காதலுக்காக பல்லாயிரம் மைல் பறக்கிறார்: டெய்லர் ஸ்விப்ட்டுக்கு எதிராகக் கடும் விமர்சனம்!

டெய்லர் ஸ்விப்டின் உலகப் பயணங்களால் மாசுபாடு ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் விவாதம் வைரலாகி வருகிறது. 
டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

டெய்லர் ஸ்விப்ட்- இசை ரசிகர்களுக்கு அறிமுகம் வேண்டியிருக்காத பெயர். டெய்லரின் காதலர், டிரெவிஸ் கெல்ஸ். அமெரிக்காவின் கொண்டாடப்படும் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர். இவர் பங்கேற்கும் போட்டிகளில் டெய்லர் ஸ்விப்டைக் காண முடியும்.

உலகப் புகழ்பெற்ற பாடகியான டெய்லரின் ‘எராஸ் டூர்’ இசை நிகழ்ச்சியின் 2024 ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி டோக்கியாவில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், டிரெவிஸ் கலந்துகொள்ளும் சூப்பர் பவுல் கால்பந்தாட்டப் போட்டியோ பிப். 11 அன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கிறது. 

டிரெவிஸ் உடன் டெய்லர் ஸ்விப்ட் | AP
டிரெவிஸ் உடன் டெய்லர் ஸ்விப்ட் | AP

பாடகியால் இரண்டு இடங்களிலும் கலந்துகொள்ள முடியுமா என்பதுதான் அவரது ரசிகர்களின் தற்போதைய பேச்சாக உள்ளது. இந்த வார இறுதியில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடக்கும் கிராம்மி விருது விழாவிலும் டெய்லர் கலந்துகொள்கிறார்.

‘அவர் கலந்து கொள்வதெல்லாம் இருக்கட்டும். இத்தனை முறை உலகைச் சுற்றுவதால் உண்டாகும் மாசு என்பது எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தெரியுமா?’ எனச் சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டெய்லர் ஸ்விப்ட் என்ன செய்ய போகிறார் என்பதே இப்போதைக்கான மில்லியன் டாலர் கேள்வி.

கிராம்மி விருது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இசைத் துறையின் உயரிய விருது நிகழ்வான கிராம்மி விருதுகள் விழா பிப். 4 நடைபெறவிருக்கிறது. 

ஆறு பிரிவுகளில் பரிந்துரையில் உள்ள டெய்லர் ஸ்விப்ட், கிராம்மி விருதுக்கு அதிக பிரிவுகளில் பரிந்துரையான கலைஞர்களில் ஒருவர்.

இந்தாண்டின் சிறந்த ஆல்பம் விருதினை அவர் பெற்றால் அதிக முறை அதனை வென்ற கலைஞர் என்கிற வரலாற்றையும் உருவாக்குவார்.

கிராம்மி விருதுக்குப் பிறகான அவரது பயணம் டோக்கியாவுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

டோக்கியோ இசை நிகழ்வு

பிப். 7 முதல் பிப். 10 வரை டோக்கியோவில் நான்கு நாள்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்த முதல் இசை நிகழ்ச்சியான எராஸ் டூர் நிகழ்வு, டோக்கியோவில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் கூடிய அரங்கில் நடக்கவிருக்கிறது.

டோக்கியோவில் இருந்து லாஸ் ஏஞ்சலீஸ் 12 மணி நேரம் பயணத் தூரம், 5400 மைல்கள். ஒன்பது நேர மண்டலங்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஸ்விப்ட், தனி விமானத்தைப் பயன்படுத்துவதால் இந்த நேரம் குறைய வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இசை நிகழ்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கக் கூடியது. நிறைவு நாளான 10-ம் தேதி இரவு அதிகபட்சம் 9.30 மணிக்குத்தான் நிகழ்வு முடிவடையும்.

டோக்கியோவில் இருந்து லாஸ் வேகாஸ் 17 மணி நேரத் தொலைவில் உள்ள நகரம். மறுநாள் டெய்லரின் காதலர் விளையாடும் ஆட்டத்தைப் பார்க்க அவர் டோக்கியோவில் நள்ளிரவில் கிளம்பினால் 11 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

நேர வேறுபாடு காரணமாக புறப்படும் நேரம் என்பது லாஸ் வேகாஸில் காலை 7 மணியாக இருக்கும். 

