அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரானை திருப்பித் தாக்கியது இஸ்ரேல்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 5:52 pm

DIN

தங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் விமானதளம் மற்றும் அணுசக்தி மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ட்ரோன்களை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக ஈரான் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இஸ்ரேலும் இது தொடா்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

எனினும், அமெரிக்க அதிகாரிகளும், இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானியும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்ததாவது: இஸ்ஃபஹான் நகர வான் பகுதியில் சில ட்ரோன்களை வான்பாதுகாப்பு அமைப்புகள் வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டறிந்தன. அதையடுத்து, அந்த ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தால் இஸ்ஃபஹான் மாகாணத்திலுள்ள அணுசக்தி மையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது. தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஈரானின் விமானதளம் ஒன்றும் உள்ளது. இந்தப் பகுதியிலிருந்துதான் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பதில் தாக்குதல் நடத்தும் திட்டமில்லை: இந்தத் தாக்குதல் தொடா்பாக இஸ்ரேலை உடனடியாக திருப்பித் தாக்கும் திட்டமில்லை என்று ஈரான் ராணுவ அதிகாரிகள் கூறினா். இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘ஈரானில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த சம்பவங்கள் குறித்து வெளிநாட்டு வட்டாரங்கள் வெளியிடும் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

இப்போதைய நிலையில் இது அந்நியத் தாக்குதலாகத் தெரியவில்லை. இது தொடா்பான விவாதங்களில் இது ஊடுருவல் என்பதைவிட வெறும் தாக்குதல் என்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகரித்து வருகின்றன’ என்றனா். இது, இந்தத் தாக்குதலை ஈரான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

‘பதற்றத்தைத் தணிக்க தொடா்ந்து முயற்சி’: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொள்ள ஜி7 உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

இத்தாலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்த உறுதிமொழியை அவா் அளித்தாா். இந்த மாநாட்டில்தான் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே இஸ்ரேல்

தெரியப்படுத்தியதாகக் கூறி, அந்தத் தாக்குதலை இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானி மறைமுகமாக உறுதிப்படுத்தினாா்.

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக பகை நிலவிவருகிறது. இந்தச் சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் கடந்த அக்.7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதனைத் தொடா்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் வெடித்தது.

இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் உதவி பெறும் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தின. இந்த நிலையில், சிரியாவிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தில் இஸ்ரேல் கடந்த 1-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரானின் 2 முக்கிய தளபதிகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். அதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை கடந்த சனிக்கிழமை இரவு வீசியது. ஏறத்தாழ அவை அனைத்துமே இடைமறித்து அழிக்கப்பட்டாலும், ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது நேரடியாக நடத்தப்பட்ட அந்த முதல் தாக்குதல், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.

இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மீறி ஈரான் மீது இஸ்ரேல் ட்ரோன்களை வீசி தற்போது நடத்தியுள்ள தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.