அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில், 14 வயதுடைய கோல்ட் கிரே நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 ஆசிரியர்கள் உள்பட 2 மாணவர்களும் உயிரிழந்தனர்; மேலும், 2 ஆசிரியர்களும் 7 மாணவர்களும் காயமடைந்தனர்.
கடந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பரிசாக, மகன் கோல்டுக்கு அரை தானியங்கி துப்பாக்கி ஒன்றை அளித்துள்ளார், அவரது தந்தை கொலின் கிரே. இந்த நிலையில்தான், அந்த துப்பாக்கியை வைத்து, சிறுவன் கோல்ட் தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையான 54 வயதுடைய கொலின் கிரே மீது தன்னிச்சையான படுகொலை, இரண்டாம் நிலை கொலை, குழந்தைகள் மீதான கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவையனைத்தும், தனது மகன் கோல்ட்டை ஆயுதம் வைத்திருக்க, கொலின் அனுமதித்ததில் இருந்து உருவானதாகக் கூறுகின்றனர். சிறுவனாக இருந்தாலும், தாக்குதல் நடத்தியவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகளுக்குள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
மேலும், இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை சோகமான நிகழ்வு என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்ப், "ஒரு நோய்வாய்ப்பட்ட, முட்டாள்தனமான அசுரனால், நேசத்துக்குரிய குழந்தைகள் மிக விரைவில் அழைத்துச் செல்லப்பட்டனர்" என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சியினரை ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பொது அறிவு துப்பாக்கி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற அழைப்பு விடுத்துள்ளார்.