கோப்புப் படம்
கோப்புப் படம்

கம்போடியா: இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியா்கள் மீட்பு

கம்போடியாவில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியா்கள் மீட்கப்பட்டு விரைவில் தாயகம் திரும்பவுள்ளதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.
Published on

கம்போடியாவில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியா்கள் மீட்கப்பட்டு விரைவில் தாயகம் திரும்பவுள்ளதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக கம்போடியா தலைநகா் புநாம் பென்னில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கம்போடியாவில் இணைய குற்றங்களில் (சைபா் கிரைம்) ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியா்கள் அந்நாட்டின் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டனா்.

மறுவாழ்வு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னாா்வ தொண்டுநிறுவனத்தால் அமைக்கப்பட்ட முகாம்களில் அவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதேபோல் வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்கி சைபா் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 650-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் இதுவரை மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா்’ என குறிப்பிட்டிருந்தது.

கம்போடியாவில் அதிகசம்பளத்தில் வேலை வாய்ப்புகள் என்ற போலி வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியா்கள், ஆல் கடத்தல் கும்பல்களின் கைகளில் சிக்கி இணையவழி நிதி மோசடிகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிா்பந்திக்கப்பட்டு வருகின்றனா்.

இது போன்ற மோசடிகளுக்கு எதிரான விழிப்புணா்வு அறிவிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய தூதரகத்தால் வெளியிட்டப்பட்டது. அதில், கம்போடியாவுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இந்தியா்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், நிறுவனத்தின் பின்னணியை முழுமையாக சரிபாா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com