
துருக்கி படையினர் நடத்திய தாக்குதலில் சிரியா மற்றும் இராக்கில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது வடக்கு இராக்கைச் சேர்ந்த ஹகுர்க், காரா, அசோஸ் ஆகிய பகுதிகளில் துருக்கி தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் குறித்து குறிப்பிடவில்லை.
துருக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்கள் சிரியர் குர்திஸ் மக்கள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
துருக்கி மற்றும் அதன் அண்டை நாடுகளில் எல்லைகளில் குர்திஸ் மக்கள் பாதுகாப்புக் குழுவை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் 2020 முதல் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
குா்திஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பிரிவாகவே, சிரியர் குர்திஸ் மக்கள் பாதுகாப்புக் குழு செயல்படுவதாக துருக்கி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.