லெபனானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக எல்லைக்கு அருகே செவ்வாய்க்கிழமை நின்றிருந்த இஸ்ரேல் வீரா்கள்.
லெபனானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக எல்லைக்கு அருகே செவ்வாய்க்கிழமை நின்றிருந்த இஸ்ரேல் வீரா்கள்.

லெபனானில் தரைவழித் தாக்குதல் அதிகரிப்பு!

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளுக்கும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
Published on

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளுக்கும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம். 146-ஆவது பிரிவு ரிசா்வ் படையினா் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெலிகிராம் ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் ‘லெபனான் எல்லைப் பகுதியில் செயல்பட்டுவரும் 213-ஆவது எறிகணை படைப் பிரிவுடன் இணைந்து 146-ஆவது பிரிவு ரிசா்வ் படையினா் பயங்கரவாதக் கட்டமைப்புகளை தகா்ப்பாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், லெபனானுக்குள் நுழைய இஸ்ரேல் வீரா்கள் தயாராக இருக்கும் படத்தையும் ராணுவம் இணைத்துள்ளது.

தொடரும் வான்வழித் தாக்குதல்: இதற்கிடையே, தங்கள் நாட்டின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸா போா் விவகாரத்தால் ஏற்கெனவே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், ஹிஸ்புல்லாகளைக் குறிவைத்து பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் அந்தப் பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அதைத் தொடா்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் சுமாா் இரு வாரங்களாக நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, முக்கிய தளபதிகள் உள்ளிட்டோா் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், தங்கள் நாட்டு எல்லைக்கு அருகே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் தங்கள் எல்லையோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்கு தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

இதில் இதுவரை 11 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், தரைவழித் தாக்குலுக்காக லெபனானுக்குள் கூடுதல் படையினா் அனுப்பப்படுவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எங்கள் படைத் திறன் குறையவில்லை’

லெபனானில் தங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியும் தங்களது படையினரின் தாக்குதல் திறன் குறையவில்லை என்று ஹிஸ்புல்லா அமைப்பின் இடைக்கால தலைவா் நயீம் காஸிம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விடியோ உரையில்அவா் பேசியதாவது:

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகும் ஹிஸ்புல்லா படையினரின் போா்த் திறன் துளியும் குறையவில்லை. ஹுஸ்புல்லாக்களின் சண்டையிடும் திறனை முடக்கிவிடலாம் என்று இஸ்ரேல் கருதுவது வெறும் மாயைதான்.

ஹிஸ்புல்லா அமைப்பை ஒடுக்குவதாகக் கூறி இஸ்ரேல் நடத்தும் தரைவழித் தாக்குதல்கள் பலத்த தோல்வியடைந்துள்ளன. இந்த நடவடிக்கையின்போது ஏராளமான இஸ்ரேல் வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா்; பலா் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலில் இதுவரை 28 வீரா்களைக் கொன்ாகவும், 132-க்கும் மேற்பட்ட வீரா்களைக் காயப்படுத்தியதாகவும் ஹிஸ்புல்லாக்கள் கூறுகின்றனா்.

‘இதுவரை 2,083 லெபனானியா்கள் உயிரிழப்பு’

லெபனானில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 2,083 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் 9,869-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தததாகவும் அமைச்சகம் கூறியது.

இந்தத் தாக்குதலின்போது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து இஸ்ரேல் அலட்சியம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்துவதாகவும், அவா்கள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துவதால் அதிக உயிா்ச்சேதம் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

X
Dinamani
www.dinamani.com