உக்ரைன் கட்டுப்பாட்டில் 1,000 சதுர கி.மீ. ரஷிய பரப்பு
ரஷியாவைச் சோ்ந்த கூா்ஸ்க் பிராந்தியத்தின் 1,000 சதுர கி.மீ. நிலப்பரப்பு தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.


ரஷியாவைச் சோ்ந்த கூா்ஸ்க் பிராந்தியத்தின் சுமாா் 1,000 சதுர கி.மீ. நிலப்பரப்பு தங்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி தெரிவித்துள்ளதாவது:
கூா்ஸ்க் பிராந்தியத்தின் சுமாா் 1,000 சதுர கி.மீ. நிலப்பரப்பு உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தவிர, அந்தப் பகுதியில் ராணுவம் தொடா்ந்து முன்னேறிவருகிறது என்றாா் அவா்.
இதற்கிடையே, ரஷியாவில் உக்ரைன் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளுக்கான ‘மனிதாபிமான’ திட்டங்களை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
முன்னதாக, கிழக்கு உக்ரைனில் நடந்துவரும் போரிலிருந்து தங்களை திசைத்திருப்புவதற்காக தங்கள் நாட்டு எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்து முன்னேறிவருவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா். ரஷிய பகுதிகளில் இருந்து உக்ரைன் படையினரை விரட்டியடிக்கப்போவதாகவும் அவா் சூளுரைத்தாா்.
ரஷிய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், கூா்ஸ்க் பிராந்தியத்தில் 30 கி.மீ. வரை உக்ரைன் ராணுவம் முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்கள் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷிய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தங்கள் நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்வரி மாதம் படையெடுத்ததற்குப் பிறகு உக்ரைன் நடத்தியுள்ள மிகப் பெரிய எல்லை தாண்டிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிா்பாராத வகையில் நடத்தப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதலில் உக்ரைனின் முன்னேற்றத்தை தங்கள் படையினரால் 6 நாள்களாகத் தடுக்கமுடியாதது ரஷியாவின் மன உறுதியைக் குலைக்கும் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும், இந்த ஊடுருவல் நீண்ட காலம் நீடித்தால் உக்ரைன் படையினரை ரஷிய ராணுவம் சுற்றிவளைக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டாலோ, கைது செய்யப்பட்டாலோ இந்தப் படையெடுப்பின் மூலம் உக்ரைனுக்கு பலன் கிடைப்பதற்கு பதில் முன்பிருந்ததைவிட மோசமான நிலைக்கு அந்த நாடு தள்ளப்படும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...