
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.
ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, யெ குவாங்ஃபூ, லீ கோங், லீ குவாங்சூ ஆகிய மூன்று வீரர்களை அனுப்பினர். இவர்கள் கடண்டஹ் 192 நாள்களாக விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3ஆம் தேதிகளில் விண்வெளியில் நடந்து சென்று சாதனை படைந்தனர். மேலும், உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தை தாக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 1.24 மணியளவில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர். வடசீனாவில் உள்ள டோங்ஃபெங் இறங்கும் தளத்தில் அவர்கள் வந்த ஷென்சோ-18 கலன் வெற்றிகரமாக தரையிறங்கியது.
192 நாள்கள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு வந்த மூவரும் நலமாக இருப்பதாகவும், ஷென்சோ-18 திட்டம் வெற்றிபெற்றதாகவும் சீன விண்வெளித் துறை அறிவித்துள்ளது.
ஷென்சோ-18 குழுத் தலைவர் சாதனை
ஷென்சோ-18 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்ற வீரர்களின் குழுத் தலைவர் யெ குவாங்ஃபூ, நீண்ட நாள்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் தங்கிய சீன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை ஷென்சோ-13 திட்டத்தின் உறுப்பினராக விண்வெளியில் அவர் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.