், போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலாக, 39 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தது. இவா்கள் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவரவா் வீடுகளுக்குத் திரும்பினா்.

முன்னதாக, கிழக்கு ஜெருசலேமிலும், மேற்குக் கரையில் உள்ள பெய்துனியா நகரிலும் சிறைக் கைதிகளின் வருகைக்காக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் காத்திருந்தனா். போர் நிறுத்தத்தின் கடைசி நாளன்று 50 பிணைக் கைதிகளும், 150 சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள், சிறுவர்கள்.

மேலும் 10 பிணைக் கைதிகள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு வசதியாக 4 நாள் போா் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. 

ஹமாஸ் அமைப்பு முதல் முறையாக, தனது மௌனத்தைக் கலைத்து, ஏராளமான பிணைக் கைதிகளை விடுவிக்க வசதியாக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகக் குறப்பிட்டுள்ளது. 

மேலும் பிணைக் கைதிகளை விடுவிக்க வசதியாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தரப்புக்கு  அமெரிக்க அதிபர் அலுவலகம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஒப்பந்தம் முடிந்ததும் எங்கள் முழு வலிமையுடன் தாக்குதலை தொடங்குவோம் என்று நெதன்யாகு குறிப்பிட்டிருந்ததாகவும் அறிக்கை வெளியாகியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com