
வட கொரியாவில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து 5,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று(ஜூலை 29) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன எல்லையொட்டிய வட கொரியப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமையன்று(ஜூலை 27) பெய்த கனமழையால் அப்பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சுழ்ந்துள்ளது.
வட கொரியாவில் வனப் பகுதிகள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளதன் விளைவாய், வெயில் காலத்தில் அங்கு அவ்வப்போது திடீரென கனமழை கொட்டுவதும், அதன்காரணமாக விளைநிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும், வடிகால்நீர் பாய்வதற்கான உரிய கட்டமைப்புகள் இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள வட கொரியாவின் வடமேற்கு பகுதிகளான சின்அய்ஜு மற்றும் அய்ஜு நகர சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், கடற்படை மூலம் படகுகளும் அனுப்பட்டு அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேற்று(ஜூலை 28) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீட்புப் பணிகளில் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகப் பாராட்டியுள்ளார். மறுபுறம் வெள்ளத்தை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாக அதிகாரிகள் மீது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.