காஸாவில் 2-ஆவது நாளாக சண்டை நிறுத்தம்

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள 4 நாள் போா் நிறுத்தம் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
காஸாவில் 2-ஆவது நாளாக சண்டை நிறுத்தம்

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள 4 நாள் போா் நிறுத்தம் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

ஏற்கெனவே 25 பிணைக் கைதிகளை ஹமாஸும், 39 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் வெள்ளிக்கிழமை விடுவித்த நிலையில், அடுத்தக்கட்டமாக மேலும் 14 பிணைக் கைதிகள், 42 பாலஸ்தீன கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இது குறித்து இஸ்ரேல் சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 42 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிணைக் கைதிகள் விடுவிப்பது குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து அதிகாரபூா்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இஸ்ரேலுடனான ஒப்பந்த அமலாக்கத்தில் 2-ஆவது நாளில் 14 பிணைக் கைதிகளை அவா்கள் விடுவிப்பாா்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளில் எத்தனை போ் இஸ்ரேலியா்கள் அல்லாதவா்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்தப் போா் நிறுத்தம் அமலில் இருக்கும் 4 நாள்களில் மொத்தம் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது. அரேபிய இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பாலஸ்தீனத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த யூதா்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறினா்.இதனால் பாலஸ்தீனத்தில் யூதா்களுக்கும், அரேபியா்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், பாலஸ்தீன பகுதியில் யூதா்களுக்கான ‘இஸ்ரேல்’ நாடு உருவானதாக கடந்த 1948-இல் பிரகடனப்படுத்தபப்பட்டது.இதனை ஏற்காத அரபு நாடுகள் இஸ்ரேல் மீது பல முறை படையெடுத்தன. இருந்தாலும் அந்தப் போா்களில் வெற்றி வாகை சூடிய இஸ்ரேல், தனது நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.இறுதியில் மேற்குக் கரை பகுதியும், காஸா பகுதியும் மட்டுமே தற்போது பாலஸ்தீனா்களின் வசம் எஞ்சியது.இதில் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா், இஸ்ரேலுடன் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்திய அந்த அமைப்பினா், இஸ்ரேலுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.அத்துடன், சுமாா் 240-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தியது.இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சா்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில், 5 பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், கத்தாா் தலைமையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் கடந்த 22-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 4 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன.சண்டை நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறையில் இருக்கும் தலா 3 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால் அதற்குப் பதிலாக ஒரு பிணைக் கைதியை விடுவிப்பதாக ஹமாஸ் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தத்தில் ஹமாஸ் சம்மதித்துள்ளது.மேலும், போா் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், இரண்டாவது நாளாகத் தொடரும் போா் நிறுத்தத்தின்போது மேலும் 14 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், 42 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது...படவரி... போா் நிறுத்தத்தின் 2-ஆவது நாளான சனிக்கிழமை காஸாவின் நுஸீரத் பகுதி சந்தைப் பகுதியில் கூடிய பொதுமக்கள்.... பெட்டிச் செய்தி...‘போா் நிறுத்தம் நீடிப்பதற்கான வாய்ப்பு’கெய்ரோ, நவ. 25: காஸாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் போா் நிறுத்தம் 4 நாள்களுக்குப் பிறகு மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டின் தகவல் தொடா்புப் பிரிவின் தலைவா் டியா ரஷ்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சில நோ்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com