சான் பிரான்ஸிகோ அணிக்கும் டிரெவிஸின் அணியான கான்சாஸ் சிட்டி சீப் அணிக்குமான சூப்பர் பவுல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும். டெய்லரால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பார்க்க வர முடியுமா என்பது சந்தேகமே.

டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

பயணத் தொலைவு

இதே வாரத்தில் பிப். 16 மெல்பர்ன் இசை நிகழ்ச்சிக்கு டெய்லர் பறக்க வேண்டியிருக்கும். இது கிட்டத்தட்ட 8,100 மைல்கள்.

ஆக டெய்லர் ஸ்விப்ட் இந்த இரு வாரங்களில் பயணிக்கும் தொலைவு என்பது 19,400 மைல்கள். விமான பயணம் மட்டும். ஒரு ஒப்பீடுக்காக சொல்லப் போனால் உலகத்தின் ஒட்டுமொத்த சுற்றளவு 24,900 மைல்கள் மட்டுமே.

இந்தத் தொலைவுதான் இப்போது பிரச்னையாக மாறியிருக்கிறது.

கார்பன் மாசுபாட்டுக்கு தனி விமானம் காரணமா?

19,400 மைல்கள் தனி விமானத்தில் பயணிப்பதால் ஏற்படும் மாசு என்பது அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டில் சராசரியாக வெளியேற்றும் மாசின் அளவுக்கு சமமானது என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நிலையான வளங்களுக்கான துறையின் துணை இயக்குநர் கிரிகோரி கேலியன்.

ஸ்விப்ட் பொது விமான போக்குவரத்தைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கான சாத்தியம் இருக்குமா என்பது கேள்விக்குரியது. விமான நிலையத்தில் நெரிசலை எதிர்கொள்வது எந்த விமான சேவையகத்துக்கும் தலைவலிதான்.

டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

கேலியன், பிரபலங்கள் உருவாக்குகிற மாசுக்கு ஈடு கட்டும் வகையில் அவர்கள் தங்கள் பிரபலத்தின் மூலம் மக்களுக்கு சூழலியல் சார்ந்து விழிப்புணவு ஏற்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்.

டெய்லர் ஸ்விப்ட் மட்டுமில்ல தனி விமானங்களைப் பயன்படுத்தும் பலர் மீதும் இந்த குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. எலான் மஸ்க், பில் கேட்ஸ், லியனார்டோ டிகாப்ரியா, நாட்டின் தலைவர்கள் ஆகியோர் இந்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் மாசுபாட்டை வகுத்து கொள்ளலாம். இந்த சராசரி ஒரு நபருக்கு என சுருங்கும்போது பிரச்னைக்குரியதாகிறது.

ஈடு கட்டுதல்

கார்பனை நிகராக்குதல் என்பது இந்த மாசுக்கு ஈடாக வேறு சில முயற்சிகளையும் மேற்கொள்வதைக் குறிக்கும். உதாரணத்திற்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்திற்கு பங்களிப்பது என சில வழிகளும் சொல்லப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜூலியா ஸ்டெயின் இதுகுறித்து பேசும்போது, இந்த விவகாரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுவதாக தெரிவிக்கிறார். பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என்ற ரீதியில் பார்த்தால் வளம் மிகுந்த நபர்களுக்கும் குறைவான வருவாய் உடையவர்களுக்கும் இடையில் கடும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்பது அவர் கருத்து.

டிரெவிஸ் உடன் டெய்லர் ஸ்விப்ட் | AP
டிரெவிஸ் உடன் டெய்லர் ஸ்விப்ட் | AP

டெய்லர் ஸ்விப்டின் செய்தித் தொடர்பாளர், இந்த பயணங்களை ஈடுசெய்வதற்கு இரண்டு மடங்கு அதிகமாக டெய்லர் பங்களிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். அதற்கான விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ஆண்கள் அதிகமாக தனி விமான போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது டெய்லர் மீது மட்டும் குற்றம் சுமத்தப்படுவது அவர் மீதான வெறுப்பைக் காட்டுகிறது என  ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

வான்வழி பயணத்தால் உண்டாகும் மாசு வெளியேற்றம் என்பது மிகச் சிறியளவாக இருந்தபோதும் இதன் தாக்கம் உண்மையானதும்கூட. 

டெய்லர் இந்தப் பயணங்களைத் தவிர்க்க இசை மீதான அவரின் ‘காதல்’ இடம்கொடுக்காது, அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com