யூத வரலாற்றில் இருண்ட நாள்..! இஸ்ரேல் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் இரங்கல்

இஸ்ரேல் மீதான தாக்குதல் யூத வரலாற்றில் இருண்ட நாள்! -பிரிட்டன் பிரதமர் இரங்கல்
லெபனான் தாக்குதலில் பலியான இஸ்ரேல் ராணுவ வீரரின் இரங்கல் நிகழ்வில் குடும்பத்தினர்
லெபனான் தாக்குதலில் பலியான இஸ்ரேல் ராணுவ வீரரின் இரங்கல் நிகழ்வில் குடும்பத்தினர்கோப்புப்படம் | ஏபி
Published on
Updated on
2 min read

உலக வரைபடத்தில் காஸா இன்று உருக்குலைந்து பரிதாப நிலையில் காட்சியளிப்பதற்கு, கடந்தாண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் வித்திட்டது.

ஆம்... இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாள் இன்று(அக். 7) அனுசரிக்கப்படுகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போா் நடைபெற்றுவருகிறது. இதில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேல் ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஹூதிக்களும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு முடிவடைந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கெய்ர் ஸ்டார்மர் இன்று(அக். 7) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, யூதர்கள் வரலாற்றில் இருண்ட நாளாக அமைந்துவிட்டது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இந்நேரம் நினைவுகூருகிறோம்.

ஹமாஸ் படையினா் இஸ்ரேலில் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சிசுக்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலர் ஹமாஸை சேர்ந்த பயங்கரவாதிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதுடன், கொலையும் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சித்திரவதைகளும் அடுத்தடுத்த நாள்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தாங்கள் நேசித்த தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களை பார்த்து -ஒரு தந்தையாக, ஒரு துணைவனாக, ஒரு மகனாக, ஒரு சகோதரனாக துயருற்றதாக பிரிட்டன் பிரதமர் வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்டவர்களின் துக்கமும், வேதனையும், நம்முடையதும் கூட. எல்லைகளைக் கடந்து இது நம் குடும்பங்களிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஓராண்டு ஆகியும், இந்த துயரம் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளவர்களை மீட்பதில் உறுதியாக இருப்பதாகவும், அவர்களை மீட்டு அழைத்து வரும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதல்கள் நிகழ்ந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், யூத இன மக்களுடன் நாம் ஆதரவாக நிற்க வேண்டும். மத்திய கிழக்கில் நிகழும் சண்டையால் பொதுமக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இச்சூழலில், வெறுப்புடன் அவர்களை பார்க்கக் கூடாது.

காஸாவிலும் லெபனானிலும் போர்நிறுத்தம் உடனடியாக ஏற்பட வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும், காஸாவில் நிவாரணப் பொருள்கள் மற்றும் பிற உதவிகள் அனைத்தும் சென்றடைய ஏதுவாக காஸாவில் அனைத்து விதமான தளர்வுகளும் நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம். வேதனையும் துயரமுமுடைய இந்நாளில், அக். 7 தாக்குதல்களில் உயிரிழந்தோரை நினைவுகூருவதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதிலும், மத்திய கிழக்கில் சிறந்ததொரு எதிர்காலம் அமைந்திடவும் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com